முசுகுந்தன்: Revision

முசுகுந்தம் என்றால் குரங்கு முகம் என்று பொருள்.முசுகுந்தன் என்பவனைப் imageபற்றி மகாபாரதத்தில் விவரங்கள் இருக்கின்றன. அவன் பெரும் முனிவனாகவும், பல நாடுகளைத் தன் கீழ் கொண்டு வந்த பேரரசனாகவும் போற்றப்படுகிறான். அவனுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் எல்லாம் கங்கைக் கரையில் இருக்கின்றன. அவனுக்கும் புகார் நகருக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், நாளங்காடிப் பூதத்தைப் பெற்ற விதத்தை, 'அமரனிற் பெற்று, தமரில் தந்து" என்கிறது சிலப்பதிகாரம். அதாவது, அமரன் என்று சொல்லபப்டும் இந்திரனிடமிருந்து பெற்றதை, முசுகுந்தன் தன் தமருக்கு, அதாவது தன்னைச் சேர்ந்தோருக்குத் தந்தான் என்று பொருள் அமைகிறது. அதாவது சோழர்கள் முசுகுந்தனுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது. அந்தத் தொடர்பு என்ன என்பது 1905 -ஆம் வருடம் திருவாலங்காடு என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள செப்புத் தகடுகளின் மூலம் தெரிகிறது.

நாளங்காடி பூதம்:

            நாளங்காடி என்னும் ஒரு கடைத்தெரு. அந்தக் கடைத் தெருவில் நாளங்காடிப் பூதம் என்னும் பூதம் குடி கொண்டுள்ளது. பூதம் என்றால் பேய், பிசாசு போன்ற மூட நம்பிக்கை அல்ல. வழி வழியாக சோழநாட்டு மக்கள் அதனை வணங்கி வந்துள்ளனர். தெய்வ சக்தி கொண்ட ஒன்றாக அது இருக்கவே, அதற்கு மக்கள் பொங்கலிட்டு, பூசை செய்து வணங்கி வந்தனர். இதனை இளங்கோவடிகள் இந்திர விழாவூரெடுத்த காதையில் விவரித்துள்ளார்.

  • முசுகுந்தன் இந்திரனிடமிருந்து தியாராசரைப் பெற்றுவந்து திருவாரூரில் கோயில்கொள்ளச் செய்தார் என்று திருவாரூர் நான்மணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது.
  • உம்பர் விமானம் உகைத்தவன் என மூவருலா சோழர் பரம்பரை இவனைக் குறிப்பிடுகிறது.

மகாபாரதக் கதை:

முன்னொரு காலத்தே முசுகுந்தன் என்னும் பெயருடைய சோழ மன்னன் சோழ நாட்டை ஆண்டு வந்தான். கருவூர் அவனது தலைநகரமாக இருந்தது. குரங்கு முகத்துடன் இருந்ததால் அம்மன்னனுக்கு முசுகுந்தன் என்ற பெயர் வந்தது. இவன் அறிவிலும் வலிமையிலும் சிறந்து விளங்கினான். சிவபெருமானிடம் அளவில்லா அன்பு செலுத்தினான்.

பகைவர் முசுகுந்தனைக் கண்டு அஞ்சினர். முசுகுந்தனது வீரம் தேவர் உலகத்திலும் பரவியது. ஒரு சமயம் அரக்கர்கள் எல்லாரும் ஒன்றுகூடி இந்திரனைத் தாக்கினர். இந்திரனால் அரக்கர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. உடனே முசுகுந்தனை உதவி புரியுமாறு வேண்டிக் கொண்டான்.

முசுகுந்தன் பெரும்படையுடன் புறப்பட்டான். அரக்கர்களோடு கடும் போர் செய்தான். முசுகுந்தனுக்கு முன்னே அரக்கர்களால் என்றும் செய்ய முடியவில்லை. பகலவனைக் கண்டு ஒளியும் பனிப்படலம் போலத் தோல்வியடைந்து ஓடி ஒளிந்தனர்.

முசுகுந்தனது வீரத்தைக் கண்ட இந்திரன் அவனுக்கு யாது வேண்டுமென்று கேட்டான். இந்திரனிடம் திருமாலால் பூசிக்கப்பட்ட சிவபெருமானது உருவச்சிலை ஒன்று இருந்தது. முசுகுந்தன் தான் பூசை செய்து வணங்குவதற்கு, அந்த உருவச்சிலை வேண்டுமென்று கேட்டான்.

இந்திரனுக்கோ அதைக் கொடுக்க விருப்பமில்லை. இல்லையென்று சொல்லவும் விருப்பமில்லை. அதனால் ஒரு தந்திரம் செய்தான். அந்தச் சிலையைப் போலவே வேறு சிலைகள் ஆறு இருந்தன. அந்தச் சிலைகளோடு முசுகுந்தன் விரும்பிய சிலையையும் வைத்து, அவனுக்கு விருப்பமானதை எடுத்துக் கொள்ளுமாறு இந்திரன் கூறினான்.

ஏழு சிலைகளும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்த்ததும், எதனையெடுப்பது என்பது தெரியாமல் முசுகுந்தன் மயங்கினான். சிவபெருமானை மனதில் வணங்கி, ஒரு சிலையை எடுத்தான். அந்தச் சிலையே முதலில் தான் விரும்பியது என்பதை அறிந்த முசுகுந்தன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். இந்திரனும் அவனது பக்தியைக் கண்டு மெச்சினான். ஏழு சிலைகளையுமே எடுத்துக் கொள்ளுமாறு இந்திரன் கொடுத்துவிட்டான்.

ஏழு உருவச் சிலைகளையும் பெற்றுக் கொண்ட முசுகுந்தன் மற்றொரு வரத்தையும் இந்திரனிடம் கேட்டான். அரக்கரோடு போரிட்டதால் தான் மிகவும் களைத்திருப்பதாகவும், அதனால் நீண்ட காலம் உறங்க வேண்டுமென்றும் வரங் கேட்டான்.

இந்திரனும் அந்த வரத்தைக் கொடுத்ததோடு, உறக்கத்திலிருந்து யார் எழுப்பினாலும், எழுப்பியவர் எரிந்து சாம்பலாகப் போவார் என்று சொல்லி அனுப்பினான். முசுகுந்தன் இந்திரன் அளித்த ஏழு சிலைகளையும் பெற்றுக்கோண்டு தன் நாட்டுக்கு மீண்டான்.

தான் கொண்டு வந்த ஏழு சிலைகளையும் திருவாரூர், திருநாகைக் காரோணம், திருக்காறாயில், திருக்கோளிலி, திருமறைக்காடு, திருநள்ளாறு, திருவாய்மூர் என்னும் ஏழு ஊர்களிலும் அமைத்துக் கோயில் கட்டினான். அக் கோயில்களிலெல்லாம் பூசைகள் தவறாமல் நடந்து வருவதற்கும் ஏற்பாடு செய்தான்.

பின்னே, மலை குகையொன்றை அடைந்து, போர் செய்த களைப்பு நீங்கும் வரையிலும் உறங்கத் தொடங்கினான்.

முசுகுந்தன் மலைக்குகையில் உறங்கிக் கொண்டிருந்த காலத்தில், கண்ணன் என்பவன் வட மதுரையை ஆண்டு வந்தான். அப்பொழுது யவன தேசத்து அரசனான காலயவனன், பெரும்படையுடன் கண்ணனைத் தாக்குவதற்கு வந்தான். அவனோடு சண்டை செய்து அவனை வெல்ல முடியாது என்பதைக் கண்ணன் உணர்ந்து கொண்டான்.

அதனால் ஒரு தந்திரன் செய்தான். காலயவனன் படையெடுத்து வருவதற்கு முன்னே, வட மதுரையில் இருந்தவர்களை யெல்லாம் துவாரகை என்னுமிடத்திற்குக் குடியேற்றி விட்டான். தான் மட்டும் வட மதுரையில் தங்கியிருந்தான்.

காலயவனனும் தனது படையுடன் வந்து வட மதுரையை முற்றுகையிட்டான். கண்ணன் அவனுக்குப் பயந்து ஓடுபவன் போல ஓடினான். காலயவனனும் விடாமல் கண்ணனைத் துரத்தினான்.

இறுதியில் கண்ணன் முசுகுந்தன் உறங்கிக் கொண்டிருந்த மலைக் குகையில் ஓடி ஒளிந்து கொண்டான். காலயவனனும் கண்ணனை விடுவதாக இல்லை. அவனும் கண்ணன் ஓடி ஒளிந்த மலைக் குகைக்குள் சென்றான்.

குகைக்கு உள்ளே வந்த காலயவனன் கண்களுக்கு முசுகுந்தன் படுத்திருப்பது தெரிந்தது. கண்ணனே அவ்வாறு படுத்துக் கொண்டு பாசாங்கு செய்கிறான் என்று காலயவனன் கருதினான். ஆனால் அந்தக் குகையிலேயே வேறோரிடத்தில் கண்ணன் ஒளிந்து கொண்டிருப்பதை அவன் அறியவில்லை.

அதனால் முசுகுந்தனையே கண்ணன் என்று கருதிய காலயவனன், எட்டி ஓர் உதை விட்டான். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த முசுகுந்தன் துடித்து எழுந்தான்.

தன்னை உறக்கத்திலிருந்து எழச் செய்வதற்குக் காரணமாக இருந்தவன் யாரென்று உற்று நோக்கினான். அவ்வளவுதான்; காலயவனன் அந்த இடத்திலேயே எரிந்து சாம்பலானான். கண்ணனது தந்திரம் பலித்தது.

காலயவனன் எரிந்ததும் கண்ணன் முசுகுந்தன் முன் வந்து நின்றான். திருமாலே கண்ணனாக வந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட முசுகுந்தன் அவனைக் கைக்கூப்பி வணங்கினான். கண்ணனும் மகிழ்ந்து அவனுக்கு வேண்டிய வரங்களையெல்லாம் கொடுத்தான். இறுதியில் முக்தியடையுமாறும் அருள் செய்தான். மறுபடியும் தனது நாட்டிற்கு வந்து, முசுகுந்தன் ஆட்சியை மேற்கொண்டான்.

இந்திரனைப் பார்த்து நெடுநாளாயிற்றே என்ற எண்ணம் முசுகுந்தனுக்கு வந்தது. அதனால் இந்திரனைப் பார்த்துவரப் புறப்பட்டான். இந்திரனது வேண்டுகோளுக்கிணங்கிச் சில நாட்கள் அவனுடைய விருந்தினனாகத் தங்கியிருந்தான்.

அப்பொழுது இந்திரனிடமிருந்த அமிழ்தத்தைக் கலுழன் என்பவன் திருடிச் சென்று விட்டான். அவனிடமிருந்து அமிழ்தத்தை மீட்டு வர எண்ணினான் இந்திரன். தான் சென்று வரும் வரையிலும் தனது நகரத்தைக் காப்பவர் யார் என்று சிந்தித்தான்.

முசுகுந்தன், இந்திரன் வரும் வரையிலும் நகரத்தைக் காப்பதாக உறுதிமொழி அளித்தான். இந்திரனும் மனமகிழ்ந்து, அவனுக்குத் துணையாக வல்லமையுள்ள பூதம் ஒன்றையும் இருக்கச் செய்து, கலுழனைத் தொடர்ந்து புறப்பட்டான்.

பல முறைகள் இந்திரனிடம் போரிட்டுத் தோற்றோடிய அரக்கர்கள் கூட்டம், அவன் நகரத்தில் இல்லை என்பதை அறிந்து, தாக்குவதற்காகப் பெரும்படையுடன் வந்தனர். முசுகுந்தனுக்கு முன்னே அவர்களது வீரம் செல்லவில்லை.

நேரில் வெல்ல முடியாத அவர்கள், ஒரு தந்திரத்தைக் கையாண்டனர். நகர் முழுவதையும் இருள் சூழச் செய்தனர். அப்பொழுது முசுகுந்தன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுக்குத் துணையாக நின்ற பூதம், தனது வல்லமையால் இருளை யொழித்து ஒளியைப் பரவச் செய்தது. ஒளி பரவிய உடனே, அரக்கர் கூட்டத்தையெல்லாம் முசுகுந்தன் கொன்றொழித்தான்.

நகரத்துக்குத் திரும்பிய இந்திரன் நிகழ்ந்ததை அறிந்தான். பூதத்தை முசுகுந்தனுக்குப் பணிவிடை செய்யுமாறு, அவனுக்குக் கொடுத்துவிட்டான். பூதத்தோடு முசுகுந்தன் தனது நாட்டுக்குத் திரும்பினான்.

பூதத்தை நகரத்தின் எல்லையில் உள்ள நாளங்காடியில் (பகல் கடைத் தெரு) காவலிருக்குமாறு பணித்தான். அது முதல் அப்பூதம் நாளங்காடிப் பூதம் என்ற பெயரைப் பெற்றது.

பின்னர் பல ஆண்டுகள் முசுகுந்தன் நாட்டை ஆண்டு, தவத்தை மேற் கொண்டான். இறுதியில் வீடு பேறு அடைந்தான்.

 

History