சிபிச்சோழன்: Revision

'சோணாடு சோறுடைத்து' எனப் புகழப்படும் சோழ நாட்டைப் பன்னெடுங் காலங்களுக்கு முன்னிருந்தimage சோழர்கள் ஆண்டு வந்தனர். புலிக்கொடியும் ஆத்தி மாலையுமுடைய சோழர்கள் வீரத்தில் சிறந்து விளங்கியதோடு, உயிர்களிடத்தில் கருணை செலுத்துவதிலும் மேம்பட்டு விளங்கினர்.

இன்னாரிடத்தில்தான் கருணை காட்ட வேண்டும். இன்னாரிடத்தில் கருணை காட்டக் கூடாது என்ற வேறுபாடு சிறிதும் இல்லாமல், உயர்திணைப் பொருள்களிடத்தில் அன்பு செலுத்துவதைப் போலவே அஃறிணை உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தி வந்தனர். அதனால், குடி மக்களால் தெய்வமாக மதிக்கப்பட்டனர்.

இத்தகைய பெருமை மிக்க சோழர் குடியில், சிபி என்னும் சோழன் ஒருவன் தோன்றினான். அவன் அரசனுக்குரிய எல்லா வித்தைகளிலும் தேர்ந்திருந்தான். அகன்ற நெற்றியும், விரிந்த மார்பும், முழங் காலளவு தொங்கும் கையும், நல்ல உயரமும் பெற்றிருந்த சோழனைக் கண்டு பகைவர் அஞ்சினர். ஆனால், அவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்த உயிரினங்களெல்லாம், அவனைக் கருணையின் வடிவமாகவே கொண்டு போற்றின.

தன்னுயிரைப் போலவே மன்னுயிரையும் கருதிய சிபியின் வாழ்க்கையில், எக்காலத்தும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனுநீதிச் சோழனது வழியில் வந்தவன் என்பதைக் காட்டிக் கொள்ளும்படியான சமயமொன்னு நேர்ந்தது.

ஒரு நாள் நடுபகல் வேளை; காலமோ கோடைக் காலம்; கதிரவன் காய்ந்துக் கொண்டிருந்தான். வெப்பம் தாங்க முடியவில்லை. சிபிச் சோழன் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள காற்றை நாடினான். அரண்மனைக்குப் பின்புறத்தே அழகான சோலையொன்றிருந்தது. அச்சோலை அடர்ந்த மரங்களால் சூழப்பட்டுச் சிறிதும் வெம்மை என்பதே தெரியாத தெரியாத வண்ணம் குளிர்ச்சியுடன் விளங்கியது.

சிபிச் சோழன் அந்தச் சோலைக்குச் சென்றான்; சோலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் அமர்ந்தான். குளிர்ந்த காற்றுப் பட்டவுடன் சிபிச் சோழன் சுற்றும் முற்றும் பார்த்தான். கண்களைச் சிறிது மூடியவாறே தன்னை மறந்த நிலையில் சிறிது நேரம் இருந்தான்.

தன்னை மறந்திருந்த சிபிச் சோழன் மடிமீது புறாவொன்று பறந்து வந்து விழுந்தது. ஏதோ ஒரு பொருள் தன் மடி மீது விழுந்ததைக் கண்டதும், சிபிச் சோழன் தன்னுணர்வு பெற்றான்.

மடியில் விழுந்தது ஓர் அழகிய புறாவே என்பதை அறிந்ததும், அவனது உள்ளத்தில் அருள் சுரந்தது. பார்ப்பதற்கு அழகுடன் விளங்கிய அப் புறாவை மெல்லத் தடவிக் கொடுத்துத் தனது அன்பினை வெளிப்படுத்தினான்.

ஆனால், அந்தப் புறாவோ குளிருக்கு ஆற்றாமல் நடுங்குவது போல நடுங்கிக் கொண்டிருந்தது; மேலும் அப் புறா மறைந்திருக்கவே விரும்புவதுப் போலத் தோன்றியது.

எதனையோ கண்டு அஞ்சித்தான் அந்தப் புறா அப்படி நடுங்கிக் கொண்டிருக்கிறது என்பதை சிபிச் சோழன் புரிந்துகொண்டான். அதனுடைய அச்சத்தைப் போக்கும் வகையில் அன்போடு தடவிக் கொடுத்தான்; அதனுடைய நடுக்கத்திற்கு யாது காரணம் இருக்கும் என்பதைச் சிந்தித்தவனாய்ச் சுற்றும் முற்றும் பார்த்தான்.

அப்பொழுது, சிறிது தொலைவிலே, பருந்தொன்று தன் மடியில் இருக்கும் புறாவையே உற்று நோக்கிக் கொண்டிருப்பதைச் சோழன் கண்டான். அப்பொழுதுதான் சோழனுக்குப் புறாவின் அச்சத்திற்குரிய காரணம் விளங்கியது. பருந்தினால் துரத்தப்பட்டுதான், அப் புறா தன்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளது என்பதைச் சிபிச் சோழன் புரிந்து கொண்டான்.

இந்நிலையில் சிபிச் சோழன் வியப்படையும்படியாக, புறாவைத் துரத்தி வந்த பருந்து தயங்கித் தயங்கி அவனருகில் வந்தது. தயங்கித் தயங்கி வந்த பருந்து பேசவும் தொடங்கியது; அதனுடைய பேச்சினைக் கேட்டதும் சிபிச் சோழன் மேலும் வியப்பில் ஆழ்ந்தான்.

" எல்லா உயிர்களிடத்திலும் கருணை செலுத்துகின்ற அரசே! என்னிடத்தில் நீ கருணை காட்ட வேண்டும். எப்படிப் புறாவிடம் அன்பு செலுத்துகின்றாயோ, அது போலவே என்னிடமும் அன்பு செலுத்த வேண்டும். நானோ இப்பொழுது கொடிய பசியுடன் இருக்கிறேன்; இன்று காலைப் பொழுதிலிருந்து இரைக்காகப் பல விடங்களிலும் தேடியலைந்தேன்; இறுதியில் இந்தப் புறாவைக் கண்டேன். என்னுடைய பசியைத் தணித்துக் கொள்ள புறா உதவும் என்று அதனைக் கவர்வதற்காகத் துரத்தினேன். ஆனால், அந்தப் புறாவோ உன்னிடத்தில் பறந்து வந்து விட்டது. உடனே அந்தப் புறாவை என்னிடத்தில் கொடுத்து எனது பசியைப் போக்குவாயாக"

என்று கூறிய பருந்து பணிவுடன் சிபிச் சோழனை வேண்டிக் கொண்டது.

ஆனால், சிபிச்சோழன் புறாவைக் கொடுக்க மறுத்தான். தன்னிடத்தில் அடைக்கலம் புகுந்ததைக் காப்பதே தனது கடமை யென்பதைப் பருந்துக்கு உணர்த்தினான். புறாவிற்குப் பதிலாக வேறு எது கேட்டாலும் தருவதாக வாக்களித்தான். ஆனால், பருந்தோ தனக்கு அந்தப் புறாவே வேண்டுமென்று வாதாடியது.

" அரசே! எனது உணவின் பொருட்டாகவே, இப் புறா தெய்வத்தால் படைக்கப்பட்டது; இதனைப் பிடித்து எனது பசியைப் போக்கிக் கொள்வதற்காக அரும்பாடு பட்டேன்; எனது பசியைப் போக்குவதற்கென்றே தெய்வத்தால் படைக்கப்பட்ட இதனை, நீ பிடித்து வைத்திருப்பது சிறிதும் தகாது.

ஆனால், நானோ இப்பொழுது கொடிய பசியுடனிருக்கிறேன்; நீர் வேட்கையும் மிகுதியாக இருக்கிறது; இனிச் சிறிது நேரங்கூட என்னால் பசியைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது. நீ அறமுறையைக் கருதி புறாவைக் காக்க முயற்சிப்பதுபோல எனது பசியை நீக்க முயற்சிப்பதும் உனது கடமையாகும். ஆதலால், அந்தப் புறாவை இப்பொழுது என்னிடம் கொடுத்து விடுவாயாக. "

பருந்தினது பேச்சினைக் கேட்ட சிபிச் சோழன் அப்படியே மலைத்துப் போனான்; பின் ஒருவாறு தெளிந்து, எப்படி யிருந்தாலும், தன்னிடத்தில் அடைக்கலமாக வந்த புறாவை விட முடியாதென்று உறுதியாகக் கூறினான்.

புறாவிற்குப் பதிலாக வேறி எதன் இறைச்சியைக் கேட்டாலும் கொடுத்து அதனது பசியைப் போக்குவதாகக் கூறினான். பருந்தோ விடாப் பிடியாகப் புறாவே வேண்டுமென்றது. சோழனும் தனது கருத்தில் மாறவில்லை.

இறுதியில், புறாவின் எடைக்கு எடை அவனுடைய சதையை அரிந்து கொடுத்தால் போய் விடுவதாக பருந்து கூறியது. பருந்தினது சொல்லைக் கேட்ட மன்னனுக்கு மகிழ்ச்சி மிக உண்டாயிற்று. புறாவைக் காப்பதற்காகத் தனது உடல் பயன்படப் போகிற தென்பதனை அறிந்து அகமகிழ்ந்தான்.

புறாவைக் கையிலெடுத்துக் கொண்டு, பருந்து பின் தொடர அரண்மனைக்குச் சென்றான். தராசு ஒன்றும் கூர்மையான கத்தியொன்றும் கொண்டு வருமாறு ஏவலாளர்க்குக் கட்டளையிட்டான். ஏவலாளரோ எதற்கென்று அறியாதவராய் அரசன் கேட்டவாறே தராசும் கத்தியும் கொண்டுவந்து அவன் முன்னே வைத்தனர்.

அரசனது செயல் அங்கிருந்தவர்களை நடுங்கச் செய்தது. ஓடி வந்து தடுத்தனர். அரசன், அமைதியாக அவர்களையெல்லாம் அப்பால் செல்லுமாறு பணித்தான். அரசனது ஆணைக்கு அஞ்சிய அவர்கள் அப்பால் விலகி நின்றனர்.

தான் அரிந்து வைத்த தசை, புறாவின் எடைக்குக் குறைவாக இருந்தது. அதனால் மற்றொரு தொடையின் தசையையும் அரிந்து வைத்தான். அப்பொழுதும் புறா இருந்த தட்டே தாழ்ந்திருந்தது; அதுகண்டும் சோழன் சலிக்கவில்லை. தனது கால் தசைகளையும், விலாப்புறங்களிலுள்ள தசைகளையும், ஒரு கையின் தசையையும் அரிந்து வைத்தான்.

என்ன வியப்பு! அப்பொழுதும் புறா இருந்த தட்டுத் தாழ்ந்தே இருந்தது. இதுகண்ட அரசன் சிறிது மலைப்புற்றான். திடீரென்று அவனது முகத்தில் மலர்ச்சி தோன்றியது. கண்டவர் வியப்புறும்படியாகத் தானே தராசில் ஏறி அமர்ந்தான். அவன் ஏறி அமர்ந்ததும் தராசுத் தட்டுகள் இரண்டும் சம நிலைக்கு வந்தன. அரசனடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.

மகிழ்ச்சியின் எல்லையில் சிபிச்சோழன் மயங்கிக் கிடந்தான். திடீரென்று, தன் எதிரே இருந்த புறாவும் பருந்தும் மறைந்தன. அது கண்டு சோழனும் அங்கிருந்தவர்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.

உயிர்களிடத்தில் சிபிச்சோழன் கொண்டுள்ள அன்பினை விளக்குவதற்காக, தேவர் தலைவனாகிய இந்திரனும், நெருப்புக் கடவுளும் முறையே பருந்தாகவும் புறாவாகவும் வந்தனர்; சிபிச் சோழனது கருணையை மண்ணுலக மக்கள் மட்டுமல்லாமல், தேவரும் போற்றிக் கொண்டாடினர்.

அவனைத் தங்கள் விருந்தினனாக அழைத்துச் சென்றனர். சிபிச் சோழனும் தனது கருணையென்னும் துணை கொண்டு வானுலகத்தை அடைந்து, நல்வாழ்வு பெற்றான்.

History