அவ்வையார்

தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் imageகாண்கிறோம். சங்க காலத்தில் வாழ்ந்து, அதியமான் நெடுமான் அஞ்சியோடு நெருங்கிய நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து பாடிய அவ்வையார் மற்ற அவ்வையார்களைவிடக் காலத்தால் முந்தியவர். இவர் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் எட்டுத்தொகை நூல்களில் 59 பாடல்களை இயற்றியவர். இவர் அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி என்னும் பல அரசர்களைப்பற்றிப் பாடிய 31 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

சங்க காலத்துப் புலவராகிய அவ்வையார்க்குப் பின்னர், நாயன்மார்கள் காலத்தில் (கி.பி. எட்டாம் நூற்றாண்டில்) அவ்வையார் ஒருவர் மிகுந்த சிவ பக்தியோடு வாழ்ந்ததாகவும் சிலர் கருதுகின்றனர்.

அடுத்து, மற்றுமொரு அவ்வையார் கம்பர் ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் வாழ்ந்த காலத்தில் (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர். இவர், அக்காலத்துச் சோழ அரசனுடைய அவைக்களத்திலும், சிறு பகுதிகளை ஆண்ட தலைவர்களோடும் ஏழை எளியவர்களோடும் பழகியவர். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைச் சிறுவர்கள் கற்பதற்கு ஏற்ற எளிய நடையில் இயற்றியவர்.

அடுத்து, ஞானக்குறள் என்ற ஒரு நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூலில், உயிரின் தன்மையையும் யோகநெறியையும் பற்றிய ஆழ்ந்த கருத்துகள் காணப்படுகின்றன. விநாயகர் அகவல் என்ற பக்திச் சுவை ததும்பும் நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் ஞானக்குறள் எழுதிய அவ்வையார் அல்லாமல் வேறொருவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆகவே, தமிழ் இலக்கிய வரலாற்றில் பல அவ்வையார்கள் காணப்பட்டாலும், சங்க காலத்து அவ்வையார் காலத்தால் முந்தியவர். அவர் பாடல்கள்தான் புறநானூற்றில் அடங்கி உள்ளன. அவ்வையார் என்ற பெயர் கொண்ட புலவர்களின் வரலாறு தனியே ஆய்வு செய்தற்குரியது.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)