சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னர் பலருள் மனுச் சோழன் என்பவனும் ஒருவன். அவனை மனுநீதிச் சோழன் என்றும், மனுநீதி கண்ட சோழன் என்றும் அழைத்தனர்.
மனுநீதிச் சோழன் திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவன் நீதியிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினான். எல்லா உயிர்களுக்கும் கண்போல் விளங்கினான்; அவ்வுயிர்களையெல்லாம் தன்னுயிர் போல் காத்து வந்தான்.
பகை மன்னர்களை வென்று வீரத்தில் மேம்பட்டுத் திகழ்ந்தான். மேகத்தைப் போலக் கைம்மாறு கருதாமல், யார் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து வந்தான். இவ்வளவு நற்குணங்களையும் பெற்றிருந்த மனுநீதிச் சோழன் கடவுள் பக்தியிலும் சிறந்து விளங்கினான். ஒவ்வொரு நாளும், திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் வீதிவிடங்கப் பெருமானைச் சென்று வணங்கி வந்தான்.
எல்லா நலமும் இனிதுறப் பெற்ற மனுநீதிச் சோழனுக்கு ஒரேயொரு குறை இருந்தது. தனக்குப் பின் தன் பெயரைச் சொல்வதற்கு மகன் ஒருவன் இல்லையே என்ற கவலை அவனை வாட்டியது. தன்னுடைய குறையைத் தீர்க்குமாறு இறைவனை நாள்தோறும் வேண்டிக் கொண்டான். பல நாட்களுக்குப் பிறகு இறைவனது திருவருளால் மனுநீதிச் சோழனுக்கு மகனொருவன் பிறந்தான். அவனுக்கு வீதிவிடங்கன் என்று பெயரிட்டு அரசன் அகமகிழ்ந்தான்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வீதிவிடங்கன் வளர்க்கப்பட்டு வந்தான். அரசியலைப் பற்றியும், நீதி நூல்களையும் பழுதறக் கற்றான். குதிரையேற்றம், யானையேற்றம், விற்போர், மற்போர், வாட்போர் முதலிய அனைத்தையும் தேர்ந்து வீரனாக விளங்கினான். எல்லாத் துறையிலும் வல்லவனாக விளங்கிய வீதிவிடங்கன் வளர்மதி போலவும், செஞ்ஞாயிறு போலவும் வளர்ந்து இளவரசனுக்குரிய தகுதியை அடைந்தான்.
தன் மகனின் திறமையை உணர்ந்த மனுநீதிச் சோழன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான்.
'தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது'
அல்லவா?
ஒருநாள், வீதிவிடங்கன் தன்னைப் படைகள் சூழ்ந்து வரத் தேரேறிப் புறப்பட்டான். அரண்மனையை விட்டுப் புறப்பட்ட தேர் பல வீதிகள் வழியே சென்றது. அரசிளங்குமரனைக் கண்ட நகர மக்களெல்லாம், அவனை வணங்கி வாழ்த்தினர். வீதிவிடங்கன் இவ்வாறு வீதிகளை எல்லாம் தேரில் சுற்றிக்கொண்டு வரும்போது, ஓரிடத்தே பசுங்கன்று ஒன்று, கூட்டத்தைக் கண்டு மருண்டு அங்குமிங்கும் ஓடியது. 'இளங்கன்று பயமறியாது' என்பதற்கிணங்க அங்குமிங்கும் ஓடிய கன்று, இறுதியில் வீதிவிடங்கனது தேர்ச் சக்கரத்திலே அகப்பட்டுக் கொண்டது.
வீதிவிடங்கன் எவ்வளவோ முயன்று பார்த்தும் குதிரைகளை தக்க நேரத்தில் நிறுத்த முடியவில்லை. கட்டுக் கடங்காமல் குதிரைகள் சென்றமையால், கன்றானது, தேர்ச் சக்கரத்திலே அகப்பட்டுத் துடிதுடித்துச் செத்தது.
தன்னால் ஓருயிர் போய்விட்டதே என்று அறிந்த வீதிவிடங்கன் உளம் பதைத்தான். தாய்ப்பசு படுகின்ற துன்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டான். இறந்து கிடந்த கன்றினைப் பார்த்து இரங்கி அழுதான். என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை, தேரிலிருந்தபடியே கீழே விழுந்தான்.
இதுவரையிலும் ஒரு பழியுமில்லாமல் அரசாண்டு வந்த தன் தந்தைக்குத் தன்னால், இப்பொழுது பெரும்பழி ஏற்பட்டு விட்டதை எண்ணியெண்ணி வருந்தினான். தன் தந்தையின் செவிகளில் இச் செய்தி விழுவதற்கு முன்னே, தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை அடைய விரும்பினான். தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை இன்னதென்பதை அறிவதற்காக அந்தணர்களைத் தேடிச் சென்றான்.
கன்றை இழந்த தாய்ப்பசு கதறியது; அங்குமிங்கும் ஓடியது. கடைசியில் மனுநீதிச் சோழனின் அரண்மனையை அடைந்தது. குற்றங் குறைகளைத் தெரிவிப்பதற்காக அரண்மனையின் வெளியில் ஆராய்ச்சி மணியொன்று கட்டப்பட்டிருந்தது. அதனை அசைத்தால், மணியொலி கேட்டு அரசன் அங்கு வருவான். வந்தவரின் குறைகளைக் கேட்டு அறிந்து நீதி வழங்குவான்.
ஆனால், மனுநீதிச் சோழனது அரசாட்சியில் இதுவரையிலும் அந்த மணியை யாரும் அசைத்ததில்லை. அவ்வளவுக்கு அவனது ஆட்சி குற்றங் குறையில்லாமல் நடந்து வந்தது. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்ப்பசு, தனது கொம்புகளால் மணியை அசைத்து ஓசை யெழுப்பியது.
தன்னுடைய வாழ்நாளில், இதுவையிலும் கேளாத மணியோசை இப்போது ஒலித்தைச் செவியேற்ற மனுநீதிச் சோழன் நடுநடுங்கினான். தனது செங்கோலாட்சியில் குற்றம் நேர்ந்துவிட்டதோ என்று பதறினான். ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்த இடத்திற்கு ஓடோடி வந்தான். கண்ணீர் விட்டுக் கதறி நின்ற தாய்ப்பசுவைப் பார்த்து அப்படியே மலைத்து நின்றான்.
அமைச்சர்களில் ஒருவர், நடந்த நிகழ்ச்சிகளைப் பணிவோடு அரசனுக்கு அறிவித்தார். தன் மகன் குற்றம் புரிந்தவன் என்பதை அறிந்ததும் அரசனது மனம் அளவில்லாத வேதனை யடைந்தது. மனுநீதிச் சோழன் அமைச்சர்களையெல்லாம் கூட்டினான். தன் மகன் செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை விதிக்கலாமென்று ஆலோசனை கேட்டான். அமைச்சர்கள், அந்தணர்கள் கூறும் பிராயச்சித்தத்தைச் செய்வதே முறையாகும் என்று கூறினர். ஆனால், மனுநீதிச் சோழன் அதற்கு ஒப்பவில்லை.
தன் மகனுக்கு ஒரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்றால், உலகம் தன்னைப் பழிக்குமே என்று அஞ்சினான். அதனால், 'கன்றினை இழந்த தாய்ப்பசு எவ்வாறு துன்புறுகிறதோ, அது போலவே தானும் துன்பமடைவதுதான் முறையாகும்' என்று சொன்னான். உடனே, தன் அருமை மகனை அங்கே அழைத்துவரச் செய்தான்.
அரசனது முடிவைக் கண்ட அமைச்சர்கள் அஞ்சினர். எனினும், அரசனது கருத்தை மாற்ற அவர்களால் முடியவில்லை. வீதிவிடங்கன், தந்தை முன்னே வந்து நின்றான். உடனே, அரசன், அமைச்சருள் ஒருவரை அழைத்தான். தன் மகனை வீதியில் நிறுத்தி அவன் மீது தேரினை ஓட்டுமாறு கட்டளையிட்டான்.
அதுகேட்ட அமைச்சர் நடுங்கினார். அரசன் கட்டளையையும் தட்ட முடியாது. எனவே, அமைச்சர் அரசன் மகனைக் கொல்வதற்குப் பதிலாகத் தம்முயிரையே போக்கிக் கொண்டார். அமைச்சரது செயலைக் கண்டும் அரசன் மனம் மாறவில்லை. தானே தேரினை ஓட்டித் தன் மகனைக் கொல்லத் தீர்மானித்தான்.
தனக்கு இருப்பவன் ஒரே மகன் என்பதையும் அரசன் கருதவில்லை. தன் மைந்தனை வீதியில் படுக்கச் செய்தான். மன உறுதியுடன் தேரினை மகன் மீது செலுத்தினான்.
மனுநீதிச் சோழனது நீதி போற்றும் தன்மையைக் கண்ட மக்களெல்லாரும் வியந்து போற்றினர்; தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மகன் இறந்ததும் மனங் கலங்காமல் நின்ற மனுநீதிச் சோழனது தன்மையைக் கண்டு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.
மனுநீதிச் சோழன் சிவபெருமானை வணங்கி வழிபட்டான். உடனே, இறந்த கன்றும், அமைச்சனும், மகனும் தூக்கத்திலிருந்து விழித்தெழுவதைப் போல எழுந்ததைக் கண்டு அரசன் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தான்.
இறைவனுடைய அருளை எண்ணி மேலும் வணங்கினான். அந்நிலையில் இறைவன் மறைந்தார். நீதி போற்றும் அரசர்களுக்குக் கடவுளும் துணை செய்யுமென்பது இதிலிருந்து விளங்குகிறதல்லவா?