Group activity

 • புறநானூறு, 209. (நல்நாட்டுப் பொருந!)
  பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
  பாடப்பட்டோன்: மூவன்.
  திணை: பாடாண்
  துறை: பரிசில் கடாநிலை.
  ==========================

  பொய்கை நாரை போர்வில் சேக்கும்
  நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
  கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
  அகல் அடை அரியல் மாந்தித் தெண்கடல்
  படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்

  மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
  பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
  பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
  பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
  பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்

  நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலேன்
  வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
  ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்;
  நோயிலை ஆகுமதி; பெரும, நம்முள்
  குறுநணி காண்குவ தாக; நாளும்

  நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
  தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
  பெருவரை அன்ன மார்பின்
  செருவெம் சேஎய் நின் மகிழ்இருக்கையே

  அருஞ்சொற்பொருள்:-

  பொய்கை = குளம்
  போர்வு = வைக்கோற் போர்
  சேத்தல் = கிடத்தல், தங்கியிருத்தல்
  கழனி = வயல்
  தொழுவர் = உழவர்
  பிணி = அரும்பு
  ஆம்பல் = அல்லி
  அடை = இலை
  அரியல் = மது
  மாந்துதல் = குடித்தல்
  சீர் = தாளவொத்து
  பாணி = இசை
  பாணி தூங்குதல் = தாளத்திற்கேற்ப ஆடுதல்
  மென்புலம் = மருதமும் நெய்தலும்
  அல்கல் = தங்குதல்
  விசும்பு = ஆகாயம்
  உகந்து = உயர்ந்து
  விடர் = மலைப்பிளவு, குகை
  சிலம்பு = ஒலி
  முன்னுதல் = முற்படுதல், எதிர்ப்படுதல்
  கையறுதல் = செயலறுதல்
  நசை = விருப்பம்
  நுவலுதல் = கூறுதல்
  வறுவியேன் = வறுமையுடையவன்
  குறு நணி = மிகுந்த நெருக்கம்
  பல் = பல
  ஒலித்தல் = தழைத்தல்
  கதுப்பு = பெண்களின் கூந்தல்
  தெரியிழை = ஆராய்ந்த ஆபரணம் (ஆராய்ந்த ஆபரணங்களைத் தரித்த பெண்)
  பாணி = காலம், சமயம்
  வரை = மலை
  சேய் = முருகன்
  செரு = போர்
  மகிழிருக்கை = அரசவை, நாள் ஓலக்கம் ( அரசன் நாட்பொழுதில் வீற்றிருந்து அரசாட்சி செய்யும் இடம்)

  இதன் பொருள்:-

  பொய்கை=====> தூங்கும்

  குளத்தில் மேய்ந்த நாரை வைக்கோற் போரில் உறங்கும் நெய்தல் நிலத்தில் உள்ள வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் உழவர், நன்கு மலர்ந்த ஆம்பலின் அகன்ற இலைகளில் மதுவை உண்டு, தெளிந்த கடல் அலைகளின் இனிய சீரான ஒலிக்கேற்ப ஆடுகின்றனர்.

  மென்புல=====> நின்

  இத்தகைய வளமான நெய்தல் மற்றும் மருத நிலங்களையுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! பழங்களை விரும்பி, தாம் வாழும் ஆகாயத்தில் உயரப் பறந்து, பெரிய மலைக் குகையில் எதிரொலி முழங்கச் சென்று, பழமரத்தில் பழங்கள் இல்லாததால் வருந்தி மீளும் பறவைகளைப் போல், உன்

  நசைதர=====> நாளும்

  மீதுள்ள விருப்பத்தினால் உன் புகழைக் கூற வந்த நான் பரிசு பெறாமல் வெறுங்கையோடு செல்லப் போகிறேனா? வாட்போரில் சிறந்த வீரனே! நீ எனக்குப் பரிசளிக்காவிட்டாலும் நான் வருந்தமாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வாயாக! தலைவ!

  நறும்பல்=====> மகிழ்இருக்கையே

  நாள்தோறும், மணமுடைய, நீண்ட, தழைத்த கூந்தலோடு, ஆராய்ந்த ஆபரணங்களை அணிந்து, தேன்போன்ற இனிய மொழி பேசும் பெண்கள் உன்னுடைய மலைபோன்ற மார்பைத் தழுவும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீ போரை விரும்பும் முருகனுக்கு ஒப்பானவன். நான் பரிசு பெறாமல் செல்வது உன் அரசவையில் உன்னோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும்.

  பாடலின் பின்னணி:-

  மூவன் கொடையில் சிறந்தவன் என்ற புகழோடு விளங்கினான். அதனால் பெருந்தலைச் சாத்தனார் அவனைக் காணச் சென்றார். மூவன், பெருந்தலைச் சாத்தனாருக்குப் பரிசளிக்காமல் காலம் தாழ்த்தினான். அவனிடமிருந்து பரிசு பெறலாம் என்ற நம்பிக்கையை இழந்த சாத்தனார், மூவன் தன்னை இகழந்ததாகக் கருதினார். “மலையிலிருந்த மரம் ஒன்று பழுத்த பழங்கள் உடையது என்று எண்ணிப் பறவைகள் அந்த மரத்தை நாடிச் சென்றன. ஆனால், பருவகாலம் மாறியதால் அம்மரத்தில் பழங்கள் இல்லை. பறவைகள் பழங்கள் இல்லாமல் திரும்பின. அப்பறவைகளைப்போல், நான் உன்னை நாடி வந்தேன்; நான் இப்பொழுது வெறுங்கையோடு செல்லவேண்டிய நிலையில் உள்ளேன். நீ எனக்குப் பரிசு அளிக்காவிட்டால், நான் அது குறித்து வருந்த மாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வதையே நான் விரும்புகிறேன். ஆனால், நான் பரிசு இல்லாமல் திரும்பிச் செல்வது நமக்குள் இருக்கட்டும்.” என்று கூறிப் பெருந்தலைச் சாத்தனார் பரிசு பெறாமலேயே சென்றார்.

 • சோழ நாட்டை ஆண்ட சோழ மன்னர் பலருள் மனுச் சோழன் என்பவனும் ஒருவன். அவனை imageமனுநீதிச் சோழன் என்றும், மனுநீதி கண்ட சோழன் என்றும் அழைத்தனர்.

  மனுநீதிச் சோழன் திருவாரூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழ நாட்டை ஆண்டு வந்தான். அவன் நீதியிலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினான். எல்லா உயிர்களுக்கும் கண்போல் விளங்கினான்; அவ்வுயிர்களையெல்லாம் தன்னுயிர் போல் காத்து வந்தான்.

  பகை மன்னர்களை வென்று வீரத்தில் மேம்பட்டுத் திகழ்ந்தான். மேகத்தைப் போலக் கைம்மாறு கருதாமல், யார் எது கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கொடுத்து வந்தான். இவ்வளவு நற்குணங்களையும் பெற்றிருந்த மனுநீதிச் சோழன் கடவுள் பக்தியிலும் சிறந்து விளங்கினான். ஒவ்வொரு நாளும், திருவாரூரில் கோயில் கொண்டிருக்கும் வீதிவிடங்கப் பெருமானைச் சென்று வணங்கி வந்தான்.

  எல்லா நலமும் இனிதுறப் பெற்ற மனுநீதிச் சோழனுக்கு ஒரேயொரு குறை இருந்தது. தனக்குப் பின் தன் பெயரைச் சொல்வதற்கு மகன் ஒருவன் இல்லையே என்ற கவலை அவனை வாட்டியது. தன்னுடைய குறையைத் தீர்க்குமாறு இறைவனை நாள்தோறும் வேண்டிக் கொண்டான். பல நாட்களுக்குப் பிறகு இறைவனது திருவருளால் மனுநீதிச் சோழனுக்கு மகனொருவன் பிறந்தான். அவனுக்கு வீதிவிடங்கன் என்று பெயரிட்டு அரசன் அகமகிழ்ந்தான்.

  நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வீதிவிடங்கன் வளர்க்கப்பட்டு வந்தான். அரசியலைப் பற்றியும், நீதி நூல்களையும் பழுதறக் கற்றான். குதிரையேற்றம், யானையேற்றம், விற்போர், மற்போர், வாட்போர் முதலிய அனைத்தையும் தேர்ந்து வீரனாக விளங்கினான். எல்லாத் துறையிலும் வல்லவனாக விளங்கிய வீதிவிடங்கன் வளர்மதி போலவும், செஞ்ஞாயிறு போலவும் வளர்ந்து இளவரசனுக்குரிய தகுதியை அடைந்தான்.

  தன் மகனின் திறமையை உணர்ந்த மனுநீதிச் சோழன் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தான். 

  'தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
  மன்னுயிர்க் கெல்லாம் இனிது'

  அல்லவா?

  ஒருநாள், வீதிவிடங்கன் தன்னைப் படைகள் சூழ்ந்து வரத் தேரேறிப் புறப்பட்டான். அரண்மனையை விட்டுப் புறப்பட்ட தேர் பல வீதிகள் வழியே சென்றது. அரசிளங்குமரனைக் கண்ட நகர மக்களெல்லாம், அவனை வணங்கி வாழ்த்தினர். வீதிவிடங்கன் இவ்வாறு வீதிகளை எல்லாம் தேரில் சுற்றிக்கொண்டு வரும்போது, ஓரிடத்தே பசுங்கன்று ஒன்று, கூட்டத்தைக் கண்டு மருண்டு அங்குமிங்கும் ஓடியது. 'இளங்கன்று பயமறியாது' என்பதற்கிணங்க அங்குமிங்கும் ஓடிய கன்று, இறுதியில் வீதிவிடங்கனது தேர்ச் சக்கரத்திலே அகப்பட்டுக் கொண்டது.

  வீதிவிடங்கன் எவ்வளவோ முயன்று பார்த்தும் குதிரைகளை தக்க நேரத்தில் நிறுத்த முடியவில்லை. கட்டுக் கடங்காமல் குதிரைகள் சென்றமையால், கன்றானது, தேர்ச் சக்கரத்திலே அகப்பட்டுத் துடிதுடித்துச் செத்தது.

  தன்னால் ஓருயிர் போய்விட்டதே என்று அறிந்த வீதிவிடங்கன் உளம் பதைத்தான். தாய்ப்பசு படுகின்ற துன்பத்தைக் கண்டு கண்ணீர் விட்டான். இறந்து கிடந்த கன்றினைப் பார்த்து இரங்கி அழுதான். என்ன செய்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை, தேரிலிருந்தபடியே கீழே விழுந்தான்.

  இதுவரையிலும் ஒரு பழியுமில்லாமல் அரசாண்டு வந்த தன் தந்தைக்குத் தன்னால், இப்பொழுது பெரும்பழி ஏற்பட்டு விட்டதை எண்ணியெண்ணி வருந்தினான். தன் தந்தையின் செவிகளில் இச் செய்தி விழுவதற்கு முன்னே, தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை அடைய விரும்பினான். தான் செய்த குற்றத்திற்குத் தண்டனை இன்னதென்பதை அறிவதற்காக அந்தணர்களைத் தேடிச் சென்றான்.

  கன்றை இழந்த தாய்ப்பசு கதறியது; அங்குமிங்கும் ஓடியது. கடைசியில் மனுநீதிச் சோழனின் அரண்மனையை அடைந்தது. குற்றங் குறைகளைத் தெரிவிப்பதற்காக அரண்மனையின் வெளியில் ஆராய்ச்சி மணியொன்று கட்டப்பட்டிருந்தது. அதனை அசைத்தால், மணியொலி கேட்டு அரசன் அங்கு வருவான். வந்தவரின் குறைகளைக் கேட்டு அறிந்து நீதி வழங்குவான்.

  ஆனால், மனுநீதிச் சோழனது அரசாட்சியில் இதுவரையிலும் அந்த மணியை யாரும் அசைத்ததில்லை. அவ்வளவுக்கு அவனது ஆட்சி குற்றங் குறையில்லாமல் நடந்து வந்தது. கண்ணீர் விட்டுக் கதறிய தாய்ப்பசு, தனது கொம்புகளால் மணியை அசைத்து ஓசை யெழுப்பியது.

  தன்னுடைய வாழ்நாளில், இதுவையிலும் கேளாத மணியோசை இப்போது ஒலித்தைச் செவியேற்ற மனுநீதிச் சோழன் நடுநடுங்கினான். தனது செங்கோலாட்சியில் குற்றம் நேர்ந்துவிட்டதோ என்று பதறினான். ஆராய்ச்சி மணி கட்டப்பட்டிருந்த இடத்திற்கு ஓடோடி வந்தான். கண்ணீர் விட்டுக் கதறி நின்ற தாய்ப்பசுவைப் பார்த்து அப்படியே மலைத்து நின்றான்.

  அமைச்சர்களில் ஒருவர், நடந்த நிகழ்ச்சிகளைப் பணிவோடு அரசனுக்கு அறிவித்தார். தன் மகன் குற்றம் புரிந்தவன் என்பதை அறிந்ததும் அரசனது மனம் அளவில்லாத வேதனை யடைந்தது. மனுநீதிச் சோழன் அமைச்சர்களையெல்லாம் கூட்டினான். தன் மகன் செய்த குற்றத்திற்கு என்ன தண்டனை விதிக்கலாமென்று ஆலோசனை கேட்டான். அமைச்சர்கள், அந்தணர்கள் கூறும் பிராயச்சித்தத்தைச் செய்வதே முறையாகும் என்று கூறினர். ஆனால், மனுநீதிச் சோழன் அதற்கு ஒப்பவில்லை.

  தன் மகனுக்கு ஒரு நீதி, பிறருக்கு ஒரு நீதி என்றால், உலகம் தன்னைப் பழிக்குமே என்று அஞ்சினான். அதனால், 'கன்றினை இழந்த தாய்ப்பசு எவ்வாறு துன்புறுகிறதோ, அது போலவே தானும் துன்பமடைவதுதான் முறையாகும்' என்று சொன்னான். உடனே, தன் அருமை மகனை அங்கே அழைத்துவரச் செய்தான்.

  அரசனது முடிவைக் கண்ட அமைச்சர்கள் அஞ்சினர். எனினும், அரசனது கருத்தை மாற்ற அவர்களால் முடியவில்லை. வீதிவிடங்கன், தந்தை முன்னே வந்து நின்றான். உடனே, அரசன், அமைச்சருள் ஒருவரை அழைத்தான். தன் மகனை வீதியில் நிறுத்தி அவன் மீது தேரினை ஓட்டுமாறு கட்டளையிட்டான்.

  அதுகேட்ட அமைச்சர் நடுங்கினார். அரசன் கட்டளையையும் தட்ட முடியாது. எனவே, அமைச்சர் அரசன் மகனைக் கொல்வதற்குப் பதிலாகத் தம்முயிரையே போக்கிக் கொண்டார். அமைச்சரது செயலைக் கண்டும் அரசன் மனம் மாறவில்லை. தானே தேரினை ஓட்டித் தன் மகனைக் கொல்லத் தீர்மானித்தான்.

  தனக்கு இருப்பவன் ஒரே மகன் என்பதையும் அரசன் கருதவில்லை. தன் மைந்தனை வீதியில் படுக்கச் செய்தான். மன உறுதியுடன் தேரினை மகன் மீது செலுத்தினான்.

  மனுநீதிச் சோழனது நீதி போற்றும் தன்மையைக் கண்ட மக்களெல்லாரும் வியந்து போற்றினர்; தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மகன் இறந்ததும் மனங் கலங்காமல் நின்ற மனுநீதிச் சோழனது தன்மையைக் கண்டு சிவபெருமான் காட்சி கொடுத்தார்.

  மனுநீதிச் சோழன் சிவபெருமானை வணங்கி வழிபட்டான். உடனே, இறந்த கன்றும், அமைச்சனும், மகனும் தூக்கத்திலிருந்து விழித்தெழுவதைப் போல எழுந்ததைக் கண்டு அரசன் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தான்.

  இறைவனுடைய அருளை எண்ணி மேலும் வணங்கினான். அந்நிலையில் இறைவன் மறைந்தார். நீதி போற்றும் அரசர்களுக்குக் கடவுளும் துணை செய்யுமென்பது இதிலிருந்து விளங்குகிறதல்லவா?

 • மனுநீதிச் சோழன்
 • சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த மதுரையும் பதியைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டிய imageநாட்டை ஆண்டு புகழெய்திய வேந்தர் பலராவார். பாண்டிய மரபில் தோன்றிய பலரும் வீரத்தாலும், கொடையாலும், கல்வியாலும் சிறந்து விளங்கினர். அவருள் சிலர் செய்யுள் பாடும் புலமையும் பெற்றுத் திகழ்ந்தனர்.

  செய்யுள் பாடும் புலமையும், போர்க்களத்தே பகைவரை மடியச் செய்யும் வீரமும், கைம்மாறு கருதாமல் மேகத்தைப் போல வருவார்க்கு வாரி வழங்கிய கொடைத் தன்மையும் ஒருங்கே அமையப் பெற்ற சிலருள் பூதப் பாண்டியன் குறிப்பிடத்தக்கவனாவான்.

  பூதப் பாண்டியன் பலவகையிலும் சிறந்து விளங்கினான்; அவனிடம் ஆண்மை குடிகொண்டிருந்தது; புலமையோடு செய்யுள் பாடும் திறமையும் அமைந்திருந்தது; கொடைக் குணம் மல்கிக் கிடந்தது; அறிவுச் செறிவு மிக்கிருந்தது.

  இங்கனம் பலவகையிலும் மேம்பட்டு விளங்கிய பூதப் பாண்டியன், இல்லற இன்பத்தையும் குறைவறப் பெற்றிருந்தான். அவனுக்கு மனைவியாக வாய்த்த பேறு பெற்றவள் பெருங்கோப்பெண்டு என்பவள். அவள் காண்பவர் மயங்கும் கட்டழகு வாய்த்தவள்; கொண்டான் குறிப்பறிந்து நடக்கும் குணம் மிகக் கொண்டவள்; கணவனைப் போலவே கல்வி கேள்விகளில் சிறந்து கவி பாடும் ஆற்றலையும் பெற்றிருந்தாள்.

  பூதப் பாண்டியனுக்கு மனைவி யென்னும் பெயரைக் கொண்டிருந்தாலும், சமயத்தில் அமைச்சன் போலவும் நடந்துகொண்டாள். தன் கணவன் வாழ்வே தன் வாழ்வு என்று கருதினாள். இத்தகையாளை மனைவியாகப் பெற்ற பூதப் பாண்டியன் ஒரு குறையுமில்லாமல் ஆட்சியை நேர்மையாக நடத்தி வந்தான்.

  பாண்டிய நாட்டின் வடவெல்லையாக ஒல்லையூர் என்னும் ஊர் விளங்கியது. அவ்வூர் இப்பொழுது ஒலியமங்கலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பூதப் பாண்டியனுக்கு முன்னிருந்த பாண்டியன் ஒருவனைச் சோழர் வென்று ஒல்லையூரைக் கைப்பற்றிக் கொண்டனர்.

  பாண்டியருக்குறியது, பாண்டிய நாட்டின் வடவெல்லையாக அமைந்திருந்தது மாகிய ஒல்லையூர் சோழர்களுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அக்காலத்தே சோழர்களே வலிமையுடையவர்களாக இருந்ததால் அவர்களை வென்று ஒல்லையூரைக் கைப்பற்றக் கூடிய வலிமை பாண்டியனுக்கு இல்லாது போயிற்று; மேலும் சேரரும் பாண்டியனுக்குப் பகைவராக இருந்தனர். இந்நிலையால் ஒல்லையூர் சோழர்களின் ஆட்சியில் சிக்கித் தன் உரிமை யிழந்தது.

  பூதப் பாண்டியன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும், அவன் மனக்கண் முன் ஒல்லையூர்தான் காட்சி தந்தது. வழிவழியாகப் பாண்டி நாட்டிற்குரிமையுடைய ஒல்லையூர், மாற்றாரால் கைப்பற்றப்பட்டு விட்டதை எண்ணியெண்ணி வருந்தினான்; தன் காலைத்திலாவது ஒல்லையூர் பண்டுபோல் பாண்டி நாட்டிற்கு உரிமையாக வேண்டுமென்று கருதினான்.

  தனது நாட்டுக்கும், தனது குடிக்கும் ஏற்பட்ட பழியைத் துடைக்க உறுதி பூண்டான். சோழர்களை வெல்லுதல் அத்துணை எளிதன்று என்பதனை அவன் அறிவான். சோழப் படைகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் தனது படையைத் திருத்திப் பெருக்கினான்; புத்தம் புதிய படைக்கலங்கள் படைகளுக்கு வழங்கப்பட்டன.

  ஒருநாள், சோழன் சற்றும் எதிர்பாரா வகையில் திடீரென்று படையுடன் சென்று பூதப் பாண்டியன் தாக்கினான். திடீர்த் தாக்குதலால் சோழப்படை நிலை குலைந்தது. பாண்டியரால் யாது செய்ய முடியுமென்று இறுமாந்திருந்த சோழப்படை, பூதப் பாண்டியனது படைக்கு முன்னே நிற்க முடியாமல் சின்னாப்பின்னமாகிச் சிதறியது; வேறு வழியின்றி சோழன் படையுடன் புறமுதுகிட்டோடினான்.

  பாண்டியப் படை ஒல்லையூரைக் கைப்பற்றிக் கொண்டது. பூதப் பாண்டியன் வாகை மாலை சூடினான். பாண்டி நாட்டுக்கு நெடுநாளாக ஏற்பட்டிருந்த பழியைத் துடைத்த பூதப் பாண்டியனைப் பாண்டு நாட்டு மக்கள் புகழ்ந்து பாராட்டினர்; வெற்றி விழாக் கொண்டாடித் தங்கள் வேந்தனைப் பெருமைப்படுத்தினர்.

  பாண்டிநாட்டார் வெற்றி விழாக் கொண்டாடியதோடு நில்லாமல், என்றும் நிலைத்திருக்கக் கூடிய வெற்றிப் பெயரைப் பூதப் பாண்டியனுக்கு வழங்கினர். அது முதல் பூதப் பாண்டியன் 'ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன்' என்ற புகழ்ப் பெயரால் அழைக்கப் பெற்றான். ஒல்லையூரைப் பெற்ற பெருமிதத்தால் பூதப் பாண்டியன் செருக்குக் கொள்ளவில்லை; முன்னிலும் அடக்கமாக நடந்து கொண்டான். வீரனானவன், தன்னைப் போன்ற மாவீரர்களைப் புகழும் பழக்கத்தைக் கொண்டிருந்தான்.

  அவன் காலத்தே பொதியமலைப் பகுதியைத் திதியன் என்னும் மாவீரன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் விற்போரில் வல்லவன்; அவனது வீரத்தைப் பிறர் வாயிலாக அறிந்ததோடு, பூதப் பாண்டியன் நேரிலும் பார்த்து வியந்தான். அதனால், மாவீரனான திதியனைத் தன்னுயிர் நண்பனாகக் கொண்டான். தனக்கடங்கிய சிற்றரசனாகத் திதியன் இருந்தாலும் , பல போர்களில் அவன் செய்த உதவியைப் பூதப் பாண்டியன் மறக்கவில்லை.

  தனது வெற்றிக்கு அவனும் காரணமானவன் என்பதைப் பூதப் பாண்டியன் நன்கு உணர்ந்திருந்தான்; அவன்பால் தான் கொண்டுள்ள பற்றினையும் நன்றியறிதலையும் புலப்படுத்த எண்ணினான். என்றும் அழியாமல் நிலைத்திருக்கக்கூடிய வகையில், திதியனது ஆண்மையையும் பெருமையையும் தனது பாடல் மூலம் உலகினர்க்கு விளங்கச் செய்தான்.

  இல்லறச் செல்வியாகப் பெருங்கோப்பெண்டினையும், பெறுதற்கரிய நண்பனாகத் திதியனையும் பெற்ற பூதப் பாண்டியன் யாதொரு குறையுமில்லாமல் ஆட்சியைச் செவ்வனே நடத்தி வந்தான். இங்ஙனம், நீதி நெறி வழுவாமல் பூதப் பாண்டியன் அரசாண்டு வரும்போது, மறுபடியும் போரில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டது.

  நெடுநாளாகத் தங்கள் கையிலிருந்த ஒல்லையூரைப் பாண்டியர்கள் கைப்பற்றி விட்டார்களே என்ற ஆத்திரம் சோழர்களுக்கிருந்தது; எவ்வாறேனும் மறுபடியும் போரிட்டு ஒல்லையூரைக் கைப்பற்ற வேண்டுமென்று சோழன் நினைத்தான். ஆனால், தன்னொருவனால் மட்டும் பூதப் பாண்டியனை வெல்ல முடியாது என்பதனைச் சோழன் அறிந்திருந்தான்; அதனால், சேரனது துணையை வேண்டினான்.

  இதற்கு முன்னரே, சேரருக்கும் பாண்டியருக்கும் பகையிருந்ததால், சோழனது வேண்டுகோளை நிறைவேற்றி வைக்கச் சேரன் உடனே இசைந்தான். சோழப்படையும் சேரப்படையும் அணிவகுத்து ஒல்லையூரை நோக்கிப் புறப்பட்டன. பூதப் பாண்டியன் தன் ஒற்றர்களால், சோழப்படையும் சேரப்படையும் ஒல்லையூர் மீது படையெடுத்து வருவதை அறிந்தான்.

  ஆனால், அவன் சிறிதும் அஞ்சவில்லை. தனது படையைத் திரட்டிப் போருக்குத் தயாரானான். போருக்குப் புறப்படுமுன் படைகளையும் குடிமக்களையும் சான்றோர்களையும் பார்த்து அவன் கூறிய வஞ்சின மொழிகள் கோழைகளையும் வீரனாக்கும்.

  "என்னை எதிர்த்து வருவாரைப் போர்க்களத்தே வென்று வாகை சூடுவேன்; இஃது உறுதியானது.

  அவ்வாறு பகைவர்களைத் தோல்வியுறச் செய்யாவிட்டால், யான் என் அழகிய மனைவியைப் பிரிவேனாக; குடிமக்களால் பழிக்கப்படும் கொடுங்கோலன் ஆவேனாக.

  திதியன், மாவன், ஆந்தை, அந்துவன், சாத்தன், ஆதனழிசி, இயக்கன் போன்ற என்னரும் நண்பர்களை விட்டுப் பிரிவேனாக; வருவார்க்கு வாரிவழங்க முடியாத வறுமையை அடைவேனாக"

  இவ்வாறு வஞ்சினமுரைத்த பூதப் பாண்டியன், படையினர் ஆரவாரிக்க ஒல்லையூரை நோக்கிப் புறப்பட்டான். பாண்டியப்படை, சேர சோழப் படையுடன் மோதியது; போர் கடுமையாக இருந்தது; எனினும் பூதப் பாண்டியனது படை சேர சோழப் படைகளுக்கு முன் நிற்க மாட்டாமல் குலைந்தது.

  சோழன் மட்டும் எதிர்த்திருந்தால் நிலைமை வேறாக மாறியிருக்கும். சோழனுடன் சேரனும் சேரவே, பூதப் பாண்டியனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனினும் யானைக் கூட்டத்தே புகுந்த சிங்கத்தைப் போலவே பூதப் பாண்டியன், சேர சோழ படைகளுக்கு நடுவே புகுந்து வீரப் போராடினான். சேர சோழப் படைகள் பூதப் பாண்டியனைச் சுற்றி வளைத்துக் கொண்டன; படைவீரன் ஒருவனால் பூதப் பாண்டியன் கொல்லப் பட்டான். பூதப் பாண்டியன் புகழுடலை நிலை நிறுத்திப் பூத உடலைத் துறந்தான்.

  தங்கள் அரசன் இறக்கவே பாண்டியப் படை சிதறியது. ஒல்லையூர் சோழனுக்கு உரிமையாயிற்று. ஒல்லையூர் போரிலே உயிரிழந்த தன் கணவனை எண்ணியெண்ணி பெருங்கோப்பெண்டு மனம் உருகினாள்; கணவனையிழந்து தான் மட்டும் விதவைக் கோலம் பூண்டு வாழ விரும்பவில்லை. கணவனுடன் உயிர் துறக்கவே விரும்பினாள்.

  கணவன் உடல் எரிக்கப்படும் தீயிலேயே தானும் விழுந்து உயிர் துறக்க முடிவு செய்தாள். சான்றோர் பலர் தடுத்தும், தான் செய்த முடிவுப் படியே தீப் பாய்ந்து உயிர் நீத்தாள். தனது செயலால் பூதப் பாண்டியனது புகழை மேலும் ஓங்கச் செய்த பெருங்கோப்பெண்டின் புகழ் ஓங்குக.

 • பூதப் பாண்டியன்
 • பல்வளமுடைய பாண்டி நாட்டை அரசாட்சி செய்த பாண்டியர்களுள் கூன் பாண்டியன் என்பவனும்image ஒருவனாவான். இவனது இயற்பெயர் யாது என்று தெரியவில்லை. அவனுடைய முதுகு கூன் விழுந்திருந்ததால் கூன் பாண்டியன் என்று அழைக்கப்பட்டான்.

  கூன் பாண்டியன் அறிவு மிக்கவன். தன்னுயிர் போலவே எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துபவன். நீதியும் நேர்மையும் அவனிடத்தில் இயற்கையாகவே அமைந்திருந்தன.

  இங்கனம் நல்ல குணங்கள் பலவும் அமையப் பெற்ற கூன் பாண்டியன் மதுரை மாநகரத்தைத் தலைநகரமாகக் கொண்டு, பாண்டி நாட்டை செங்கோல் முறை தவறாமல் அரசாண்டு வந்தான்.

  கூன் பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி என்பவள், பெண்டிர்க்குரிய நற்குணங்கள் பலவும் கொண்டிருந்தாள். தனது பெயருக் கேற்பவே மங்கையருக்கெல்லாம் அரசியாகவே விளங்கினாள். கணவன் கருத்துணர்ந்து நடப்பதில் வல்லவனாகத் திகழ்ந்தாள்.

  இல்லற வாழ்க்கையும் நற்குண மனைவியும் பெற்ற கூன் பாண்டியன், அரசியல் வாழ்க்கையிலும் நெறி தவறா அமைச்சன் ஒருவனையும் பெற்றிருந்தான். குலச்சிறை என்னும் பெயருடைய அவன், கூன் பாண்டியனுக்குத் தலைமை அமைச்சனாக இருந்து ஆட்சியைத் திறமையாக நடத்தி வந்தான்.

  மங்கையர்க்கரசியாரை மனைவியாகவும், குலச்சிறையை அமைச்சனாகவும் பெற்ற கூன் பாண்டியன், யாதொரு குறையுமின்றி வாழ்ந்து வந்தான்.

  அவன், சோமசுந்திரக் கடவுளிடம் அளவில்லா அன்பு கொண்டிருந்தான். அவனைப் போலவே, அவன் மனைவியும் அமைச்சனும் சிவ பக்தியிற் சிறந்து விளங்கினர்.

  மன்னன் கோயில்களில் பூசைகள் குறைவில்லாமல் நடப்பதற்கு ஏற்பாடுகள் செய்தான். சிவனடியார்களைக் கடவுள் போல போற்றி வழிபட்டான்.

  இல்லற வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், பக்தி வாழ்க்கையிலும் மேம்பட்டு விளங்கிய கூன் பாண்டியனது ஆட்சியில் குடிமக்கள் அமைதியுடன் வாழ்ந்தனர். வறுமை என்பதே பாண்டிய நாட்டில் தலைகாட்டவில்லை; வளம் கொழிந்தது.

  தேனைச் சுற்றி எறும்புகள் மொய்ப்பதைப் போல, வளமுள்ள பாண்டி நாட்டை நோக்கி, நாலா திசையிலும் மக்கள் வந்து குடியேறினர்; பல சமயத்தைச் சார்ந்தவர்களும், பல மொழிகளைப் பேசுபவர்களும் மதுரை நகரில் நிரம்பினர்.

  அவர்களுள், அருகனைக் கடவுளாகக் கொண்டு வழிபடும் சமண சமயத்தினர் மிகுதியாக மதுரையில் குடியேறினர். சிறிது சிறிதாகச் சமணர்கள் அரசனிடம் செல்வாக்குத் தேடிக் கொண்டனர்.

  கூன் பாண்டியன் எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையுடையவன். அதனால், சமணர்களையும் பிற சமயத்தவர்களையும் ஆதரித்தான். ஆனால், அவ்வாறு ஆதரித்தது அவனுக்கே தீங்காக முடிந்தது.

  சமண சமயத்தைப் பற்றிய செய்திகளைச் சமண முனிவர்கள் வாயிலாகக் கேட்டுணர்ந்தான். சமணர்களும் அதுதான் சமயமென்று, சைவ சமயத்தைவிடச் சமண சமயம் மேலானது என்று அரசன் நம்புமாறு செய்தனர்.

  உண்மை யுணராத அரசன், மனம் மாறத் தொடங்கினான். வாழையடி வாழையாகச் சைவ சமயத்திலே வளர்ந்து வந்த பாண்டியர் குலத்திலே பிறந்த கூன் பாண்டியன், சமணரது வலையில் வீழ்ந்து விட்டான்; சைவ சமயத்தை விட்டு சமணனாக மாறினான்.

  அரசன் சமண சமயத்திற்கு மாறியதை அறிந்ததும் மங்கையர்க்கரசியாரும், குலச்சிறையாரும் புழுப்போல் துடித்தனர். சைவ சமயம் மங்கிவிடுமே என்று அஞ்சினர்.

  கூன் பாண்டியனைத் திருத்த முடியுமா? அவன் அரசனாயிற்றே? என்ன செய்வானோ? என்று எண்ணியவராய், மனதிற்குள்ளேயே பொருமினர். இருந்தாலும் அரசனுக்குத் தெரியாமல், சைவ சமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தினர். 'அரசன் எவ்வழி, குடிமக்கள் அவ்வழி' என்பார்கள். அரசன் சமண சமயத்தைத் தழுவியதை அறிந்த குடிமக்களில் பலரும் சமண சமயத்தை மேற்கொள்ளத் தொடங்கினர்; அரசன் மேல் உள்ள அச்சத்தால் சிலர் சமணராயினர்; சமணருடைய கொடுமை தாங்காமல் சமணரானோர் பலர்.

  சைவத்தில் சிறந்து விளங்கிய மதுரை மாநகரம் சமண சமயத்திற்கு அடிமைப்பட்டது. கொஞ்ச நஞ்சமிருக்கும் சைவ சமயமும் எங்கே அழிந்து விடுமோ என்று மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அஞ்சினர்.

  சமண சமய வளர்ச்சியில் கருத்தைச் செலுத்தியிருந்த கூன் பாண்டியன், போரில் ஈடுபடும்படியான நிலை ஏற்பட்டது. வட நாட்டரசன் ஒருவன், பெரும்படையுடன் கூன் பாண்டியனைத் தாக்குவதற்காகப் புறப்பட்டு வந்தான். அவன் படையெடுத்து வருவதை ஒற்றர்களால் அறிந்த கூன் பாண்டியன் தானும் போருக்குத் தயாரானான்.

  பாண்டியப் படை அணி வகுத்து நின்றது. கூன் பாண்டியன் வேப்பமாலை சூடித் தேரேறிப் புறப்பட்டான். தேர்மீது மீன்கொடி பட்டொளி வீசிப் பறந்தது; முரசு முழங்கப் பாண்டியப் படை அரசனைப் பின் தொடர்ந்தது.

  வடநாட்டுப் படையும் பாண்டியப் படையும் திருநெல்வேலியிலே சந்தித்தன; இரு பெரும் படைகளும் மோதிக் கொண்டன; பாண்டியனிடத்திலே யானைப் படை மிகுதியாக இருந்தன.

  சில நாட்கள் வரையில் முழு மூச்சோடு போரிட்டுக் கொண்டிருந்த வடநாட்டுப் படை, பாண்டியனது யானைப் படை முன் நிற்கமாட்டாமல் புறங்காட்டி யோடின; வடநாட்டுப் படையின் தோல்வியைக் கண்டு பாண்டிய வீரர்கள் தோள்தட்டி ஆரவாரித்தனர்.

  பாண்டியன், வெற்றி பெற்றதற்கு அடையாளமாக வேப்ப மாலையோடு வாகை மாலையும் சூடிக் கொண்டு மதுரையை அடைந்தான். வெற்றி வீரனாக வரும் தங்கள் அரசனை மக்கள் மகிழ்ச்சியுடன் சென்று வரவேற்றனர். மங்கையர்க்கரசியாரும் தன் கணவனின் வெற்றியை அறிந்து மகிழ்ச்சிக் கடலில் திளைத்தாள். 

  போர் முடியுற்றதால் நாட்டில் அமைதி நிலவியது. பாண்டியன் தனது கருத்தை மேலும் சமண சமய வளர்ச்சியில் செலுத்தத் தொடங்கினான். ஆங்காங்கே சமணக் கோயில்களும், சமணப் பள்ளிகளும் கட்டப்பட்டன.

  அரசன் சமண சமய வளர்ச்சியில் மிகுதியான கருத்தைச் செலுத்தியதால், சைவ சமயம் மேலும் தாழ் நிலையடையத் தொடங்கியது. மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயம் தாழ்ந்து வருவதைக் கண்டு மிகக் கவலை கொண்டார்கள்; சைவ சமய வளர்ச்சிக்கு யாது செய்வதென்று இருவரும் ஆராய்ந்தனர்.

  அப்போது சீர்காழிப் பகுதியிலே தோன்றிய திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் சைவத் தொண்டு செய்து வருவதைக் கேள்வியுற்றனர். சம்பந்தரால் சைவம் தழைக்கும் என்று நம்பினர். எனவே, அவரை மதுரைக்கு அழைப்பது என்று முடிவு செய்தனர்.

  தங்கள் நம்பிக்கைக்குரிய ஏவலாளரில் சிலரை, அரசனுக்குத் தெரியாமல் சம்பந்தரிடம் அனுப்பினர்; பாண்டி நாட்டின் சமய நிலையைப் பற்றிய உண்மையை அவருக்குச் சொல்லுமாறு ஏவலாளரிடம் கூறியிருந்தனர்.

  திருஞானசம்பந்தர் ஒவ்வோர் ஊராகச் சென்று, சிவபெருமானை வழிபட்டு வந்தார். அம்முறையில் திருமறைக்காட்டிற்குச் சென்று, வேதவனப் பெருமாளை வழிபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது, மங்கையர்க்கரசியாராலும் குலச்சிறையாராலும் அனுப்பப்பட்ட ஏவலாளர்கள், திருஞானசம்பந்தரைக் கண்டு வணங்கினர்.

  அவர்கள் வாயிலாக பாண்டி நாட்டில் சமண சமயம் வளர்ச்சி பெற்று வருவதையும், சைவ சமயம் தாழ்ந்து வருவதையும், அறிந்தார். பாண்டியன் சமண சமயத்தையும், மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சைவ சமயத்தையும் ஆதரித்து வருவதும் அவருக்குத் தெரியும்; வந்த ஏவலாளர்கள் அவரைப் பாண்டி நாட்டிற்கு வந்து, சமணர்களை வாதத்தில் வென்று, சைவ சமயத்தை ஈடேற்றுமாறு வேண்டிக் கொண்டனர். திருஞானசம்பந்தரும் அதற்கு உடனபட்டார்.

  தம்முடன் இருந்த அடியாராகிய திருநாவுக்கரசரிடம் சொல்லிவிட்டுப் பாண்டி நாட்டிற்குப் பயணமானார். அவரைப் பின்தொடர்ந்து சைவ அடியார் கூட்டம் சென்றது.

  திருஞானசம்பந்தர் அடியார்கள் கூட்டத்துடன் மதுரைக்கு அருகில் வந்து கொண்டிருந்தார். அவரது வருகையைக் கேள்வியுற்ற மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மங்கையர்க்கரசியார் திருஞானசம்பந்தரை வரவேற்றுக் கோயிலுக்கு அழைத்து வருமாறு குலச்சிறையாரை அனுப்பிவிட்டுத் தாம் நேராகக் கோயிலுக்குச் சென்றார்.

  குலச்சிறையார், மதுரைக்குப் புறத்தே தங்கியிருந்த திருஞானசம்பந்தரைச் சென்று கண்டு வணங்கி வரவேற்று அளவளாவினார்.

  குலச்சிறையார், திருஞானசம்பந்தரை மீனாட்சியம்மையைத் தரிசிப்பதற்காகக் கோயிலுக்கு எழுந்தருளுமாறு வேண்டிக் கொண்டார். அவரும் அவரது வேண்டுகோளுக்கிணங்கித் தம்முடைய திருக்கூட்டத்துடன் கோயிலுக்குச் சென்றார். முன்னமே கோயிலுக்குச் சென்று காத்திருந்த மங்கையர்க்கரசியார், சம்பந்தரைக் கண்டதும் கீழே விழுந்து பணிந்தார்.

  சம்பந்தர் சோமசுந்தரக் கடவுளையும் மீனாட்சியம்மையையும் வழிபட்டுத் தேவாரத் திருப்பதிகங்கள் பாடினார். பின்னர் எல்லோரும் ஒன்றுகூடி அளவளாவினார்கள்.

  சமணர்கள் செய்யும் கொடுமைகளையெல்லாம் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மற்றைய அடியார்களும் சம்பந்தருக்குத் தெரிவித்தனர். சமணர்களை வாதத்தில் வென்று சைவ சமயத்தை நிலை நிறுத்துமாறும், அரசனையும் சைவனாக்கித் திருநீறணியச் செய்யுமாறும் வேண்டிக் கொண்டனர்.

  சம்பந்தரும் சமணரை வாதத்தில் வெல்வதாக வாக்களித்தார். சம்பந்தர் தங்கியிருப்பதற்காக மடம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. சம்பந்தர் இறைவனைத் தொழுத பின் தம்முடைய திருக்கூட்டத்தோடு மடத்திற்குச் சென்று தங்கினார்.

  சம்பந்தர் மதுரைக்கு எழுந்தருளியதை அறிந்த சமணர்கள் கடுங்கோபங் கொண்டனர். அவருக்கு எந்த வகையிலாவது தீங்கு செய்து, மதுரையை விட்டு ஓடிப் போகுமாறு செய்ய வேண்டுமென்று திட்டமிட்டனர்.

  சமணர்கள் எல்லோரும் ஒரே கூட்டமாகப் பாண்டியனைக் காணச் சென்றனர். சம்பந்தரது வருகையால் சமண சமயம் அழிந்து விடும் என்று முறையிட்டனர். கூன் பாண்டியன் அதற்கு யாது செய்வது என்று அவர்களையே வினவினான். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால் மடத்திற்கு நெருப்பிட்டு, சம்பந்தரை மதுரையை விட்டு ஓடச் செய்வதாகக் கூறினர். சமண சமய வெறியினால், அரசனும் அதற்கு உடன்பட்டான்.

  ஞானசம்பந்தரும் அடியார்களும் தங்கியிருந்த மடத்தை நோக்கி நள்ளிரவில் சமணர்கள் சென்றனர். அப்பொழுது எல்லோரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால், மடத்தில் தீப் பற்றுமாறு செய்ய முயன்றனர். ஆனால், அவர்கள் மந்திர வித்தை சம்பந்தரையோ, அவர் தங்கியிருந்த மடத்தையோ ஒன்றும் செய்யவில்லை. சமணர்களுக்கு அச்சம் வந்து விட்டது.

  அரசன் அறிந்தால் தங்களைத் தண்டிப்பதோடு, சமண சமயத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறிவிடுவான் என்பதை உணர்ந்தனர். அதனால், தீப் பந்தங்களைக் கொண்டு திருமடத்திற்குத் தீயிட்டனர்; மடத்தை நெருப்பு எரிக்கத் தொடங்கியது.

  நெருப்புப் பரவத் தொடங்கியதும் அடியார்கள் கூச்சலிட்டனர். விழித்தெழுந்த சம்பந்தர் திருமடம் தீப்பற்றி எரிவதைக் கண்டார். சமணர்களாலேயே அச் செயல் நிகழ்ந்தது என்பதை அடியார்கள் சொல்ல அறிந்து கொண்டார். உடனே, சிவபெருமான் மீது தேவாரம் பாட, நெருப்பு இருந்த இடம் தெரியாமல் அணைந்தது.

  அரசனும் நெருப்புப் பரவுவதற்குக் காரணமாக இருந்தவனாதலால், அந்நெருப்பே, சுரநோயாக அவனைச் சென்றடைந்தது. அரசன் புழுவாய் துடித்தான்; அரசாங்க மருத்துவர்களும் சமண மந்திரவாதிகளும் விரைந்தனர். சமணர்களின் மருந்தாலும் மந்திரத்தாலும் பாண்டியனது சுரநோய் மேலும் வளர்ந்ததேயொழியச் சிறிதும் குறைந்தபாடில்லை.

  நோயினால் துடித்த பாண்டியன், தன்னுடைய நோயைத் தீர்க்க முடியாத அவர்களையெல்லாம் அப்பால் போகுமாறு வெறுப்புடன் கூறினான். மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் சம்பந்தருக்குச் செய்த தீங்கினால்தான் அந்த நோய் வந்ததென்றும், சம்பந்தர் வந்தால்தான் அந்த நோய் நீங்குமென்றும் சொல்லினர்.

  நோயைப் பொறுக்க முடியாத பாண்டியன், எப்படியாவது தனது நோய் நீங்கினால் போதுமென்று எண்ணினான்; அதனால், உடனே சம்பந்தரை அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

  சம்பந்தர் அரண்மனைக்கு எழுந்தருளினார்; சமணர்கள் அவரது வருகையை விரும்பவில்லை. அதனால், அரசனிடம் சென்று சம்பந்தர் வந்தால் சமண சமயம் அழிந்துவிடுமென்றும், அவரை வராமல் தடுக்குமாறும் வேண்டிக் கொண்டனர்.

  ஆனால், அரசன் அவர்கள் சொல்லுக்கு உடன்படவில்லை. சம்பந்தரையும் சமணர்களையும் தன்னெதிரில் ஒன்று கூடுமாறு சொல்லினன். இருவரில் எவர் தங்கள் தெய்வத் தன்மையால் தன்னுடைய நோயைத் தீர்த்தாலும், அவர்கள் சொல்வது போல் கேட்பதாகப் பாண்டியன் கூறினான். ஞானசம்பந்தரும் சமணர்களும் அதற்கு உடன்பட்டனர்.

  சமணர்கள் தங்கள் மந்திர வித்தையால் இடப்பக்கத்து நோயைத் தீர்ப்பதென்றும், சம்பந்தர் தமது வன்மையால் வலப் பாகத்து நோயைத் தீர்ப்பதென்றும், முடிவாயிற்று.

  முதலில், சமணர்கள் தங்கள் மந்திரத்தை ஓதி, மயில் தோகையால் அரசனது இடப் பக்கத்தைத் தடவினர். தடவியவுடன், நோய் குறைவதற்கு மாறாகப் பன்மடங்கு பெருகியது.

  ஞானசம்பந்தர் 'மந்திரமாவது நீறு' என்னும் தேவாரம்பாடி, அரசனது வலப்பாகத்தில் திருநீற்றினைத் தடவினார். தடவியவுடனேயே வலப்பக்க நோய் இருந்த விடம் தெரியவில்லை.

  அரசன் சம்பந்தரது பெருமையை உணர்ந்தான்; சமணர்களையெல்லாம் அவ்விடத்தைவிட்டு உடனே அகன்று விடுமாறு கட்டளையிட்டான். அவர்கள் அரசனது கட்டளைக்கு அஞ்சி உடனே சென்றுவிட்டனர்.

  அரசன் சம்பந்தரை வணங்கித் தன்னுடைய இடப்பாகத்து நோயையும் தீர்க்குமாறு வேண்டிக் கொண்டான். சம்பந்தரும் இடப் பக்கத்தில் திருநீறு தடவ , அந்நோய் மறைந்தது; நோயோடு அவனது கூனும் மறைந்தது.

  நெடுநாளாக இருந்த கூனும் சுரநோயும் நீங்கப் பெற்ற பாண்டியன், சைவ சமயத்தின் பெருமைகளை உணர்ந்தான். அன்று முதல் அவனுக்கு 'நின்ற சீர் நெடுமாறன்' என்ற பெயர் ஏற்பட்டது.

  சைவசமய வளர்ச்சியில் கருத்தைச் செலித்தத் தொடங்கினான்; சிவன் கோயில்களுக் கெல்லாம் பூசைகள் நடப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்தான். சிவனடியார்களை அன்போடு உபசரித்து வந்தான்; நீண்ட நாள் சிவத்தொண்டு செய்தபின் இறைவனது திருவடி நிழலை அடைந்தான்.

 • கூன் பாண்டியன்
 • தமிழ் இலக்கிய வரலாற்றில் அவ்வையார் என்ற பெயரில் பெண்பாற் புலவர்கள் பலரைக் imageகாண்கிறோம். சங்க காலத்தில் வாழ்ந்து, அதியமான் நெடுமான் அஞ்சியோடு நெருங்கிய நட்பு கொண்டு அவனைப் புகழ்ந்து பாடிய அவ்வையார் மற்ற அவ்வையார்களைவிடக் காலத்தால் முந்தியவர். இவர் புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் எட்டுத்தொகை நூல்களில் 59 பாடல்களை இயற்றியவர். இவர் அதியமான், தொண்டைமான், நாஞ்சில் வள்ளுவன், சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, அதியமான் மகன் பொகுட்டெழினி என்னும் பல அரசர்களைப்பற்றிப் பாடிய 31 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

  சங்க காலத்துப் புலவராகிய அவ்வையார்க்குப் பின்னர், நாயன்மார்கள் காலத்தில் (கி.பி. எட்டாம் நூற்றாண்டில்) அவ்வையார் ஒருவர் மிகுந்த சிவ பக்தியோடு வாழ்ந்ததாகவும் சிலர் கருதுகின்றனர்.

  அடுத்து, மற்றுமொரு அவ்வையார் கம்பர் ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் வாழ்ந்த காலத்தில் (கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில்) வாழ்ந்தவர். இவர், அக்காலத்துச் சோழ அரசனுடைய அவைக்களத்திலும், சிறு பகுதிகளை ஆண்ட தலைவர்களோடும் ஏழை எளியவர்களோடும் பழகியவர். இவர் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைச் சிறுவர்கள் கற்பதற்கு ஏற்ற எளிய நடையில் இயற்றியவர்.

  அடுத்து, ஞானக்குறள் என்ற ஒரு நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இந்நூலில், உயிரின் தன்மையையும் யோகநெறியையும் பற்றிய ஆழ்ந்த கருத்துகள் காணப்படுகின்றன. விநாயகர் அகவல் என்ற பக்திச் சுவை ததும்பும் நூல் அவ்வையார் என்ற ஒருவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் ஞானக்குறள் எழுதிய அவ்வையார் அல்லாமல் வேறொருவராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

  ஆகவே, தமிழ் இலக்கிய வரலாற்றில் பல அவ்வையார்கள் காணப்பட்டாலும், சங்க காலத்து அவ்வையார் காலத்தால் முந்தியவர். அவர் பாடல்கள்தான் புறநானூற்றில் அடங்கி உள்ளன. அவ்வையார் என்ற பெயர் கொண்ட புலவர்களின் வரலாறு தனியே ஆய்வு செய்தற்குரியது.

 • அவ்வையார்
 • பழங்காலத்திலேயே பாண்டியர் தங்கள் தலைநகரமாகிய மதுரையில் தமிழ்ச் சங்கம் அமைத்துத் imageதமிழை வளர்த்து வந்தனர். அவ்வாறு வளர்த்து வந்த பாண்டியருள் பலர் தமிழில் நல்ல புலமையுடையவராகவும், செய்யுளியற்றக் கூடிய திறமை பெற்றவராகவும் விளங்கினர். நெடுஞ்செழியன் என்பான் அவர்களுள் ஒருவனாவான். நெடுஞ்செழியன் என்னும் பெயரில் பாண்டியர் பலர் இருந்தனர். அதனால் வேறுபாடு தெரிவதற்காகத் தாங்கள் செய்த அருஞ் செயலைத் தங்கள் பெயருக்கு முதலில் அமைத்துக் கொண்டனர்.

  இங்கு கூறப்படும் நெடுஞ்செழியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆவான்.

  இவ் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் வீரத்தில் மேம்பட்டு விளங்கினான். அவனைக் கண்டாலே பகைவர் அஞ்சி நடுங்கினர்.

  அவன் மனைவி கோப்பெருந்தேவி என்னும் பெயருடையவள். அவள் நற்குண நற்செயல்கள் உடையவளாய், கணவன் கருத்துப்படி நடக்கும் தன்மையுடையவளாய், விளங்கினாய். சமையத்தில் அமைச்சனைப் போல ஆலோசனைக் கூறும் அரிய பண்பு அவளுடன் அமைந்திருந்தது.

  மனத்திற் கிசைந்த மனைவியைப் பெற்ற நெடுஞ்செழியன், இல்லறத்தையும் அரசாட்சியையும் இனிதே நடத்தி வந்தான். நெடுஞ்செழியனையும் கோப்பெருந்தேவியையும் மகிழ்விக்க அவ்விருவருக்கும் மகன் ஒருவன் பிறந்தான். அவனுக்கு வெற்றிவேற் செழியன் என்று பெயரிட்டு, நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர். வெற்றிவேற் செழியனும் தன் பெயருக்கு ஏற்றவாறு, எல்லா வகையிலும் வெற்றியுடன் விளங்கினான். தன் தந்தைக்குப் பல வழிகளிலும் துணை புரிந்தான்.

  அன்புள்ள மனைவியையும் அறிவறிந்த மகனையும் பெற்ற நெடுஞ்செழியன், ஒரு சமையம் போரில் ஈடுபடும்படியான நிலை ஏற்பட்டது. வடநாட்டிலுருந்து ஆரியனொருவன் பெரும் படையுடன் தமிழ் நாட்டைத் தாக்குவதற்காக வந்து கொண்டிருந்தான். நெடுஞ்செழியனின் ஒற்றர்கள் வந்து, ஆரியப் படையின் வருகையை அறிவித்தனர்.

  செய்தியைக் கேட்டதும் நெடுஞ்செழியனின் கண்கள் சினத்தால் சிவந்தன. தோள்கள் விம்மின. தமிழரது ஆண்மையை அறியாது எதிர்த்து வரும் படையை எதிர்த்தழிக்க வீறு கொண்டான். மற்றைய சேர சோழர்களின் துணையையும் அவன் நாடவில்லை. தான் ஒருவனே எதிர் நின்று போரிட்டு ஆரியப் படையை வெல்வது என்று முடிவு செய்தான்.

  ஆரியப் படை பாண்டிய நாட்டில் காலடி வைப்பதற்கு முன்னே, வரும் வழியிலேயே சென்று தாக்கினான். ஆரியப் படையை வெல்வதற்குப் பெரும்படை தேவையில்லையென்று சிறுபடையுடனே சென்றிருந்தான்.

  பாண்டியப் படை சிறிதானாலும் வலிமையில் பெரியது. இரு படைக்கும் போர் மூண்டது. ஆரியப்படை அளவில் பெரிதாக இருந்தாலும், புலிக்கு முன் நிற்க மாட்டாமல் மருண்டோடும் மான் கூட்டம்போல, பாண்டியப் படை முன் நிற்கமாட்டாமல் நாலா திசையிலும் சிதறி ஓடியது. நெடுஞ்செழியன் வெற்றி பெற்று வாகை மாலை சூடினான்.

  அவனது வீரத்தை மக்களும் புலவரும் போற்றினர். அவ் வெற்றிக்குப் பின், அவனை எல்லோரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கத் தலைப்பட்டனர். அந்தப் பெயரே அவனுக்கு நிலைத்தது.

  போரில் நெடுஞ்செழியன் ஆற்றிய தீரத்தைக் கண்ட பகைவர்கள், அவனை எதிர்ப்பதைவிட்டு அவனுடன் நட்புக் கொள்ள முயன்றனர். வீரத்தில் சிறந்து விளங்கியது போலவே, ஈகையிலும் நெடுஞ்செழியன் சிறந்து விளங்கினான். கல்வியின் அருமை பெருமைகளை அவன் நன்கு உணர்ந்திருந்தான். அதனால், தன் நாட்டு மக்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டுமென்று, அதற்கான பணியில் ஈடுபட்டான்.

  தாயொருத்தி தன் வயிற்றில் பிள்ளைகள் பல பிறந்தாலும், கல்வியிற் சிறந்த பிள்ளையிடமே மிகுந்த அன்பு காட்டுவாள். கற்றறிந்த இளைஞனையே அரசனும் விரும்பி அழைப்பான். கீழ்குலத்தான் கற்றவனாக இருந்தால், மேற்குலத்தானும் அவனிடம் சென்று அடிபணிந்து நிற்பான்.

  'இவ்வாறு, பலவகையிலும் சிறந்து விளங்கும் கல்வியை, ஆசிரியர்க்கு உதவி செய்தும், பொருள் கொடுத்தும், பணிவுடன் கற்றுக் கொள்ள வேண்டும்.'

  இக்கருத்து உள்ள பாடல் ஒன்றால், கல்வியின் அருமையை நெடுஞ்செழியன், தன் நாட்டு மக்களுக்கு மட்டுமல்லாமல், உலகினர் எல்லார்க்கும் உணர்த்தினான். அப்பாடல் விளக்கம் இங்கே காண்க:-

  புறநானூறு - 183 (கற்றல் நன்றே!)  'அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி' என்பார்கள். கல்வியில் கருத்துடையவனாய் விளங்கிய நெடுஞ்செழியனைப் போலவே, பாண்டிய நாட்டு மக்களும் கல்வியில் அக்கறை செலுத்தினர். கல்வியிலும் வளத்திலும் பாண்டிய நாடு சிறப்புற்று விளங்கியது. நெடுஞ்செழியன் தன் நாட்டு முன்னேற்றத்தையும், கல்வியில் சிறந்து விளங்கிய குடிமக்களையும் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தான்.

  நெடுஞ்செழியனுக்கு உரிய கொற்கைத் துறைமுகத்தில், ஒரு முறை விலை மதிக்க முடியாத முத்துக்கள் கிடைத்தன. அம் முத்துக்கள் உடனே அரசனுக்கு அனுப்பப்பட்டன. நெடுஞ்செழியன் இதற்கு முன், அத்தகைய முத்துக்களைப் பார்த்ததில்லை.

  மிகப் பெரியதாகவும் ஒளியுள்ளதாகவும் விளங்கிய அந்த முத்துக்களைக் கொண்டு, கோப்பெருந் தேவிக்குச் சிலம்புகள் செய்ய முடிவு செய்தான்.

  உடனே அரசாங்கப் பொற்கொல்லனை அழைத்து வரச் செய்தான். அவனிடம் முத்துக்களைக் கொடுத்து, அரசிக் கேற்ற சிலம்புகளைச் செய்து வருமாறு கட்டளையிட்டான். பொற் கொல்லனும், பணிவுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போயினான்.

  இயற்கையிலேயே பொற்கொல்லன் மிகவும் பேராசைக்காரன். அந்தப் பேராசை விலை மதிக்க முடியாத முத்துக்களைக் கண்டதும் மேலும் வளர்ந்தது. அரசனுக்குரியது என்றுகூட நினைக்கவில்லை. சில முத்துக்களை எடுத்துப் பதுக்கி வைத்துக் கொண்டான்.

  சில முத்துக்களை வைத்து அழகான சிலம்பு ஒன்று செய்தான். சில நாட்களுக்கு பின்னர் அச் சிலம்பினை எடுத்துக் கொண்டு அரசனிடம் சென்றான். அரசனைக் கண்டு மிகவும் அச்சத்தோடு வணங்கினான். தான் கொண்டு போயிருந்த சிலம்பு ஒன்றைக் கொடுத்து, மற்றொரு சிலம்பைத் திருடன் எவனோ திருடிச் சென்றுவிட்டதாகக் கூறினான்.

  ஆனால் அரசன், பொற் கொல்லனுடைய சொல்லில் நம்பிக்கைக் கொள்ளவில்லை. சினத்தோடு பார்த்தான். அரசனது சினத்தைக் கண்ட பொற் கொல்லன் அஞ்சி நடுங்கினான். இன்னும் சில நாட்களில் திருடனைக் கையும் மெய்யுமாகப் பிடித்து வருவதாகப் பணிவுடன் கூறி, விடைபெற்றுச் சென்று விட்டான்.

  அரசன் தண்டிப்பானே என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், முத்துக்கள்மேல் வைத்த ஆசையைப் பொற் கொல்லன் விடவில்லை. ஒவ்வொரு நாளும் அதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். இந் நிலையில் காவிரிப் பூம் பட்டினத்திலிருந்து கோவலன் என்பவன் தன் மனைவி கண்ணகியுடன் மதுரைக்கு வாணிகம் செய்வதற்காக வந்தான்.

  கண்ணகியின் இரண்டு சிலம்புகளில் ஒரு சிலம்பை விற்று, அதனால் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாணிகம் செய்வதென்று முடிவுடன், கோவலன் ஒரு சிலம்பைக் கையிலெடுத்துக் கொண்டு கடைத் தெருவுக்குச் சென்றான். அவ்வழியே அரசங்கப் பொற் கொல்லன் வந்து கொண்டிருந்தான். கோவலன், அவனிடம் சிலம்பைக் காட்டி, 'விற்றுத் தர முடியுமா?' என்று கேட்டான்.

  கோவலன் காட்டிய சிலம்பு, தான் அரசனுக்குச் செய்து கொடுத்த ஒரு சிலம்பைப் போலவே இருப்பதைக் கண்ட பொற் கொல்லன் மனதில் சூழ்ச்சி உருவாகியது.

  கோவலனை அங்கேயே இருக்குமாறு சொல்லிவிட்டு விரைவாக அரண்மனைக்குச் சென்று அரசனைக் கண்டு வணங்கினான். 'சிலம்பு கவர்ந்த திருடன் அகப்பட்டுக் கொண்டான்' என்று பொற்கொல்லன் சொன்னான். சிலம்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், நெடுஞ்ச்செழியன் சிறிதும் ஆராயாமல், திருடனைக் கொன்று சிலம்பினைக் கொண்டு வருமாறு காவலாளர்க்குக் கட்டளையிட்டான்.

  காவலாளர்களும் அரசன் கட்டளையை நிறைவேற்றினர். கோவலன் நீதியற்ற முறையில் கொல்லப் பட்டான். பொற் கொல்லன் இனி அச்சமில்லை என்ற எண்ணத்துடன் சென்றான்.

  கணவன் கொல்லப்பட்டான் என்ற செய்தியைக் கேட்டதும் கண்ணகி, அளவற்ற துன்பத்தை அடைந்தாள். பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்ற உணர்ச்சி அவளிடம் தலைதூக்கியது.

  நேரே அரசனிடம் சென்றாள். கையிலே ஒரு சிலம்பினை வைத்துக்கொண்டாள். அரசன், அவளது துன்ப நிலையைக் கண்டதும் காரணம் புரியாமல் விழித்தான்.

  கண்ணீருடன் வந்த கண்ணகியை 'யார்' என்று வினவினான். அக் கேள்வி, கண்ணகியைச் சினங் கொள்ளச் செய்தது. சினத்தால் சொற்களைக் கொட்டினாள்.

  'தெளிவில்லாத அரசனே! என்னை யார் என்று கேட்கிறாய்? நான் யார் என்பதை நான் கூறாமலே தெரிந்திருக்க வேண்டும். இருந்தாலும் சொல்கிறேன். சோழ நாட்டுத் தலைநகரமாகிய காவிரிப்பூம் பட்டினம் எனக்குச் சொந்த ஊர். ஒரு புறாவுக்காகத் தன்னுடலையே அரிந்து கொடுத்த சிபிச் சோழன் என்பவனும், ஒரு பசுவின் கன்றினைக் கொன்றதற்காகத் தன் மகனையே தேர்க் காலில் வைத்துக் கொன்ற மனுநீதிச் சோழன் என்பவனும் வாழ்ந்த பெருமையுடைய அவ்வூரில் மாசாத்துவான் என்னும் வணிகன் ஒருவன் இருக்கிறான். அவன் மகனாகிய கோவலனே என் கணவனாவான். பிழைப்பதற்காக உனது மதுரைக்கு வந்தோம். வந்த விடத்தில், அவனைச் சிறிதும் நேர்மையின்றிக் கொன்று விட்டாய்; இது முறையா?' என்றாள்.

  கண்ணகி கூறிய செய்திகளைக் கேட்டதும் தான் பாண்டியனுக்கு, அவள் சிலம்பு திருடியவனின் என்பது தெரிந்தது. அமைதியாக , கள்வனைக் கொல்லுதல் தனது நாட்டுச் சட்டமென்றும், அதில் தவறில்லையென்றும் பாண்டியன் கண்ணகிக்கு அறிவித்தான்.

  அது கேட்ட கண்ணகி மேலும் சினங்கொண்டாள். தன் கணவன் கள்வனல்ல என்று வாதாடினாள். பாண்டியனும் விட்டுக் கொடுக்கவில்லை. கோவலன் கள்வனல்லன் என்பதை மெய்ப்பித்துக் காட்டுமாறு நெடுஞ்செழியன் கூறினான். கண்ணகி சிறிது நேரம் சிந்தித்தாள்.

  அரசனுடைய சிலம்பின் உள்ளே உள்ளவை முத்துக் பரல்களா, மாணிக்கப் பரல்களா என்று கண்ணகி வினவினாள். அரசன் தன்னுடைய சிலம்பு முத்துப் பரல்களைக் கொண்டது என்றான். கண்ணகியோ தன் சிலம்பு மாணிக்கப் பரல்களையுடையது என்றாள். அரசனுக்கு அப்போதுதான் சிறிது நடுக்கம் ஏற்பட்டது.

  நீதியிலிருந்து தவறி விட்டோமோ என்று அஞ்சினான். உடனே, கோவலனிடமிருந்து பெற்ற சிலம்பைக் கொண்டு வருமாறு காவலாளர்க்குக் கட்டளையிட்டான்.

  காவலாளர்கள் அச் சிலம்பினைக் கொண்டு வந்து அரசன் முன் வைத்தனர். கண்ணகி அச் சிலம்பைக் கையிலே எடுத்துத் தரையில் ஓங்கி அடித்தாள். சிலம்பு உடைந்தது; அதனுள்ளிருந்து மாணிக்கப் பரல்கள் சிதறிப் பாண்டியன் முன் விழுந்தன.

  மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டியன் நடு நடுங்கினான். பொற் கொல்லனது சொல்லைக் கேட்டு, குற்றமற்றவனைக் கொன்ற தனது அறமற்ற செயலை எண்ணி யெண்ணி வருந்தினான். நீதி தவறாத பாண்டியர் குடிக்குத் தன்னால் இழுக்கு நேர்ந்துவிட்டதே என்பதை நினைத்ததும் பாண்டியன் நிலை குலைந்தான்.

  'பொற் கொல்லனுடைய சொல்லைக் கேட்ட யானோ அரசன்? இல்லை, இல்லை! யானே கள்வன். இது வரையிலும் நீதி தவறாத பாண்டியர் குலத்தில் நீதி தவறியவன் நான் ஒருவனே. இந்தச் செய்தியை மற்றைய அரசர்களது செவியில் விழுவதற்கு முன்னே நான் உயிர் துரத்தலே நலமாகும்.' என்று கூறி அரியணையிலிருந்து மயங்கிக் கீழே விழுந்தான்.

  விழுந்தவன் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டான். தன் செயலால் வளைந்த கோலை, தனது உயிரைக் கொடுத்து செங்கோலாக்கினான். பக்கத்தில் இருந்த கோப்பெருந் தேவி நடந்ததையெல்லாம் கவனித்தாள். கணவன் இறந்த பிறகு தனக்கு வேலையில்லை என்று கருதி, கணவன் சென்றவிடத்திற்குத் தானும் செல்வதென்று முடிவு செய்தாள். அவ்வளவுதான்; அவளது உயிர் அவளது உடலை விட்டுப் பிரிந்து, நெடுஞ்செழியன் சென்ற விடத்தை நோக்கிச் சென்றது.

  நெடுஞ்செழியன் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, தனது உயிரையே விட்ட பிறகும் கூட கண்ணகியின் சினம் தணியவில்லை. மதுரை மாநகரத்தையும் எரித்து ஒழிந்த பின்தான், அவளது சினம் தணிந்தது.

 • பாண்டியன் நெடுஞ்செழியன்
 • புறநானூறு, 183. (கற்றல் நன்றே!)
  பாடியவர்: ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்.
  பாடப்பட்டோன்: யாருமில்லை. 
  திணை: பொதுவியல்.
  துறை : பொருண்மொழிக் காஞ்சி.
  =====================================

  உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
  பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே;
  பிறப்போ ரன்ன உடன்வயிற்று உள்ளும்
  சிறப்பின் பாலால் தாயும்மனம் திரியும்
  ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்

  மூத்தோன் வருக என்னாது அவருள்
  அறிவுடை யோன்ஆறு அரசும் செல்லும்
  வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
  கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
  மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

  அருஞ்சொற்பொருள்:-

  உழி = இடம்
  உற்றுழி = உற்ற இடத்து
  உறு = மிக்க
  பிற்றை = பிறகு
  பிற்றை நிலை = வழிபாட்டு நிலை
  முனியாது = வெறுப்பில்லாமல்

  இதன் பொருள்:-

  உற்றுழி=====> பல்லோ ருள்ளும்

  தமக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்க்குத் தேவைப்படும் பொழுது உதவி செய்தும், மிகுந்த அளவு பொருள் கொடுத்தும், ஆசிரியரிடம் பணிவோடு, வெறுப்பின்றி கல்வி கற்றல் நன்று. ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும்

  மூத்தோன்=====> கண் படுமே

  “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட நான்கு குலத்தாருள்ளும் (பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வருணாசிரமம் கூறும் நான்கு குலத்தினருள்ளும்) கீழ்க்குலத்தில் உள்ள ஒருவன் கல்வி கற்றவனாக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவன் அவனிடம் (கல்வி கற்கச்) செல்வான்.

  பாடலின் பின்னணி:-

  இப்பாடலில், பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் கல்வியின் சிறப்பை மிக அழகாக வலியுறுத்துகிறான்.

  சிறப்புக் குறிப்பு:-

  வருணாசிரம தருமம் சங்ககாலத்திலேயே வேரூன்றத் தொடங்கிவிட்டது என்பதற்கு இப்பாடல் ஒருசான்று.

  இப்பாடலில், ஆசிரியரிடம் பணிவோடு கல்வி கற்க வேண்டும் என்று பாண்டியன் நெடுஞ்செழியன் கூறுவதைப் போல் திருவள்ளுவர், ”செல்வந்தரிடம் உதவி கோரும் எளியவர் பணிந்து நிற்பது போல் ஆசிரியரிடம் பணிந்து நின்று கல்வி கற்பவரே சிறந்தவர்; அவ்வாறு கல்லாதவர் இழிந்தவர்” என்ற கருத்தை கல்வி என்ற அதிகாரத்தில் குறிப்பிடுகிறார்.

  உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
  கடையரே கல்லா தவர். (குறள் - 395)

 • பல்வளம் உடைய நாடு பாண்டிய நாடு. அந்நாட்டின் தலைநகரம், மதுரை மாநகரம். அங்கிருந்து imageஅரசாண்டு வந்தான் பாண்டிய மரபிலுதித்த அரசனொருவன். அவன் பெயர் யாது என்பது வெளிப்படவில்லை. ஆயினும் பொதுமக்கள், அவனை பொற்கைப் பாண்டியன் என்று காரணப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.

  பொற்கைப் பாண்டியன் அறிவு, அன்பு, பண்பு, நீதி தவறாதவன். பொய், களவு, கொலை முதலியவற்றுக்குச் சிறிதும் இடமளிக்காதவன். குடிமக்களிடத்து மிக்க பற்று உடையவன். அவர்கள் நன்மையைப் பெரிதும் விரும்புபவன். அவர்களுடைய எண்ணங்களைத் தெரிந்துகொள்வதில் மிக்க ஆர்வமுடையவன். அதன் பொருட்டு இரவு நேரங்களில் நகர்ச் சோதனைக்குச் சென்றுவரும் வழக்கத்தையும் கொண்டிருந்தான்.

  ஒரு நாள் இரவு, பொற்கைப் பாண்டியன் சேவகன் போல மாறுவேடம் பூண்டு நகர்ச்சோதனை செய்யப் போனான். பெருந் தெருக்களைச் சுற்றி வந்தான். சிறிய சந்துகளிலும் நுழைந்து வந்தான். இறுதியில் பார்ப்பனர் ஒரு சேர வாழும் தெரு ஒன்றுக்குப் போனான். அந்த தெரு மிகவும் சிறிய தெரு. அதில் ஏறத்தாழ ஐம்பது வீடுகள் இருந்தன. அந்த வீடுகள் அனைத்தும் நன்கு மூடப்பட்டு இருந்தன. ஆளரவமோ, பேச்சொலியோ எதுவுமே சிறிதும் இல்லாமலும் இருந்தன. தெருவே மிகவும் அமைதியாய்க் காணப்பட்டது. ஆனால், தெருவின் இறுதியில் இருந்த ஒரு வீட்டில் மட்டும் பேச்சொலி கேட்டது.

  அந்த வீடு கீரந்தை என்னும் பார்ப்பனன் ஒருவனுடைய வீடு ஆகும். அவன் மிக வறியவன். மனைவி ஒருத்தியைத் தவிர, வேறு எந்தத் துணையும் இல்லாதவன். அரசன் அந்த வீட்டை அடைந்து மறைந்து நின்றான். உள்ளே நிகழும் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டான்.

  "கண்ணே! நான் கங்கையாறு சென்று நீராடி, காசி சென்று வாழ்க்கையை வளமுற நடத்த, வேண்டும் பொருள் தேடி வருகிறேன். அதுவரை நீ இங்கேயே இரு!" என்றான் கீரந்தை. "தாங்கள் சென்று மீளும்வரை நான் ஒருத்தியாய் இந்தக் காப்பில்லாத வீட்டில் எப்படி இருப்பேன்? அது காறும் என்னைக் காப்பாற்றுபவர் யார்?" என்று அச்சம் தோய்ந்த குரலில் கேட்டாள் அவன் மனைவி.

  அதற்கு அவன்,

  "நாட்டு மக்களைக் காப்பவன் அரசனே ஆவான். அவனது காவலுக்கு முன்னே வேறு காவல்களென்ன செய்யும்? பயனற்றவையாய் அன்றோ முடியும்? நமது அரசனும் நாட்டு மக்களின் நலிவு காணப் பொறுக்க மாட்டான். ஆகவே, அவன் உறுதியாக உன்னைக் காப்பான்." என்று மறுமொழி கூறினான்.

  காது கொடுத்து ஒற்றுக் கேட்டிருந்த அரசன் களிப்புற்றான், கூத்தாடினான், அரண்மனை சென்று நன்கு தூங்கினான். மறுநாள் பொழுது புலர்ந்தது.

  அரசன் படுக்கை விட்டு எழுந்தான். முதல் நாள் இரவு நிகழ்ந்த நிகழ்ச்சி அவனது நினைவுக்கு வந்தது. பொருள் தேடி வரச் சென்ற கீரந்தை திரும்பி வரும்வரை அவனுடைய மனைவியைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினான். அவளுக்கு மட்டும் உணவுப் பொருள்களைக் கொடுத்தனுப்பலாம் என அவன் ஒரு கணம் எண்ணினான். மறுகணம் அது தவறு. பலரும் பலவாறு கருத இடமளிக்கும் என்று கருதினான். முடிவில் அந்தத் தெருவில் உள்ள அனைவருக்குமே உணவுப் பொருள்களை அளிக்குமாறு அமைச்சனுக்கு ஆணையிட்டான். அதன்படி நாள்தோறும் நிகழ்ந்துவந்தது.

  அதோடு அரசனும் நாள்தோறும் நள்ளிரவில் மாறுவேடம் பூண்டு நகர்க் காவல் சென்று கீரந்தை மனைவிக்கு யாதோரு கேடும் நிகழாதவாறு காத்து வந்தான். இதனை அந்த ஏழைப் பார்ப்பனன் மனைவி அறியாள். நாட்கள் பல சென்றன.

  ஒரு நாள் இரவு அந்த வீட்டில் ஆண் குரல் கேட்டது. காவலுக்குச் சென்றிருந்த அரசன் இதனைக் கேட்டு திடுக்கிட்டான்; முகவும் வருந்தினான். உள்ளே இருப்பவன் கணவனோ, வேறு யாரோ என்ற ஐயம் அரசனுக்கு உண்டாயிற்று. அந்த ஐயத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு, அந்த பார்ப்பனனுடைய வீட்டுக் கதவினைத் தட்டு ஒலி செய்தான். பொருள் ஈட்டச் சென்றிருந்த பார்ப்பனன் அன்று பகலே வந்துவிட்டான். அதனை அறியான் அரசன்.

  கதவு தட்டப்படும் ஒலியினைக் கேட்ட பார்ப்பனன், வெகுண்டெழுந்து, "யாரது?" என்று அதட்டிய குரலில் கேட்டான். அவன் மனம் தீய எண்ணங்களை எண்ணியது. அதை அறிந்த அவன் மனைவி செய்வது இன்னதென்று அறியாது திகைத்தாள். அவனது தீய எண்ணத்தைத் தெளிவிக்கும் வழிவகை தெரியாது தவித்தாள்; "அரசன் காப்பான் என்று கூறினாரே அன்று. அந்த அரசன் இன்று எங்கே?" என்று அவள் கதறினாள்.

  நிலையறிந்தான் அரசன்; நெஞ்சம் துணுக்குற்றான்; திகைப்படைந்தான். "ஒரு வீட்டில் மட்டும் தட்டினால், தட்டியவன் யாரோ என்ற ஐயம் எழுமே" என்று கருதினான்; சிந்தித்தான்; தெளிவு பிறந்தது.

  உடனே, அந்தத் தெருவில் இருந்த எல்லா வீடுகளையும் தட்டி, ஒலி எழுப்பிக்கொண்டே ஓடி, அரண்மனை சேர்ந்தான். தெருப் பார்ப்பனர் அனைவரும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தனர்; "கதவைத் தட்டியவர் யார்?" என ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டனர். ஒருவராலும் இன்னார் எனக் கண்டு பிடிக்க முடியவில்லை. கள்வனாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதினர். "பாண்டிய அரசன் ஆட்சியிலும் களவு நிகழ்வதா?" எனக் கேட்டு வருத்தப்பட்டனர்.

  மறுநாள் பொழுது புலர்ந்தது. பார்ப்பனர் அனைவரும் அரண்மனை சென்றனர்; அரசனைக் கண்டனர். இரவு நடந்ததை எடுத்துரைத்து, முறை வேண்டினர். அரசன் வருந்தினான்; அமைச்சரை அழைத்து பார்ப்பனருடைய முறையீட்டை கூறினான். "அவ்வாறு கதவைத் தட்டியவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?" என்று கேட்டான்.

  அமைச்சர், "தட்டியவனைக் கண்டு பிடித்து, அவனை விசாரித்த பிறகல்லவா, அதற்கான தண்டனையைப் பற்றி எண்ண வேண்டும்?" என்றார்.

  "அதைப்பற்றிய அக்கறை உமக்கு வேண்டாம். தவறிழைத்தவனுக்குக் கொடுக்கக் கூடிய தண்டனை என்ன? அதை மட்டும் கூறும்!" என்றான்.

  அதற்கு அமைச்சர், "குற்றம் புரிந்தவன் கையை வெட்டி எறிதலே தக்க தண்டனை ஆகும்!" என்றார். உடனே அரசன் உடைவாளை உருவினான். யாரையோ வெட்டப் போகிறான் அரசன் என்று எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர். ஆனால், அரசன் தனது வலக் கையைத் தானே வெட்டி எறிந்தான்! குருதி பெருகி விழிந்தது!

  பார்ப்பனர் பயந்தனர்; நடுங்கினர். "அரசே! தாங்கள் தங்கள் கையை வெட்டிக் கொள்ளக் காரணம் என்ன?" என்று கேட்டனர். அரசன் நடந்தவற்றை விரிவாக விளக்கிக் கூறினான்.

  மன்னன் செயல் அறிந்து வியந்தனர் மக்கள்; "இவனன்றோ நீதி நெறி தவறாத நேர்மை மிக்க அரசன்!" என்று கூறி மகிழ்ந்தனர். அன்று முதல், பொன்னால் கையொன்று செய்து பொருத்திப் பொலிவுறச் செய்து, பொற்கைப் பாண்டியன் என அழைத்து வரலாயினர்.

 • பொற்கைப் பாண்டியன்
 • சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்த நாடு பாண்டிய நாடு. அதனை ஆண்ட அரசர்கள் தமிழ்ப் பற்று மிக்கவர்கள். அவர்களுள் உக்கிரப் பெருவழுதி என்பவனும் ஒருவனாவான்.image

  உக்கிரப் பெருவழுதி மூன்றாம் தமிழ்ச் சங்கத்தைக் காத்தவன். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகிய அகநானூறு என்னும் நூலைத் தொகுத்து அளித்தவன்.

  திருவள்ளுவர் தனது திருக்குறளை அரங்கேற்றிய அவைக்குத் தலைமை வகித்த தனிப்பெருமையுடையவன். அழகு தமிழில் பாட்டியற்றும் ஆற்றல் பெற்றவன்.

  தமிழ்ப் புலவர் பெருமக்களோடு இருந்து தமிழை வளர்த்தவன். அவர்கள் போற்ற வாழ்ந்தவன்; நற்பண்புகள் உடையவன்.

  இத்தகைய உக்கிரப் பெருவழுதிக்கு முன்னர்த் தமிழ்நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டிய அரசர்களிடையே ஒற்றுமை இருந்ததில்லை. பகையும் பொறாமையும் நிலைப்பெற்றிருந்தன. இவற்றால் அவர்கள் தங்களுக்குள்ளேயே இடைவிடாது போர் புரிந்து வந்தனர். அதனால் தமிழகத்தின் வாழ்வும் வனப்பும் புகழும் குன்றின.

  தமிழ் அரசர்களாகிய தம் முன்னோர் செய்த தவற்றை உணர்ந்தான் உக்கிரப் பெருவழுதி. உடனே அதனை நீக்க முடிவு செய்தான்.

  உக்கிரப் பெருவழுதி பாண்டி நாட்டை ஆட்சி செய்து வந்த காலத்தில், சேர நாட்டை மாரிவெண்கோவும், சோழ நாட்டைப் பெருநற்கிள்ளியும் ஆண்டு வந்தனர். வழுதி இவ்விருவரிடமும் பகை என்பதே இல்லாமல் பெருநட்புடையவனாய் வாழத் தொடங்கினான்.

  இவ்வாறு மூன்று அரசர்களும் ஒற்றுமையாய் வாழ்வதைக் கண்ட புலவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கோர் அளவில்லை.

  ஒரு நாள் ஒளவையார், வழுதியும் கிள்ளியும் வெண்கோவும் நட்புக் கொண்டு ஒருசேர வீற்றிருந்த காட்சியைக் கண்டு களிப்புற்றார். "இந்த ஒற்றுமை இன்று போல என்றும் இருக்காதா?" என்று எண்ணினார். மூவரும் ஒற்றுமையோடு நிலைபெற்று வாழ்வதற்கான மூதுரைகள் சிலவற்றையும் கூறி மகிழ்ந்தார். புறநானூறு 367, இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது ஒளவையார் பாடப்பட்ட பாடல்.

  இவ்வாறு பகை என்பதே இல்லாமல், இரு பெருவேந்தரோடும் நட்பு கொண்டும் ஒற்றுமையாய் வாழ்ந்து வந்த உக்கிரப் பெருவழுதிக்கு, அவனை அறியாமலேயே அவன் நாட்டில் சிறிய பகைவனொருவன் தோன்றிவிட்டான்.

  யார் அப்பகைவன்? அவன் ஒரு பெரு வீரன். ஊக்கமும் உரனும் ஒருங்கேயுடையவன். கல்வியறிவு இல்லாதவன். தீய நண்பர்களை மிகுதியாகப் பெற்றவன். முரடன். வேங்கைப் புலியைப் போன்றவன். வேங்கை மார்பன் என்ற பெயர் உடையவன்.

  வேங்கை மார்பன், இன்று காளையார் கோவில் என வழங்கும் கானப்பேர் என்னும் ஊரை ஆண்டு வந்த ஒரு சிற்றரசனாவான். இக்கானப்பேர் பாண்டி நாட்டின் நடுவே அமைந்த ஓர் ஊராகும்.

  இவன், இவ்வூரைச் சுற்றிப் பகைவரால்கூடப் பற்றிக்கொள்ள முடியாத வண்ணம் கோட்டையொன்று கட்டி, அதில் வாழ்ந்து வந்தான்.

  அக்கோட்டை நிலத்தின் எல்லையையும் கடந்து விட்டதோ என்று மதிக்கத்தக்க அளவில் ஆழமாகத் தோண்டப் பெற்ற அகழியையும், வானத்தின் எல்லையையும் கடந்து விட்டதோ என்று கருதத்தக்க அளவில் உயரமாக எடுக்கப் பெற்ற மதிலையும் உடையது.

  ஒளியும் உள்ளே நுழைய முடியாதபடி அடர்ந்து நெருங்கிய மரங்கள் செறிந்த காவற் காட்டையும், சிற்றரண்கள் பலவற்றையும் கொண்டது.

  இத்தகைய கோட்டை யொன்றினைத் தன் நாட்டில் பகைவனொருவன் கட்டி வாழ்வதை அறிந்தான் வழுதி. அவ்வாறு அவன் வாழ்வதை தன் ஆட்சிக்கே இழுக்காகும் என்று கருதினான். அதனால் அவனை நேரில் அழைத்து அறிவுரை கூறித் திருத்தலாம் என்று கருதினான். உடனே, ஒர் ஆளை அனுப்பி வேங்கை மார்பனை அழைத்து வரும்படி ஆணையிட்டான்.

  வேங்கை மார்பன் வழுதியின் அரண்மனைக்கு வந்தான். வழுதி அவனை வரவேற்றான். இருக்க இடமளித்தான். அவனிடம் எடுத்துரைக்க வேண்டியவற்றை எல்லாம் நயமாக எடுத்துரைத்தான். வேங்கை மார்பன் வழுதி கூறியவற்றையெல்லாம் பேசாது கேட்டுக் கொண்டிருந்தான். அவனது முகத்தில் விருப்பம் எள்ளளவும் இல்லை. வெறுப்பே குடி கொண்டிருந்தது. அவனது உள்ளம் வழுதியின்மீது பகை கொண்டதே ஒழிய, அவன் கூறிய நன்மொழிகளைக் கொள்ளவில்லை.

  அதனால், பாண்டியனிடம் விடை பெற்று ஊரை அடைந்தான். அடைந்ததும், தன் நண்பர்களை அழைத்தான். அவர்கள் யாவரும் கெட்டவர்கள். தீய குணம் உடையவர்கள். அவர்களிடம், உக்கிரப் பெருவழுதி கூறியவற்றைக் கூறி, மனம்விட்டுக் கலந்து பேசினான். அவர்கள் பாண்டியன் சொன்னதாக இவன் சொல்லியவற்றைக் கேட்டு எள்ளி நகையாடினார்கள். அவனுக்குப் பாண்டியன் மீது சினம் பெருகி வழியும் அளவுக்கான ஆகாத சொற்களைக் கூறி, அவனைச் சினங்கொள்ளச் செய்தார்கள்.

  சினமுற்ற வேங்கை மார்பன் செந்தமிழ் பாண்டியன் வழுதியை வெறுத்தான். அவனை எவ்வாறேனும் வெல்ல வேண்டும் என்று எண்ணி படை திரட்டினான். நண்பர்களைத் துணைக்கழைத்துக் கொண்டான். மாநகர் மதுரை நோக்கிப் புறப்பட்டான். செல்லும் வழியில் இருந்த சிற்றூர்களைச் சீரழித்துப் பொருள்களைக் கொள்ளையடித்தான். வயல் வரப்புகளைப் பாழ் செய்து ஏழை எளியவர்களைத் துன்புறுத்தினான்.

  பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இவற்றை அறிந்து சினமுற்றான். படைகளைத் திரட்டி வேங்கை மார்பனோடு போர் செய்யச் சிங்கமெனப் புறப்பட்டான். வெள்ளம்போல் திரண்டு வந்த பாண்டியனுடைய வீரஞ் செறிந்த படைக் கூட்டத்தைக் கண்டு வேங்கை மார்பன் அஞ்சி ஓடினான். பாண்டிய அரசன் வழுதி, வேங்கை மார்பனையும் அவனது படையினையும் விடாது துரத்தினான். வேங்கை மார்பனின் நாட்டையும் கைப்பற்றினான். வீரன் வேங்கை மார்பன் எவ்வளவோ முயன்று பார்த்தான். தன் நாட்டில் சிறிதளவேனும் காத்து விடவேண்டும் என்று தவியாய் தவித்தான். இறுதியில் துணைக்கு வந்த சூரத் தோழர்களுடன் ஓட்டம் பிடித்தான். வேற்றூர் சென்று சேர்ந்து, பிறருக்குப் பயந்து, கரந்துறைந்து வாழலானான்.

  நாட்கள் பல சென்றன. நாட்டை இழந்த வேங்கை மார்பனால் வறிதே இருக்க முடியவில்லை. அவற்றை எவ்வாறேனும் கைப்பற்றி விடவேண்டும் என்று இரவு பகலாக அரும் பெரும் முயற்சிகள் எடுத்துத் தோல்வியுற்றான்.

  ' உக்கிரப் பெருவழுதி பேரரசன் வழி
  வந்தவன்; பெரும் படை துணையுடையவன்.
  அவனை வெல்வதோ, அவன் கைப்பற்றிய
  எயிலை மீட்பதோ எள்ளளவும் இயலாது '

  என உணர்ந்தான், முடிவில்

  ' காய்ச்சிய இரும்பிலே தெளிக்கப்பட்ட நீரை அந்த இரும்பு உண்டுவிடும். அப்படி உண்டுவிட்ட நீரைக்கூட ஒரு வேளை மீட்டாலும் மீட்டுவிடலாம். ஆனால் உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிய எனது கானப் பேரெயிலை உறுதியாக மீட்கவே முடியாது. நான் கெட்டவர்கள் பேச்சைக் கேட்டு கெட்டழிந்தேன் '

  என்று உணர்ந்து கூறி மிகு துயர் உற்றான். உளம் வருந்தி வாழ்ந்தான். உக்கிரப் பெருவழுதியின் பேராண்மை மிக்க இவ்வெற்றிச் செயல் கண்ட மக்கள், அவனை 'கானப் பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்று பாராட்டினர்.

 • உக்கிரப் பெருவழுதி
 • (புறம் - 18, 19, 23 - 26, 76 - 79, 371, 372)       image

  தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழை வளர்த்த பெருமை பாண்டியர்களுக்குரியது. அவர்களின் தலைநகரமாக மதுரைமா நகரம் விளங்கியது. “பாண்டிய நாடு முத்துடைத்து” என்று பெரியோர் போற்றுவர். முத்தும் மணியும் விற்கக்கூடிய கடைகள் பல, மதுரைமா நகரத்தின் செல்வ வளத்தை அயலாறுக்கு அறிவித்துக் கொண்டிருந்தன. இத்தகைய செல்வ வளம் மிக்க மதுரைமா நகரைத் தலைநகரமாகக் கொண்டு, புகழ் பெற்ற பாண்டியர் பலர் ஆண்டு வந்தனர். அவருள் பசும்பூண் பாண்டியனும் ஒருவன்.

  அவன், பலவகையிலும் தன் முன்னோரைக் காட்டிலும் சிறந்து விளங்கினான். அவனை நெடுஞ்செழியன் என்றும், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்றும் சான்றோர் அழைத்தனர். பசும்பூண் பாண்டியன் மிக இளைஞனாக இருந்த போதே அவன் தந்தை இறந்து விட்டான். அரசாளும் பொறுப்பு அவனை வந்தடைந்தது. மிக மிக இளைஞனாக இருந்தும் அவன் முடிசூடிக்கொள்ள அஞ்சவில்லை. 

  இளைஞனாக இருந்தும் வில்வித்தையிலும் வாட்போரிலும் சிறந்து விளங்கினான். வீரத்தில் சிறந்து விளங்கிய பசும்பூண் பாண்டியன் அரியனையேறி அரசாளத் தொடங்கினான். அவனது ஆட்சி, நீதியாகவும் நேர்மையாகவும் நடந்தது. கல்விக் கேள்விகளிலும் சிறந்தவன் பசும்பூண் பாண்டியன். குடிமக்கள் குறையில்லாது வாழ்ந்தார்கள். கொற்கைத் துறைமுகத்திலிருந்து கிடைக்கும் முத்துகளும், பொதியமலைச் சந்தனமும் அவனைச் செழிப்புடையவனாக ஆக்கின. அவன் ஆண்ட மதுரைமா நகரமும் செல்வ வளத்தால் அழகுடன் விளங்கியது.

  சிறப்பும், மதுரையின் வளமும் கண்ட பகை வேந்தர் உள்ளத்தில் பொறாமைத் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இளைஞன்தானே என்று எண்ணி, எப்படியும் அவனை வென்றுவிடலாம் என்று நப்பாசைக் கொண்டனர். இளைஞனாகிய பசும்பூண் பாண்டியனை வெல்ல எழுவர் திரண்டனர். அவர்களில் இருவர் பேரரசர்கள். ஒருவன் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன், மற்றொருவன் சோழன், மீதி ஐவர் குறுநில மன்னர்களாவர். அவர்கள் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் முதலியோராவர்.

  இவ்வெழுவரும் ஒன்று கூடிச் சூழ்ச்சி செய்தனர். பசும்பூண் பாண்டியனை எந்த வழியிலாவது வென்றுவிட வேண்டுமென்று துடித்தனர். பெரும் படையுடன் மதுரை மீது படையெடுத்தனர். தன்னை எதிர்த்துப் பெரும் படை வருவதை ஒற்றர்களால் அறிந்த பசும்பூண் பாண்டியன் சினம் கொண்டு பொங்கி எழுந்தான். படையெடுத்து வரும் பகைவர்களை, வழியிலேயே மடக்கி அவர்களது செருக்கை அடக்க நினைத்தான்.

  வஞ்சினங் கூறிய பசும்பூண் பாண்டியன் வேப்பமாலை சூடிக் கொண்டு படை தொடர்ந்துவரப் புறப்பட்டான். பாண்டியப் படைகள் ஆரவாரித்தன. தேர்படையும், யானைப்படையும், குதிரைப்படையும், காலாட் படையும் அணிவகுத்துப் புறப்பட்டன. பகைவர்கள் தங்கள் படையுடன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தங்கியிருந்தனர். பசும்பூண் பாண்டியன் படைகளுடன் வந்து கொண்டிருப்பதை அறிந்தார்கள். அவர்களும் தங்கள் படைகளைத் தயார்படுத்திக் கொண்டனர். பசும்பூண் பாண்டியன் படையும் பகை மன்னர்கள் படையும் ஒன்றோடொன்று மோதின.

  மதயானைப் போலப் பசும்பூண் பாண்டியன் போரிக்களத்தில் புகுந்து வீரப் போரிட்டான். அவனது கைவாளுக்கு யானைகளும், குதிரைகளும், காலாட்படையினரும் மிகுதியாக இரையாயின. பகைபடையினர் பசும்பூண் பாண்டியனின் படைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பகைவர் படைகள் நாலாபக்கமும் சிதறின. பகைவர்களை விடாது ஓட ஓட விரட்டித் தாக்கினான் பசும்பூண் பாண்டியன். துரத்திச் சென்று யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையை மட்டும் சிறை செய்தான். மற்றவர்கள் தப்பிச் சென்றனர். இந்தக் காட்சியை குடபுலவியனார் தனது “எழுவரை வென்ற ஒருவன்” (புறம் – 19) என்ற பாடலில் விளக்குகிறார்.

  வெற்றி வீரனாகப் பசும்பூண் பாண்டியன் தலைநகருக்குத் திரும்பினான். தன் நாட்டு அரசன், ஏழு பேர்களையும் எதிர்த்து நின்று வெற்றி பெற்றதை அறிந்த குடிமக்களும் புலவர்களும் எதிர்கொண்டு வரவேற்றுப் புகழ்ந்தனர். அவனது வெற்றியை நக்கீரர், பொதும்பில் கிழார், ஆலம்பேரி சாத்தனர், மாங்குடி கிழார் முதலிய புலவர்கள் புகழ்ந்து பாடினர். மாங்குடி மருதனார் “மதுரைக் காஞ்சி” என்னும் பாடலில் பசும்பூண் பாண்டியனைப் போற்றிப் புகழ்ந்தார்.

  பசும்பூண் பாண்டியன் தலையாலங்கானத்துப் போரோடு அமைதியடைய விரும்பவில்லை. தமிழ்நாடு முழுவதும் தனது பெயர் பரவ வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. அதனால், தனக்குப் பணியாத பகை மன்னர்கள் மேல் அவன் போர் தொடுக்க முற்பட்டான். தமிழ் நாட்டில் அவ்வப்போது குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த கொங்கர் என்பாரை, அவர்களுக்கு உரிய கொங்கு நாட்டிலேயே சென்று வென்று அடக்கினான். சேர நாட்டின் மீது படையெடுத்து, சேரருக்குரிய முசிறித் துறைமுகத்தையும் யானைப்படையையும் அழித்து வெற்றியுடன் நாடு மீண்டான். அதன் பின்னர், குறுநில மன்னனாகிய எவ்வி என்பவனை வென்று அவனுக்குரிய முத்தூர்க் கூற்றத்தையும் மிழலைக் கூற்றத்தையும் கைப்பற்றிக் கொண்டான்.

  சென்ற இடமெல்லாம் பசும்பூண் பாண்டியனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தது. அவனை எதிர்த்து நிற்பார் யாருமில்லை. பல புலவர்கள் அவனைப் போற்றிப் பாடினார்கள். வெற்றி வீரனாகிய அவன், கொடை வீரனாகவும் விளங்கினான். புலவர்களுக்கும் பாணர்களுக்கும் வேண்டும் பொருள்கொடுத்துப் போற்றினான். தனக்கு எல்லோரும் அடங்கியிருக்க வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கில்லை. அடங்காதவரை அடக்குவதே அவனது முறை. பல போர்களிலும் போர் செய்து புண்பட்ட வீரர்களைத் தனித்தனியே சென்று கண்டு ஆறுதல் கூறி ஊக்கப்படுத்தினான். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தான். இதனால் எல்லோரும் அவனைத் தெய்வமாகவே போற்றினான்.

  பலரும் போற்றும் வண்ணம் பசும்பூண் பாண்டியன் நெடுங்காலம் பாண்டி நாட்டை ஆண்டான். குடிமக்கள் ஒரு குறையுமின்றி வாழ்ந்திருந்தனர்.

 • பசும்பூண் பாண்டியன்
 • புறநானூறு, 265. (வென்றியும் நின்னோடு செலவே!)
  பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்.
  திணை: கரந்தை.
  துறை: கையறு நிலை.
  ==================================

  ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
  ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
  போந்தைஅம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
  பல்லான் கோவலர் படலை சூட்டக்
  கல்ஆ யினையே கடுமான் தோன்றல்!

  வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
  பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
  கடும்பகட்டு யானை வேந்தர்
  ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே

  அருஞ்சொற்பொருள்:-

  நனி = மிக
  இறந்த = கடந்த
  பார் = நிலம், பாறை
  முதிர்தல் = சூழ்தல்
  பறந்தலை = பாலை நிலம், பாழிடம்
  வேங்கை = வேங்கை மரம்
  ஒள் = ஒளி
  இணர் = பூங்கொத்து
  நறுமை = மணம்
  வீ = பூ
  போந்தை = பனை
  தோடு = இளம் குருத்து ஓலை
  புனைதல் = அலங்கரித்தல், செய்தல்
  பல்லான் = பல்+ஆன்
  ஆன் = பசு
  கோவலர் = இடையர்
  படலை = மாலை
  கல் = நடுகல்
  கடு = விரைவு
  மான் = குதிரை
  தோன்றல் = தலைவன்
  வான் = மழை, ஆகாயம்
  ஏறு = இடி
  புரை – ஓர் உவமை உருபு
  தாள் = கால் அடி
  தார் = மாலை
  பகடு = வலிமை
  கடு = விரைவு
  வென்றி = வெற்றி
  ஒடுங்கா வென்றி = குறையாத வெற்றி

  இதன் பொருள்:-

  ஊர்நனி=====> தோன்றல்

  விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே! ஊரிலிருந்து வெகு தொலைவில், பாறைகள் சூழ்ந்த பாழிடத்தில், ஓங்கி உயர்ந்த வேங்கை மரத்தின் ஒளிபொருந்திய பூங்கொத்துகளைப் பனங்குருத்துக்களோடு சேர்த்துத் தொடுத்த மாலையைப் பல பசுக்களையுடைய இடையர்கள் சூட்டி வழிபடும் நடுகல்லாயினாயே! 

  வான்ஏறு=====> செலவே

  மழையுடன் தோன்றும் இடிபோன்ற வலிமையும், வண்மையும் உடைய உன் அடி நிழலில் வாழும் பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல் மலர்ந்த மலர்களாலாகிய மாலையணிந்த, விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளையுடைய வேந்தர்களின் குறையாத வெற்றியும் உன் இறப்பால் உன்னுடன் மறைந்தனவே.

  பாடலின் பின்னணி:-

  தலைவன் ஒருவன் பரிசிலர்க்குப் பெருமளவில் உதவி செய்து அவர்களைப் பாதுகாத்துவந்தான். அவன், தன் வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்து அவர்களை வெற்றிபெறச் செய்தான். இவ்வாறு பரிசிலர்களைப் பாதுகாத்து, வேந்தர்களுக்கு உறுதுணையாக இருந்த, வண்மையும் வலிமையும் மிகுந்த தலைவன் இறந்து இப்பொழுது நடுகல்லாகிய நிலையைக் கண்டு மனங்கலங்கி சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

 • புறநானூறு, 264. (இன்றும் வருங்கொல்!)
  பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார்.
  பாடப்பட்டோன்: தெரியவில்லை..
  திணை: கரந்தை.
  துறை: கையறு நிலை.
  ==================================

  பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
  மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
  அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
  இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
  கறவை தந்து பகைவர் ஓட்டிய
  நெடுந்தகை கழிந்தமை அறியாது
  இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே

  அருஞ்சொற்பொருள்:-

  பரல் = கல்
  மருங்கு = பக்கம்
  பதுக்கை = மேடு
  மரல் = ஒருவகை நார் உள்ள மரம்
  கண்ணி = மாலை
  அணி = அழகு
  பீலி = மயில் தோகை
  இனி = இப்பொழுது
  கறவை = பால் கொடுக்கும் பசு
  நெடுந்தகை = பெரியோன் (தலைவன்)
  கழிந்தமை = இறந்தது
  கடும்பு சுற்றம்

  இதன் பொருள்:-

  கற்களுள்ள மேட்டுப்பக்கத்தின் அருகில், மரத்திலிருந்து பிரித்து எடுத்த நாரால் தொடுத்த சிவந்த பூக்களுடன் கூடிய மாலையையும் அழகிய மயில் தோகையையும் சூட்டி, அவன் பெயர் பொறித்துத் தலைவனுக்கு இப்பொழுது நடுகல் நட்டுவிட்டார்களே. கன்றுகளோடு பசுக்களையும் மீட்டு வந்த தலைவன் இறந்ததை அறியாது பாணர்கள் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?

  பாடலின் பின்னணி:-

  ஒரு தலைவன், அவன் ஊரிலிருந்த பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வரும்போது போரில் இறந்தான். அவன் பெயரையும் பெருமையையும் பொறித்த நடுகல்லை, மயில் தோகையையும் பூமாலையையும் சூட்டி அலங்கரித்தனர். அவன் உயிரோடிருந்த பொழுது, பாணர்களுக்குப் பெருமளவில் உதவி செய்தவன். “அவன் நடுகல்லாகியது பாணர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? அவன் இறந்த செய்தி தெரியாமல் பாணர் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?” என்று இரங்கிப், புலவர் உறையூர் இளம்பொன் வாணிகனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.