உக்கிரப் பெருவழுதி

சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த நாடு பாண்டிய நாடு. அதனை ஆண்ட அரசர்கள் தமிழ்ப் பற்று மிக்கவர்கள். அவர்களுள் உக்கிரப் பெருவழுதி என்பவனும் ஒருவனாவான்.image

உக்கிரப் பெருவழுதி மூன்றாம் தமிழ்ச் சங்கத்தைக் காத்தவன். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூறு என்னும் நூலைத் தொகுத்து அளித்தவன்.

திருவள்ளுவர் தனது திருக்குறளை அரங்கேற்றிய அவைக்குத் தலைமை வகித்த தனிப்பெருமையுடையவன். அழகு தமிழில் பாட்டியற்றும் ஆற்றல் பெற்றவன்.

தமிழ்ப் புலவர் பெருமக்களோடு இருந்து தமிழை வளர்த்தவன். அவர்கள் போற்ற வாழ்ந்தவன்; நற்பண்புகள் உடையவன்.

இத்தகைய உக்கிரப் பெருவழுதிக்கு முன்னர்த் தமிழ்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய அரசர்களிடையே ஒற்றுமை இருந்ததில்லை. பகையும் பொறாமையும் நிலைப்பெற்றிருந்தன. இவற்றால் அவர்கள் தங்களுக்குள்ளேயே இடைவிடாது போர் புரிந்து வந்தனர். அதனால் தமிழகத்தின் வாழ்வும் வனப்பும் புகழும் குன்றின.

தமிழ் அரசர்களாகிய தம் முன்னோர் செய்த தவற்றை உணர்ந்தான் உக்கிரப் பெருவழுதி. உடனே அதனை நீக்க முடிவு செய்தான்.

உக்கிரப் பெருவழுதி பாண்டி நாட்டை ஆட்சி செய்து வந்த காலத்தில், சேர நாட்டை மாரிவெண்கோவும், சோழ நாட்டைப் பெருநற்கிள்ளியும் ஆண்டு வந்தனர். வழுதி இவ்விருவரிடமும் பகை என்பதே இல்லாமல் பெருநட்புடையவனாய் வாழத் தொடங்கினான்.

இவ்வாறு மூன்று அரசர்களும் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்ட புலவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கோர் அளவில்லை.

ஒரு நாள் ஒளவையார், வழுதியும் கிள்ளியும் வெண்கோவும் நட்புக் கொண்டு ஒருசேர வீற்றிருந்த காட்சியைக் கண்டு களிப்புற்றார். "இந்த ஒற்றுமை இன்று போல என்றும் இருக்காதா?" என்று எண்ணினார். மூவரும் ஒற்றுமையோடு நிலைபெற்று வாழ்வதற்கான மூதுரைகள் சிலவற்றையும் கூறி மகிழ்ந்தார். புறநானூறு 367, இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது ஒளவையார் பாடப்பட்ட பாடல்.

இவ்வாறு பகை என்பதே இல்லாமல், இரு பெருவேந்தரோடும் நட்பு கொண்டும் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த உக்கிரப் பெருவழுதிக்கு, அவனை அறியாமலேயே அவன் நாட்டில் சிறிய பகைவனொருவன் தோன்றிவிட்டான்.

யார் அப்பகைவன்? அவன் ஒரு பெரு வீரன். ஊக்கமும் உரனும் ஒருங்கேயுடையவன். கல்வியறிவு இல்லாதவன். தீய நண்பர்களை மிகுதியாகப் பெற்றவன். முரடன். வேங்கைப் புலியைப் போன்றவன். வேங்கை மார்பன் என்ற பெயர் உடையவன்.

வேங்கை மார்பன், இன்று காளையார் கோவில் என வழங்கும் கானப்பேர் என்னும் ஊரை ஆண்டு வந்த ஒரு சிற்றரசனாவான். இக்கானப்பேர் பாண்டி நாட்டின் நடுவே அமைந்த ஓர் ஊராகும்.

இவன், இவ்வூரைச் சுற்றிப் பகைவரால்கூடப் பற்றிக்கொள்ள முடியாத வண்ணம் கோட்டையொன்று கட்டி, அதில் வாழ்ந்து வந்தான்.

அக்கோட்டை நிலத்தின் எல்லையையும் கடந்து விட்டதோ என்று மதிக்கத்தக்க அளவில் ஆழமாகத் தோண்டப் பெற்ற அகழியையும், வானத்தின் எல்லையையும் கடந்து விட்டதோ என்று கருதத்தக்க அளவில் உயரமாக எடுக்கப் பெற்ற மதிலையும் உடையது.

ஒளியும் உள்ளே நுழைய முடியாதபடி அடர்ந்து நெருங்கிய மரங்கள் செறிந்த காவற் காட்டையும், சிற்றரண்கள் பலவற்றையும் கொண்டது.

இத்தகைய கோட்டை யொன்றினைத் தன் நாட்டில் பகைவனொருவன் கட்டி வாழ்வதை அறிந்தான் வழுதி. அவ்வாறு அவன் வாழ்வதை தன் ஆட்சிக்கே இழுக்காகும் என்று கருதினான். அதனால் அவனை நேரில் அழைத்து அறிவுரை கூறித் திருத்தலாம் என்று கருதினான். உடனே, ஒர் ஆளை அனுப்பி வேங்கை மார்பனை அழைத்து வரும்படி ஆணையிட்டான்.

வேங்கை மார்பன் வழுதியின் அரண்மனைக்கு வந்தான். வழுதி அவனை வரவேற்றான். இருக்க இடமளித்தான். அவனிடம் எடுத்துரைக்க வேண்டியவற்றை எல்லாம் நயமாக எடுத்துரைத்தான். வேங்கை மார்பன் வழுதி கூறியவற்றையெல்லாம் பேசாது கேட்டுக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் விருப்பம் எள்ளளவும் இல்லை. வெறுப்பே குடி கொண்டிருந்தது. அவனது உள்ளம் வழுதியின்மீது பகை கொண்டதே ஒழிய, அவன் கூறிய நன்மொழிகளைக் கொள்ளவில்லை.

அதனால், பாண்டியனிடம் விடை பெற்று ஊரை அடைந்தான். அடைந்ததும், தன் நண்பர்களை அழைத்தான். அவர்கள் யாவரும் கெட்டவர்கள். தீய குணம் உடையவர்கள். அவர்களிடம், உக்கிரப் பெருவழுதி கூறியவற்றைக் கூறி, மனம்விட்டுக் கலந்து பேசினான். அவர்கள் பாண்டியன் சொன்னதாக இவன் சொல்லியவற்றைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். அவனுக்குப் பாண்டியன் மீது சினம் பெருகி வழியும் அளவுக்கான ஆகாத சொற்களைக் கூறி, அவனைச் சினங்கொள்ளச் செய்தார்கள்.

சினமுற்ற வேங்கை மார்பன் செந்தமிழ் பாண்டியன் வழுதியை வெறுத்தான். அவனை எவ்வாறேனும் வெல்ல வேண்டும் என்று எண்ணி படை திரட்டினான். நண்பர்களைத் துணைக்கழைத்துக் கொண்டான். மாநகர் மதுரை நோக்கிப் புறப்பட்டான். செல்லும் வழியில் இருந்த சிற்றூர்களைச் சீரழித்துப் பொருள்களைக் கொள்ளையடித்தான். வயல் வரப்புகளைப் பாழ் செய்து ஏழை எளியவர்களைத் துன்புறுத்தினான்.

பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இவற்றை அறிந்து சினமுற்றான். படைகளைத் திரட்டி வேங்கை மார்பனோடு போர் செய்யச் சிங்கமெனப் புறப்பட்டான். வெள்ளம்போல் திரண்டு வந்த பாண்டியனுடைய வீரஞ் செறிந்த படைக் கூட்டத்தைக் கண்டு வேங்கை மார்பன் அஞ்சி ஓடினான். பாண்டிய அரசன் வழுதி, வேங்கை மார்பனையும் அவனது படையினையும் விடாது துரத்தினான். வேங்கை மார்பனின் நாட்டையும் கைப்பற்றினான். வீரன் வேங்கை மார்பன் எவ்வளவோ முயன்று பார்த்தான். தன் நாட்டில் சிறிதளவேனும் காத்து விடவேண்டும் என்று தவியாய் தவித்தான். இறுதியில் துணைக்கு வந்த சூரத் தோழர்களுடன் ஓட்டம் பிடித்தான். வேற்றூர் சென்று சேர்ந்து, பிறருக்குப் பயந்து, கரந்துறைந்து வாழலானான்.

நாட்கள் பல சென்றன. நாட்டை இழந்த வேங்கை மார்பனால் வறிதே இருக்க முடியவில்லை. அவற்றை எவ்வாறேனும் கைப்பற்றி விடவேண்டும் என்று இரவு பகலாக அரும் பெரும் முயற்சிகள் எடுத்துத் தோல்வியுற்றான்.

' உக்கிரப் பெருவழுதி பேரரசன் வழி
வந்தவன்; பெரும் படை துணையுடையவன்.
அவனை வெல்வதோ, அவன் கைப்பற்றிய
எயிலை மீட்பதோ எள்ளளவும் இயலாது '

என உணர்ந்தான், முடிவில்

' காய்ச்சிய இரும்பிலே தெளிக்கப்பட்ட நீரை அந்த இரும்பு உண்டுவிடும். அப்படி உண்டுவிட்ட நீரைக்கூட ஒரு வேளை மீட்டாலும் மீட்டுவிடலாம். ஆனால் உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிய எனது கானப் பேரெயிலை உறுதியாக மீட்கவே முடியாது. நான் கெட்டவர்கள் பேச்சைக் கேட்டு கெட்டழிந்தேன் '

என்று உணர்ந்து கூறி மிகு துயர் உற்றான். உளம் வருந்தி வாழ்ந்தான். உக்கிரப் பெருவழுதியின் பேராண்மை மிக்க இவ்வெற்றிச் செயல் கண்ட மக்கள், அவனை 'கானப் பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்று பாராட்டினர்.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)