கோச்செங்கட் சோழன்

நிலவளமும் நீர்வளமும் உடையது சோழ நாடு. இதனைப் பன்னெடுங் காலங்களுக்கு முன்பிருந்தimage சோழர் என்னும் இனத்தினர் ஆண்டு வந்தனர். சோழர்களுள் வீரத்தால் சிறந்து விளங்கினவர்கள் பலர்; தெய்வத் தன்மையில் சிறந்து விளங்கினவர்கள் பலர்.

தெய்வத் தன்மையில் சிறந்து விளங்கினவர்களில் கோச்செங்கட் சோழன் என்பவன் காலத்தால் பழமையானவன். இவனைச் செங்கணான் என்றும் சான்றோர் சொல்லுவர்.

இவனுடைய வரலாறு சேக்கிழார் பாடிய பெரிய புராணத்தில் பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது.

சோழ நாட்டில், காவிரியாற்றங் கரையில் சந்திர தீர்த்தம் என்றோர் பகுதி யுண்டு; சந்திர தீர்த்தத்தின் பக்கத்தே மரங்களடர்ந்த காடு ஒன்று இருந்தது. பலவகையான மரங்கள் ஓங்கி வளர்ந்தது, பகலவன் ஒளியே தெரியாத வண்ணம் அடர்ந்து காணப்பட்டது.

அக் காட்டில் பலவகையான விலங்கினங்கள் வாழ்ந்து வந்தன. பலவகைப்பட்ட விலங்கினங்களில் அழகிய வெள்ளானை ஒன்றும் இருந்தது.

அடர்ந்த மரங்களின் நடுவே வெண்ணாவல் மரமொன்று காட்சியளித்தது. ஒரு சமயம், அவ்வெண்ணாவல் மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது.

அதனைக் கண்ட வெள்ளானைக்குப் பக்தி ஏற்பட்டது; நாள்தோறும் தனது துதிக்கையில் நீரை முகந்து கொண்டு வந்து சிவலிங்கத்தை நீராட்டும்; கொத்துக் கொத்தாகப் பூங்கொத்துகளைக் கொண்டு வந்து சாத்தும். இவ்வாறாக வெள்ளானை சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது.

வெள்ளானை சிவலிங்கத்தை வழிபட்டு வந்த காரணத்தால், அவ்வூருக்குத் திருவானைக்கா என்னும் பெயர் உண்டாயிற்று. வெள்ளானையைப் போலவே ஞான உணர்ச்சியுடைய சிலந்தி ஒன்னும் அக் காட்டில் இருந்தது. அச் சிலந்தியும் சிவலிங்கத்தைக் கண்டு பக்தி கொண்டது; யானையைப் போல் நீரும் பூவும் கொண்டுவந்து அதனால் வழிபட முடியாவிட்டாலும், தன்னாலான ஒரு தொண்டினை அது செய்தது.

சிவலிங்கத்தின் மேல் சருகுகள் உதிராமல் இருப்பதற்காகவும், பறவை முதலானவை எச்சமிடாமல் இருப்பதற்காகவும் தனது வாய் நூலால் விதானம் என்னும் வலையொன்று பின்னியது. மறுநாள் காலையில் சிவலிங்கத்தை நீராட்டி, மலர் சாத்தி வழிபடுவதற்காகத் தண்ணீரையும் கொத்துக் கொத்தாகப் பூக்களையும் கொண்டு வந்த வெள்ளானையின் கண்களுக்குச் சிலந்தி பின்னிய வலை தென்பட்டது.

சிவலிங்கத்தின் மேல் அந்த வலையிருப்பது வெள்ளானைக்குப் பொருத்தமாகப் படவில்லை; மேலும், அவ் வலை அசுத்தமாக இருப்பதாகவும் அதற்குத் தோன்றியது.

அதனால் சிலந்தி கட்டிய வலையைத் தனது துதிக்கையால் அழித்தது. பின்னர், தான் கொண்டு வந்த நீரால் சிவலிங்கத்தை நீராட்டி, மலர் சாத்தி வழிபட்டுச் சென்று விட்டது.

வெள்ளானை சென்றபின், சிலந்தி அவ்விடம் வந்தது; தான் அரும்பாடுபட்டு இறைவனுக்காகப் பின்னி வைத்திருந்த வலை அழிக்கப்பட்டிருப்பதைக் கண்டது. யானையினது துதிக்கை இயல்பாகப் பட்டமையால்தான், அவ் வலை அழிந்து விட்டது என்று சிலந்தி எண்ணியது.

மறுபடியும் அரும்பாடுபட்டுத் தனது வாய் நூலால், அழகான வலையொன்றைச் சிவலிங்கத்திற்குமேல் பின்னியது; பின்னியதும் அவ் விடத்தை விட்டு அகலாமல் அங்கேயே இருந்தது.

ஒவ்வொரு நாளும் வருவதைப் போலவே, வெள்ளானை அன்றும் சிவலிங்கத்தை வழிபடுவதற்காக வந்தது; மறுபடியும் சிவலிங்கத்தின்மேல் வலை பின்னப்பட்டிருப்பதை கண்டதும், முதல் நாளைப் போலவே தனது துதிக்கையால் சிதைத்தது.

வெள்ளானையினது செயலைக் கண்ட சிலந்திக்குச் சினம் பொங்கியது. அப்பொழுதுதான், தான் பின்னிய வலையை வேண்டுமென்றே யானை சிதைக்கிறதென்று சிலந்தி புரிந்து கொண்டது.

சினத்தோடு யானையின் துதிக்கையில் புகுந்து கடிக்கத் தொடங்கியது. வலி பொருக்க மாட்டாத வெள்ளானை, துதிக்கையைத் தரையில் மோதி மோதிக் கீழே விழுந்து துடித்தது.

நீண்ட நேரத்திற்குப் பின்னர் வெள்ளானை இறந்தது; துதிக்கையைத் தரையில் அடித்ததால் சிலந்தியும் அவ்விடத்திலேயே இறந்துவிட்டது. தம்மை உண்மை அன்போடு வழிபட்டு வந்த வெள்ளானைக்குச் சிவபெருமான் அருள் செய்தார். வெள்ளானை சிவலோகம் அடைந்தது. சிலந்திக்கும் பின்வருமாறு சிவபெருமான் அருள் செய்தார்.

அக் காலத்தே சுபதேவன் என்பவன் சோழ நாட்டை அரசாட்சி செய்து வந்தான். அழகும் கற்பும் நிறைந்த கமலவதி என்பவள், சுபதேவனுக்கு மனைவியாக அமைந்தாள். இருவரும் நெடுநாளாகப் பிள்ளையில்லாமல் வருந்தினர். அதனால், தில்லைக்குச் சென்று கூத்தப் பெருமானை வழிபட்டு வந்தனர்; கூத்தப் பெருமானிடம் பிள்ளை வரம் வேண்டி நின்றனர்.

கூத்தப் பெருமானும் சுபதேவனுக்கும் கமலவதிக்கும் அருள் செய்தார். யானையோடு போரிட்டு மடிந்த சிலந்தியையே அவர்கள் இருவருக்கும் மகனாகப் பிறக்குமாறு அருள் புரிந்தார். சிலந்தியும் கமலவதியின் வயிற்றில் பிள்ளையாய் வந்தடைந்தது.

கமலவதியின் வயிற்றில் மகனாக வந்தடைந்த சிலந்தி, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது; ஒன்பது மாதங்கள் கடந்தன; பத்தாவது மாதம் பிறந்தது; கமலவதிக்குப் பிரசவ காலம் நெருங்கியது.

அப்பொழுது அரசனது கட்டளையால் அங்கு வந்திருந்த சோதிடர்கள், இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிள்ளை பிறந்தால் நல்லதென்றும், அப்பிள்ளை உலகம் முழுவதையும் அரசாள்வான் என்றும் கூறினர். கமலவதிக்கு தனக்குப் பிறக்கப் போகும் ஆண்மகன் உலகம் முழுவதையும் அரசாள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. அதனால், தனக்குப் பிறக்கப் போகும் பிள்ளை, இன்னும் ஒரு நாழிகை கழித்துப் பிறக்க வேண்டுமென்று விரும்பினாள்.

அதனால், தன்னைத் தலைகீழாகக் கட்டுமாறு வேண்டிக் கொண்டாள். அங்கிருந்தவர்களும் அவ்வாறே கமலவதியைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விட்டனர்; ஒரு நாழிகை சென்றதும் அவிழ்த்து விட்டார்கள். உடனே கமலவதியின் வயிற்றிலிருந்து அழகான ஆண்குழந்தையொன்று பிறந்தது.

காலங்கடந்து பிறந்தமையால் அக் குழந்தையின் கண்கள் சிவந்திருந்தன. அதனைக் கண்ட கமலவதி "என் கோச்செங்கண்ணனோ" என்று சொல்லினாள். சிறிது நேரத்தில் இறந்து போனாள்.

பிறந்த பொழுதே தாயை இழந்த கோச்செங்கண்ணனைச் சுபதேவன் அன்புடன் வளர்த்து வந்தான். அவனைக் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்குமாறு செய்தான். அரசனுக்கு வேண்டிய எல்லா வித்தைகளிலும் மேம்பட்டு விளங்கிய கோச்செங்கட் சோழன், அரசாளும் பருவத்தை அடைந்தான்.

தன் மகன் அரசாளும் பருவத்தை அடைந்து விட்டதைக் கண்ட சுபதேவன், அவனுக்கு நல்ல நாளில் முடிசூட்டிவிட்டுத் தவம் செய்யத் தலைப்பட்டான். பல்லாண்டுகள் தவன் செய்த பின்னர்ச் சிவலோகம் அடைந்தான்.

தந்தைக்குப் பின்னர் அரசாளும் உரிமையைப் பெற்ற கோச்செங்கட் சோழன், குடிமக்கள் போற்றும் படியாக அரசாட்சி செய்தான். நீதியும் நேர்மையும் அவனது நாட்டில் நிலவின.

சிவபெருமானிடத்துள்ள பக்தியால், பல ஊர்களில் சிவன் கோயில்கள் பல கட்டுவித்தான். சிவபெருமான் திருவருளால் தனது முற்பிறப்பைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்டான்.

முற்பிறவியில், சிலந்தியாக இருந்து வழிபட்ட திருவானைக் காவிற்குச் சென்றான். அங்கே வெண்ணாவல் மரமும் சிவலிங்கமும் அப்படியே இருப்பதைப் பார்த்த கோச்செங்கட் சோழன் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தான். தனக்கு அருள் புரிந்த சிவபெருமானுக்கு, வெண்ணாவல் மரத்தோடு அழகிய கோயிலொன்று கட்டுவித்தான்.

நாள்தோறும் பூசைகள் தவறாமல் நடப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் பல செய்தான். நிலங்களை மானியமாக விட்டான். அதனுடன் நில்லாமல், சோழ நாட்டிலுள்ள ஊர்களில் சிவன் கோயில்கள் பல கட்டுமாறு ஏவினான். அக் கோயில்களிலெல்லாம் பூசைகள் தவறாமல் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்தான்.

அந்தணர்களுக்குத் திருமாளிகைகள் கட்டுவித்தான். கோச்செங்கட் சோழனைப் பற்றிய வரலாறு மேலும் கிடைத்துள்ளது.

தெய்வ பக்தியில் சிறந்து விளங்கிய கோச்செங்கட் சோழன், வீரத்திலும் மாற்றார் போற்றும்படியாக மேம்பட்டுப் பொலிவெய்தினான். தன் கீழ் வாழும் குடிமக்களுக்கு உட்பகையாலும், விலங்கினங்களாலும், பகைவராலும் தீங்கு வராதபடி காத்து வந்தான்.

அவன் காலத்தில் சேரமான் கணைக்கால் இரும்பொறை என்பவன் சேர நாட்டை அரசாண்டு வந்தான். கோச்செங்கட் சோழனுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் எக் காரணத்தாலோ பகைமை ஏற்பட்டது.

இருவரும் சமயத்தை எதிர்நோக்கி யிருந்தனர். கோச்செங்கட் சோழன் பெரும்படை யொன்றைத் திரட்டிக் கொண்டு, சேர நாட்டை நோக்கிச் சென்றான். அவன் படையுடன் வருவதை ஒற்றர்களால், கணைக்கால் இரும்பொறை அறிந்தான். அவனும் தனது படையைத் திரட்டிக் கொண்டு, கோச்செங்கட் சோழன் வழியிலேயே எதிர்த்து முறியடிப்பதற்காகச் சென்றான்.

சேரனது படையும் சோழனது படையும் கழுமலம் என்னும் ஊரில் சந்தித்தது. கழுமலம் என்னும் ஊர் சேரனுக்குரியது. அவ்வூரில் இருபெரும் படைக்கும் போர் மூண்டது.

சேரப் படையும் சோழப் படையும் வீரத்தோடு போரிட்டது. எனினும், சோழனது படை முன், சேரனது படை போர் புரிய முடியாமல் திணறியது. இறுதியில் கோச்செங்கட் சோழன், சேரனது படையை வென்று கழுமலம் என்னுமூரைக் கைப்பற்றிக் கொண்டான். அதோடு, சேரமான் கணைக்கால் இரும்பொறையும் கைது செய்யப்பட்டான்.

சேரமான் கணைக்கால் இரும்பொறையின் உயிர் நண்பராகவும், அவைக்களப் புலவராகவும் பொய்கையார் என்னும் புலவர் பெருமான் விளங்கினார். அவர், தம் அரசன் போரிலே தோல்வியடைந்து, சோழனால் சிறை செய்யப்பட்டிருப்பதை அறிந்து வருந்தினார்.

எப்படியாவது தம்மரசனை விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்பினார். அவர், சேரனுக்கும் சோழனுக்கும் நடந்த போரினை நேரிலே கண்டவர்; சோழனது வீரத்தையும் , சோழர் படையின் வலிமையையும் நன்கு உணர்ந்திருந்தார்.

அதனால், கோச்செங்கட் சோழனது வெற்றியைப் பாராட்டிக் களவழி நாற்பது என்னும் நூல் ஒன்றை இயற்றினார். அந் நூலையே, கோச்செங்கட் சோழனுக்குத் திறைப் பொருளாகக் கொடுத்துச் சேர வேந்தனை விடுதலை செய்து கொண்டு நாடு மீண்டார்.

வெற்றி வீரனாகத் திரும்பிய கோச்செங்கட் சோழன் , மறுபடியும் சிவத்தொண்டில் ஈடுபட்டான். பல ஊர்களில் சிவன் கோயில்கள் கட்டுவித்தான். அவனால் கட்டப்பட்ட பெருங் கோயில்கள் மட்டும் மொத்தம் மொத்தம் எழுபத்தெட்டாகும். அவனது சிவத்தொண்டினைப் பாராட்டிப் பிற்காலத்து அடியார்கள் பாடியுள்ளனர்.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)