Group activity

 • பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார். விரிச்சியூர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். அரசனுக்காக விரிச்சி கூறிய பெண் ஒருத்திக்கு அரசன் இவ்வூரை நன்கொடையாக வழங்கியிருக்கக்கூடும் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். நன்னானாகனார் என்று அழைக்கப்பட்ட மற்றொரு புலவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் விரிச்சியூர் நன்னாகனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

  பாடலின் பின்னணி: ஒருகால், உண்டாட்டு ஒன்று நடைபெற்றது. அவ்விடத்து, வீரன் ஒருவன் முறை தவறி, அரசனுக்குக் கொடுத்த கள்ளைத் தனக்குக் கொடுக்கவேண்டுமென்று கூறி வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான். அவன் செயலால், அங்கிருந்தவர்கள் சினமுற்றனர். அதைக் கண்ட புலவர் விரிச்சியூர் நன்னாகனார், “அவ்வீரன் கள் குடிப்பதில் மட்டும் முந்திக் கொள்பவன் அல்லன்; அவன் போரிலும் அப்படித்தான். ஆகவே, அவன் மீது சினம் கொள்ள வேண்டா.” என்று அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

   

  திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.

   

  துறை: பெருஞ்சோற்று நிலை. போருக்குச் செல்லும் அரசன் அவனுடன் போருக்குச் செல்லும் வீரர்களுக்குப் பெரிய விருந்தளித்தல்.

   

   

   

  வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்

  யாம்தனக்கு உறுமுறை வளாவ விலக்கி

  வாய்வாள் பற்றி நின்றனென் என்று

  சினவல் ஓம்புமின்; சிறுபுல் லாளர்!

  5 ஈண்டே போல வேண்டுவன் ஆயின்

  என்முறை வருகஎன்னான்; கம்மென

  எழுதரு பெரும்படை விலக்கி

  ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.

   

  அருஞ்சொற்பொருள்:

   

  1. ஏந்திய = எடுத்த; தீ = இனிமை; தண் = குளிர்ந்த; நறவம் = மது. 2. முறை = வரிசை, ஒழுங்கு; வளாவல் = கலத்தல். 3. வாய்வாள் = தப்பாமல் வெட்டும் வாள். 4. ஓம்புதல் = தவிர்தல்; புல்லாளர் = குறைந்த ஆண்மையுடைவர்கள் ( வீரம் குறைந்தவர்கள்). 5. ஈண்டு = இவ்விடம். 6. கம்விரைவுக் குறிப்பு.

   

  கொண்டு கூட்டு: சிறுபுல்லாளர், சினவல் ஓம்புமின்; வேண்டுவன் ஆயின், ”என்முறை வருகஎன்னான், கம்மென விலக்கி நிற்கும் ஆண்தகை யன்னே எனக் கூட்டுக.

   

  உரை: ”அரசனுக்குக் கொடுப்பதற்காக முகந்து எடுத்த இனிய குளிர்ந்த கள்ளை நாங்கள் முறைப்படிக் கலந்து கொடுத்தோம். இவன், அதை மறுத்துத், தன் குறிதவறாத வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான்என்று அவன் மீது சினம் கொள்ளாதீர்கள். வீரத்தில் அவனைவிடக் குறைந்தவர்களே! இங்கே எவ்வாறு வீரத்தோடு அவன் வாளைப் பற்றினானோ அதுபோல் போர்க்களத்திலும் செய்வான்; ”எனக்குரிய முறை வரட்டும்.” என்று காத்திருக்காமல், விரைந்து முன்னே எழுகின்ற பெரிய படையைத் தடுத்து விலக்கி அங்கே நிற்கும் வீரம் (ஆண்மை)உடையவன் அவன் என்பதை அறிவீர்களாக.

   

  சிறப்புக் குறிப்பு: “அரசனுக்கு முன்னதாக, எனக்குக் கள்ளைத் தருக.” என்று கூறியவன் வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன். அவன் போர்க்களத்தில் விரைந்து சென்று எதிர்த்துவரும் பெரும்படையை விலக்கிப் போரிடும் பேராண்மையுடையவன். அவன் சிறப்பை அறியாமல் அவன் மீது சினம் கொண்டவர்களின் அறியாமையைக் கருதி, அவர்களைச்சிறுபுல்லாளர்என்று புலவர் குறிப்பிடுகிறார்.

 • பாடியவர்: நெடுங்களத்துப் பரணர். இவர் பெயர் பரணர். இவர் திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே காவிரிக்கரையின் தென்கரையிலுள்ள நெடுங்களம் என்ற ஊரைச் சார்ந்தவர் என்றும், பரணர் என்ற பெயருடைய புலவர் மற்றொருவர் சங்க காலத்தில் இருந்ததால், இவரை அவரிடமிருந்து வேறுபடுத்துவதற்காக இவர் நெடுங்களத்துப் பரணர் என்று அழைக்கப்பட்டதாகவும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஏடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து என்றும் பின்னர் நெடுங்கழுத்து என்றும் திரிந்தது என்று கருதப்படுகிறது. காலப்போக்கில், இவர் நெடிய கழுத்துடையவராக இருந்ததால் இவர் நெடுங்கழுத்துப் பரணர் என்ற அழைக்கப்பட்டதாக ஒருகதையும் தோன்றத் தொடங்கியது என்றும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.

  பாடலின் பின்னணி: ஒருகால், அரசன் ஒருவன் தன் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்குப் படை திரட்டினான். அரசன் ஆணைப்படி வீரர்கள் பலரும் கரந்தைப் போருக்குப் புறப்பட்டனர். வீரர்கள் போருக்குப் போகுமுன், அவர்களுள் சிறப்புடைய வீரன் ஒருவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டு தான் அணிந்திருந்த பலவடங்களுடைய மாலையை அவ்வீரனுக்கு அரசன் அணிவித்தான். அதைக்கண்டவர்கள் அவ்வீரனின் மனைவியிடம் அரசன் அவள் கணவனுக்குத் தன் மாலையை அணிவித்ததைத் தெரிவித்தனர். பின்னர், அவ்வீரன் போரில் இறந்தான். அவன் மனைவி அவனைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். அரசன் அணிவித்த மாலையை அவள் கணவன் அணிந்திருப்பதைக் கண்டாள். தன் கணவன் இறந்ததால் தான் வருந்துவதைப் போலவே அரசனும் வருந்துவானாக என்று அவள் கூறுவதாக இப்பாடலில் நெடுங்களத்துப் பரணர் கூறுகிறார்.

   

  திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

   

  துறை: வேத்தியல். வீரர்கள் அரசனுடைய பெருமையைக் கூறுதல்.

   

   

  சிறாஅஅர்! துடியர்! பாடுவன் மகாஅஅர்

  தூவெள் அறுவை மாயோற் குறுகி

  இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்

  விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்;

  5 என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே;

  கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை

  மணிமருள் மாலை சூட்டி அவன்தலை

  ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.

   

  அருஞ்சொற்பொருள்:

   

  1. சிறாஅஅர் = சிறுவர்; துடியர் = துடி என்னும் பறயை அடிப்பவர்; மகாஅஅர் = மக்கள். 2. தூ = தூய்மை; வெள் = வெண்மையான; அறுவை = ஆடை; மாயோன் = பெரியவன் (கரியவன்). 3. இரு = பெரிய; இரும்புள் = பெரிய பறவை; பூசல் = ஆரவாரம்; ஓம்புதல் = தவிர்தல், நீக்கல். 4. விளரி = ஒரு பண்; கொட்பு = சுழற்சி; கடிதல் = ஓட்டுதல். 5. விதுப்பு = நடுக்கம்; கொன் = பயனின்மை (எதுவும் இல்லாமல் இருத்தல்). 7. மருள் = மயக்கம் (கலத்தல்). 8. காழ் = மணிவடம்; மலைதல் = அணிதல்.

   

  உரை: சிறுவர்களே! துடி அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற பாணர்களே! தூய வெள்ளாடை உடுத்திய கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள பெரிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும் விளரிப் பண்ணைப் பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் அவனுடலை நெருங்கவிடாமல் ஓட்டுவேன். வேந்தனுக்காக எந்தக் காரணமுமின்றித் தன் உயிரைத் தர விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த பலமணிகள் கலந்த மாலையை அணிவித்து என் கணவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டான். என் தலைவன் இறந்ததால் நான் வருத்தத்தோடு நடுங்குவதைப்போல் அவ்வேந்தனும் வருந்தி நடுங்கட்டும்.

   

  சிறப்புக் குறிப்பு: போருக்குச் செல்லும் வீரர்கள் வெண்ணிற ஆடை அணிந்து செல்வது மரபு என்பது இப்பாடலிலிருந்தும், ”வெளிது விரித்து உடீஇஎன்று ஒக்கூர் மாசாத்தியார் பாடல் 279-இல் கூறியிருப்பதிலிருந்தும் தெரியவருகிறது.

  • தமிழ் முனிவர்
   • 5/5 (1 votes)
   • தமிழ் முனிவர்
    • 5/5 (1 votes)
   • பெயர்: தாயனார்
    குலம்: வேளாளர்
    பூசை நாள் :தை திருவாதிரை
    அவதாரத் தலம்:கணமங்கலம்
    முக்தித் தலம்:கணமங்கலம்

    வரலாறு சுருக்கம்:

    சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

    அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார். இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.

    செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.

    இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.

    இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார்.

    முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், பயன் இல்லை கூடையிற் கொண்டவை எல்லாம் கமரிற் (நிலத்திற்) சிந்தின, அது கண்டு தாயனார், “இனி அங்கு ஏன் போதல் வேண்டும்?” என வருந்தினார்.

    “அளவில்லாத தீமையுடையேன், இறைவன் அமுது செய்யும்பேறு பெற்றிலேன்” என்று உறுபிறப்பினை அரிவார் போன்று அரிவாள் கொண்டு உள்ளந்தண்டு அறும்படி கழுத்தினை அரியத்தொடங்கினார்.

    அப்பொழுது கமரின்றும் அம்பலத்தாடும் ஐயரது வீசிய கையும், மாவடு அருந்தும் “விடேல் விடேல்” என்று ஓசையும் உடனே ஒருங்கு எழுந்தன. இறைவரது திருக்கை அன்பரது கழுத்தரியும் திண்ணிய கையினைப் பிடித்துக் கொள்ளவே, அவரும் அச்செயல் தவிர்த்தனர். அரிந்த ஊறும் நீங்கியது.

    அன்பனார் அஞ்சலி கூப்பி நின்று “அடியேனது அறிவில்லாமையைக் கண்டு என் அடிமை வேண்டிக் கமரின் வந்து இங்கு அமுது செய்தருளும் பரனே போற்றி” என்று பலவாறு துதித்து வணங்கினார். இறைவர் இடப வாகனராய்த் தோன்றி ‘நீ புரிந்த செய்கை நன்று! உன் மனைவியுடனே கூட நம் உலகில் என்றும் வாழ்வாயாக!” என்று அருளிச் செய்து, அவர் உடனே அடிசேர, திரு அம்பலத்தில் எழுந்தருளினார்.

    தாயனவர் தம் கழுத்தை அரிவாள் பூட்டி அறுத்த காரணத்தால் அரிவாட்டாய நாயனார் எனும் திருநாமத்தைப் பெற்றார். 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்

   • பெயர்: அமர்நீதி நாயனார்
    குலம்: வணிகர்
    பூசை நாள்: ஆனி பூரம்
    அவதாரத் தலம்: பழையாறை
    முக்தித் தலம்: திருநல்லூர்

    வரலாறு: சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.

    இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல கூறினார்.

    பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார் ஈசன்.

    அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார்.

    பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று ஈசன் பெருமான் கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம் செய்வதர்க்கு செல்கிறார்.

    அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.
    ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியாக வேடம் கொண்ட ஈசன் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி(மறையும்) செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார்.

    அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார்.

    அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார்.

    அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல...

    அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

    அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்
    போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்கிறார்.

    அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார்.

    பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார்.

    அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார்.

    அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது. அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.

    அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.

    அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார்.

    அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது.

    அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார்.

    பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.

    அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார்.

    ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன.

    அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;

    தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார்.

    அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள். அமர்நீதிநாயனாரும் 63 நாயன்மார்களில் ஒருவராக மாறினார்.

   • பெயர் : அப்பூதியடிகள் நாயனார்
    குலம் : அந்தணர்
    பூசை நாள் :தை சதயம்
    அவதாரத் தலம் :திங்களூர்
    முக்தித் தலம் :திங்களூர்

    வரலாறு:

    சோழமண்டலத்திலே, திங்களுரிலே பிராமணகுலத்திலே, பாவங்கள் என்று சொல்லப்பட்டவைகள் எல்லாவற்றையும் நீக்கினவரும், புண்ணியங்களென்று சொல்லப்படவைகள்
    எல்லாவற்றையும் தாங்கினவரும், சிவபத்தி அடியார்களில் சிறந்தவருமாகிய அப்பூதியடிகணாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

    அவர் சிவானுபூதிமானாகிய திருநாவுக்கரசுநாயனாருடைய மகிமையைக் கேள்வியுற்று, அவர்மேலே மிக அன்பு கூர்ந்து, தம்முடைய வீட்டினுள்ள அளவைகள் தராசுகள் பிள்ளைகள் பசுக்கள் எருமைகள் முதலிய எல்லாவற்றிற்கும் இந்நாயனாருடைய பெயரையே சொல்லிவருவார்.
    இன்னும் அவர் மேலாசையினாலே, திருமடங்கள் தண்ணீர்ப்பந்தர்கள் குளங்கள் திருநந்தனவனங்கள் முதலியனவற்றை அந்நாயனார் பெயரினாற் செய்து கொண்டிருந்தார்.

    இருக்குநாளிலே, அத்திருநாவுக்கரசு நாயனார் திருப்பழனமென்னும் ஸ்தலத்தை வணங்கிக்கொண்டு பிறதலங்களையும் வணங்கும்பொருட்டு, அந்தத் திங்களுருக்குச் சமீபமாகிய வழியிலே செல்லும்பொழுது, ஒரு தண்ணீர்ப்பந்தரை அடைந்து, திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயர் எங்கும் எழுதப் பட்டிருத்தலைக் கண்டு, அங்கு நின்றவர்கள் சிலரை நோக்கி, "இந்தத் தண்ணீர்ப்பந்தரை இப்பெயரிட்டுச் செய்தவர்யாவர்" என்று வினாவினார்.
    அவர்கள் "இப்பந்தரைமாத்திரமன்று, இவ்விடத்தெங்கும் உள்ள அறச்சாலைகள், குளங்கள், திருநந்தனவனங்கள் எல்லாவற்றையும் அப்பூதியடிகணாயனார் என்பவர் இத்திருநாவுக்கரசுநாயனார் என்னும் பெயரலேயே செய்தனர்" என்றார்கள்.

    அதைத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டு, "இங்ஙனஞ் செய்தற்குக் காரணம் யாதோ" என்று நினைந்து, அவர்களை நோக்கி, "அவர் எவ்விடத்தில், இருக்கின்றவர்" என்று வினாவ; "அவர் இவ்வூரவரே இப்பொழுதுதான் வீட்டுக்குப்போகின்றார், அவ்வீடும் தூரமன்று சமீபமே" என்றார்கள்.

    உடனே திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகணாயனாருடைய வீட்டுத்தலைக்கடைவாயிலிற் செல்ல, உள்ளிருந்த அப்பூதிநாயனார் சிவனடியார் ஒருவர் வாயிலில் வந்து நிற்கின்றார் என்று கேள்வியுற்று விரைந்து சென்று, அவருடைய திருவடிகளிலே நமஸ்கரிக்க; அவரும் வணங்கினார்.

    அப்பூதிநாயனார் "சுவாமீ! தேவரீர் இவ்விடத்திற்கு எதுபற்றி எழுந்தருளினீர்" என்று வினாவினார்.
    திருநாவுக்கரசு நாயனார் 'நாம் திருப்பழனத்தை வணங்கிக்கொண்டு வரும்பொழுது, வழியிலே நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரைக் கண்டும் அப்படியே நீர் செய்திருக்கின்ற பிறதருமங்களைக்கேட்டும்' உம்மைக் காண விரும்பி, இங்கே வந்தோம்" என்று சொல்லி, பின்பு, "சிவனடியார்கள் பொருட்டு நீர் வைத்த தண்ணீர்ப்பந்தரிலே உம்முடைய பெயரை எழுதாது வேறொருபெயரை எழுதியதற்குக் காரணம் யாது" என்று வினாவினார்.

    அப்பூதிநாயனார் "நீர் நல்லவார்த்தை அருளிச்செய்திலீர், பாதகர்களாகிய சமணர்களோடு கூடிப் பல்லவராஜன் செய்த விக்கினங்களைச் சிவபத்தி வலிமையினாலே ஜயித்த பெருந்தொண்டரது திருப்பெயரோ வேறொருபெயர்" என்று கோபித்து, பின்னும், பரமசிவனுக்குத் திருத்தொண்டு செய்தலாலே இம்மையினும் பிழைக்கலாம் என்பதை என்போலும் அறிவிலிகளும் தெளியும் பொருட்டு அருள்புரிந்த திருநாவுக்கரசுநாயனாருடைய திருப்பெயரை நான் எழுத, நீர் இந்தக் கொடுஞ்சொல்லை நான் கேட்கும்படி சொன்னீர். கற்றோணியைக்கொண்டு கடல்கடந்த அந்த நாயனாருடைய மகிமையை இவ்வுலகத்திலே அறியாதார் யாருளர்! நீர் சிவவேடத்தோடு நின்று இவ்வார்த்தை பேசினீர். நீர் எங்கே இருக்கிறவர்? சொல்லும்" என்றார்.

    திருநாவுக்கரசுநாயனார் அவ்வப்பூதியடிகளுடைய அன்பை அறிந்து, "ஆருகதசமயப் படுகுழியினின்றும் ஏறும் பொருட்டுப் பரமசிவன் சூலைநோயை வருவித்து ஆட்கொள்ளப்பெற்ற உணர்வில்லாத சிறுமையேன் யான்" என்று அருளிச்செய்தார்.
    உடனே அப்பூதிநாயனார், இரண்டு கைகளும் சிரசின்மேலே குவிய, கண்ணீர் சொரிய, உரை தடுமாற, உரோமஞ்சிலிர்ப்ப, பூமியிலே விழுந்து திருநாவுக்கரசுநாயனாருடைய ஸ்ரீபாதாரவிந்தங்களைப் பூண்டார்.

    திருநாவுக்கரசுநாயனார் அப்பூதியடிகளை எதிர்வணங்கி எடுத்தருள, அப்பூதியடிகள் மிகக் களிப்படைந்து கூத்தாடினார்; பாடினார்; சந்தோஷமேலீட்டினால் செய்வது இன்னது என்று அறியாமல், வீட்டினுள்ளே சென்று, மனைவியாருக்கும் பிள்ளைகளுக்கும், பிறசுற்றத்தார்களுக்கும் திருநாவுக்கரசுநாயனார் எழுந்தருளிவந்த சந்தோஷ சமாசாரத்தைச் சொல்லி, அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, நாயனாரை வணங்கும்படி செய்தார்.அவரை உள்ளே எழுந்தருளுவித்து, பாதப்பிரக்ஷாளனஞ் செய்தார்.

    அங்ஙனம் செய்த தீர்த்தத்தை அவர்களெல்லாரும் தங்கண்மேலே தெளித்து, உள்ளும் பூரித்தார்கள். நாயனாரை ஆசனத்தில் இருத்தி, விதிப்படி அருச்சனை செய்து, "சுவாமீ, தேவரீர் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்திக்க; அவரும் அதற்கு உடன்பட்டருளினார்.
    அப்பூதிநாயனார் திருவமுது சமைப்பித்து, தங்கள் புத்திரராகிய மூத்ததிருநாவுக்கரசை வாழைக் குருத்து அரிந்துகொண்டு வரும்பொருட்டு அனுப்ப; அவர் விரைந்து தோட்டத்திற்சென்று, வாழைக் குருத்து அரியும்பொழுது, ஒரு பாம்பு அவருடைய கையிலே தீண்டி, அதனைச் சுற்றிக்கொண்டது.

    அவர் அதை உதறிவீழ்ந்து, பதைப்புடனே அது பற்றிய வேகத்தினாலே வீழுமுன் கொய்த குருத்தை வேகத்தோடு கொண்டோடி வந்து, விஷம் முறையே ஏறித்தலைக்கொண்ட ஏழாம்வேகத்தினாலே பல்லுங் கண்ணும் சரீரமும் கருகித் தீய்ந்து உரை குழறி மயங்கி, குருத்தைத் தாயார்கையில் நீட்டி, கீழே விழுந்து இறந்தார்.

    அதுகண்டு, தந்தையாரும் தாயாரும் "ஐயோ! இது தெரிந்தால் இனி நாயனார் திருவமுது செய்யாரே" என்று துக்கித்து, சவத்தை வீட்டுப் புறத்து முற்றத்தின் ஓர்பக்கத்திலே பாயினால் மறைத்து வைத்துவிட்டுனர்
    அப்பமூர்த்தியிடத்திற்சென்று "சுவாமி, எழுந்து வந்து திருவமுது செய்தருளவேண்டும்" என்று பிரார்த்தித்தார்கள் அப்பமூர்த்தி எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு, வேறோராசனத்தில் இருந்து, விபூதி தரித்து, அப்பூதிநாயனாருக்கும் அவர் மனைவியாருக்கும் விபூதி கொடுத்து; புதல்வர்களுக்கும் கொடுக்கும்போது, அப்பூதிநாயனாரை நோக்கி "நாம் இவர்களுக்கு முன்னே விபூதி சாத்தும்படி உம்முடைய சேட்டபுத்திரரை வருவியும்" என்றார்.

    அப்பூதிநாயனார் "இப்போது அவன் இங்கே உதவான்" என்றார். அப்பமூர்த்தி அதைக் கேட்டவுடனே சிவபிரானுடைய திருவருளினாலே தம்முடைய திருவுள்ளத்திலே ஒரு தடுமாற்றத் தோன்ற, அப்பூதிநாயனாரை நோக்கி, "அவன் என்செய்தான்? உண்மை சொல்லும்" என்றார்.

    அப்பூதிநாயனார் அஞ்சி நடுங்குற்று, வணங்கி நின்று, நிகழ்ந்த சமாசாரத்தை விண்ணப்பஞ்செய்தார். அப்பமூர்த்தி அதைக்கேட்டு, "நீர் செய்தது நன்றாயிருக்கின்றது; இப்படி வேறியார் செய்தார்" என்று சொல்லிக்கொண்டு எழுந்து, சிவாலயத்துக்குமுன் சென்று சவத்தை அங்கே கொணர்வித்து, விஷத்தை நீக்கியருளும் பொருட்டுப் பரமசிவன்மேலே திருப்பதிகம்பாடினார்.

    உடனே அப்புத்திரர் உயிர்பெற்று எழுந்து; அப்பமூர்த்தியுடைய திருவடிகளிலே விழுந்து நமஸ்கரிக்க; அப்பமூர்த்தி விபூதி கொடுத்தருளினார். அப்பூதிநாயனாரும் மனைவியாரும் தங்கள் புத்திரா பிழைத்தமையைக் கண்டும் அதைக்குறித்துச் சந்தோஷியாமல், நாயனார் திருவமுதுசெய்யாதிருந்தமையைக் குறித்துச் சிந்தை நொந்தார்கள்.

    அப்பமூர்த்தி அதனை அறிந்து, அவர்களோடும் வீட்டிற்சென்று, அப்பூதி நாயனாரோடும் அவர் புத்திரர்களோடும் ஒருங்கிருந்து திருவமுது செய்தருளினார். அப்படியே சிலநாள் அங்கிருந்து, பின் திருப்பழனத்திற்குப் போயினார்.

    அப்பூதியடிகள் சைவசமயாசாரியராகிய திருநாவுக்கரச நாயனாருடைய திருவடிகளைத் துதித்தலே தமக்குப் பெருஞ் செல்வமெனக்கொண்டு வாழ்ந்திருந்து, சிலகாலஞ் சென்றபின் பரமசிவனுடைய திருவடிகளை அடைந்தார். 63 நாயன்மார்களில் ஒருவராக ஈசன் அருளினார்.

   • பெயர் : அதிபத்த நாயனார்
    குலம் : பரதவர்
    பூசை நாள் :ஆவணி ஆயில்யம்
    அவதாரத் தலம் :திருநாகை
    முக்தித் தலம் :திருநாகை

    வரலாறு:

    சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார்.

    சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார். இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார்.

    மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார்.
    இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள்.

    அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு, "இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார்.

    அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள; அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.

   • தமிழகத்தில் கி.பி 5 மற்றும் 6ஆம் நூற்றாண்டில் பௌத்த மதத்தைப் புறம் தள்ளி சைவம் வளர்ச்சி பெற்றது. இவ்வளர்ச்சி சைவ பிரிவைச் சார்ந்த நாயன்மார்களின் பங்களிப்பு என்பது சிறப்புடையதாகும். நாயன்மார்கள் என்ற சொல் தலைவன் என்ற வகையில் பொருள் கொள்ளப்படுகிறது. சைவத்தில் நாயன்மார்கள் என்போர் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தர மூர்த்தி நாயன்மாரின் திருத்தொண்டர் தொகையின் அடிப்படையில் அறுபத்து இரண்டு பேர்கள் ஆவர் என்று விளக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் சுந்தரரின் பெயர் இணைக்கப்பட்டு அறுபத்து மூன்று நாயன்மார்களாகக் கருதப்பட்டனர். கி.பி 1132க்கும் கி.பி 1150க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த இரண்டாம் குலோத்துங்கனின் காலத்தில் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார். இப்புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாறு அவர்களின் பதிகங்கள் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றுள்ளது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் காரைக்கால் அம்மையார் என்பவர் காலத்தால் முந்தைய நாயன்மார் ஆவார். இருப்பினும் அப்பர் என்றழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் மற்றும் சம்பந்தர் என்று அழைக்கப்பட்ட திருஞான சம்பந்தர் காலத்திற்கு முன்னர் பதினான்கு நாயன்மார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    திருமுறைகள் :

    சைவ சமயத்தில் பன்னிரு திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகள் திருஞான சம்பந்தரால் இயற்றப்பட்டன. பார்வதி தேவியிடமிருந்து ஞானப்பால் அருந்தி தோடுடைய செவியன் என்ற தேவாரப் பாடலைப் பாடியவர் ஆவார். இவர் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனின் சம காலத்தைச் சேர்ந்தவர் ஆவார். பன்னிரு திருமுறைகளில் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் திருமுறை எனப்படும் தேவாரம் அப்பர் எனப்படும் திருநாவுக்கரசரால் இயற்றப்பட்டதாகும். இவர் திருஞானசம்பந்தரால் அப்பர் எனப் பெயர் பெற்றார். தர்மசேனர் என்ற இயற்பெயர் பெற்ற இவர் சூலை நோயால் அவதியுற்ற போது தமது சகோதரி திலகவதி சிவனை வழிபட்டதால், நோய் குணமாகியது. அதன் தொடர்ச்சியாகச் சிவன் இவரை நாவுக்கரசர் என்று அழைத்து தேவாரம் பாடச் பணித்தாகப் புராணங்களில் காணப்படுகிறது. இவர் பாடிய பதிகத்தால் திருமறைக்காடு என அழைக்கப்படும் வேதாரண்யம் கோயிலின் கதவு திறந்ததாக அவ்வூரின் தல புராணத்தின் வாயிலாக அறியமுடிகிறது.

    கி.பி 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் அறுபத்து மூவரில் புகழ்பெற்ற நாயன்மார் ஆவார். இவர் இயற்றிய திருத்தொண்டர் புராணம் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறிடும் ஓர் கருவூலம் எனலாம். இவரின் திருமணத்திற்கு சிவன் தூது சென்றார் என்றும். இவர் தம்பிரான் தோழர் என்றும் அழைக்கப்பட்டதாக புராணங்களில் காணப்படுகிறது. சுந்தரர் தமது திருவெண்ணை நல்லூர் பதிகத்தில் சிவனை ‘பித்தா” என அழைத்து இறைவனின் நெருக்கத்தைப் பெற்றார் என விளக்கப்பட்டுள்ளது. மேலும், இவரும் கேரள மன்னன் சேரமான் பெருமாளும் திருக்கயிலாயம் செல்ல சிவன் தமது ரிஷப ஊர்தியை அனுப்பியதாகப் புராண நிகழ்வின் பதிவுகளில் காணப்படுகின்றன. மேலும் இந்நிகழ்வு, முதலாம் இராஜராஜனால், தஞ்சை பெருவுடையார் கோயிலில் கருவறையின் உட்புறச்சுவர் பகுதியில் சுவரோவியமாகத் தீட்டப்பட்டுள்ளது.

    படிமக்கலை் :

    கி.பி 9ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் என்ற நாயன்மார் திருவாசகம் மற்றும் திருக்கோவையார் ஆகியவற்றைப் படைத்தார். இவ்விரண்டும் பன்னிரண்டு திருமுறைகளில் எட்டாவது திருமுறையாகும். மேற்கூறிய மாணிக்கவாசர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் நாயன்மார்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சைவ ஆலயங்களில் காணப்படும் நாயன்மார்களின் படிமங்கள் மாறுபட்ட கலை அமைதியுடன் காணப்படும். இதில் அப்பரின் படிமம் முற்றிலும் மழிக்கப்பட்ட தலையுடன் கைகளை உயர்த்தி கூப்பிய நிலையில் அமைக்கப்பட்டும் ஞானசம்பந்தரின் படிமம் குழந்தை வடிவத் தோற்றத்துடன் வலது கையில் தாளக்கட்டையும், இடது கையில் கிண்ணமும் அமைக்கப்பட்டிருக்கும். சுந்தரமூர்த்தி நாயனாரின் படிமம் தலையில் முடிகளைச் கற்றையாக வைத்து கையில் ஓர் குச்சியை ஏந்திய நிலையில் அல்லது மழிக்கப்பட்ட தலையுடன் இரு கைகளையும் மார்பின் மீது ஒன்றன் மீது ஒன்றாக கிடத்திய நிலையில் அமைந்திருக்கும். மாணிக்கவாசகரின் படிமம் மழித்த தலையுடனோ அல்லது சுருட்டப்பட்ட தலை முடியுடனோ அமைக்கப்படும். வலது கை உபதேசிக்கும் முத்திரையுடனும் இடது கை ஓலைச் சுவடியை ஏந்திய வண்ணமாக அமைக்கப்படும்.

    கி.பி 1046 ஆம் ஆண்டைச் சேர்ந்த சோழ மன்னன் இராஜராஜனின் திருவொற்றியூர்க் கல்வெட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் படிமங்கள் நிர்மாணித்த செய்தி காணப்படுகிறது. திருவெண்காடு கல்வெட்டிலும் நாயன்மார்களின் படிமம் நிர்மாணித்த செய்தி உள்ளது. தேவாரம் பாடிய மூவரின் படிமம் எத்தகைய அளவில் அமைக்கப்பட வேண்டும் என்ற செய்தி தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் கல்வெட்டில் காணப்படுகிறது. இத்தகைய பின்னணியின் அடிப்படையில் நாயன்மார்களின் படிமங்கள் கி.பி. 11ஆம் நூற்றாண்டில் தமிழகக் கலை வரலாற்றில் தோற்றம் பெறத்தொடங்கியது.

   • தஞ்சை பெரிய கோயில கட்டினது யாரு?'ன்னு கேட்டா....

    எல்லோரும் யோசிக்காமல் "ராஜ ராஜ சோழன்னு..." பதில் சொல்லிடுவாங்க.

    ஆனா, ராஜ ராஜ சோழனோ, 'அந்த கோயில கட்டினது நான் இல்லை...'ன்னு சொல்றாரே!

    தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...

    கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்டி முடிக்க பட்ட சந்தோசத்துல ராஜ ராஜ சோழன் நிம்மதியா தூங்கும் போது... கனவுல இறைவன் ஆன பரமசிவன் அவன் முன்னே எழுந்தருளினார்.

    'ராஜா ராஜா!' என்றழைக்க...

    ராஜ ராஜ சோழன், "இறைவா என் பாக்கியம் என்னவென்று சொல்வது... தாங்கள் எனக்கு காட்சி தந்தது நான் செய்த பாக்கியம்...

    தங்களுக்கு நான் கட்டிய கோயில் எப்படி இருக்கிறது?... இந்த ஊரிலே எல்லோரும் வியந்து பார்க்கும் மிக பெரிய கோயிலாக கட்டியுள்ளேன்...

    அதற்க்கு *'தஞ்சை பெரிய கோயில்'* என்று பெயர் சூட்ட போகிறேன்... மகிழ்ச்சி தானே தங்களுக்கு?" என்று கேட்டான் ஆனந்தமாக.

    இறைவன் சிரித்து கொண்டே, "ம்ம்ம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்... ஒரு இடைச்சி மூதாட்டியின் காலடி நிழலின் கீழ் யாம் மிகவும் ஆனந்தமாக இருக்கிறோம்..." என்று கூறி மறைந்தார்.

    ராஜ ராஜனின் கனவும் கலைந்தது.

    விழித்தெழுந்த ராஜராஜன் தான் கண்ட கனவை பற்றி மறுநாள் அரசவையில் கூறி அந்த கனவுக்கு விளக்கம் கேட்டான்.

    யாருக்கும் பதில் தெரியவில்லை.

    பின் நேராக கட்டி முடிக்க பட்ட தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றான்.

    கோயில் சிற்பியிடம் தான் கண்ட கனவை கூறி விளக்கம் கேட்டான்.

    சிற்பி தயங்கியவாறே, "அரசே கடந்த மூன்று மாதங்களாக மோர் விற்கும் வயதான ஒரு ஏழை இடைச்சி மூதாட்டி தினமும் மத்திய வேளையில் இங்கு வருவார்...

    ஏழ்மை நிலையில் இருந்தாலும் தன் பங்குக்கு இந்த கோயிலுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று எண்ணி தான் விற்கும் மோரில் பாதியை காசுக்காகவும்,

    பாதியை இந்த கோயிலுக்காக வேலை செய்யும் எங்களுக்கு குடிக்க இலவசமாக கொடுப்பார்...

    நாங்கள் காசு கொடுத்தாலும் வாங்க மறுத்து விடுவார்.

    எதோ இந்த ஏழை இடைச்சியால் இந்த கோயிலுக்கு செய்ய முடிந்த தொண்டு என்று கூறி காசு வாங்க மறுத்திடுவார்.

    இப்படி இருக்கும் போது போன வாரத்தில் ஒரு நாள், ஆலய சிற்பங்களின் எல்லா வேலையும் முடித்த எங்களுக்கு இறைவனின் கருவறையின் மேலிருக்கும் கல்லை மட்டும் சரி செய்யவே முடியவில்லை...

    நாங்களும் அதன் அளவை எவ்ளவோ முயற்சி செய்து அளவெடுத்து வைத்தாலும் ஒன்று கல் அளவு அதிகமாக இருந்தது அல்லது குறைவாக இருந்தது.

    எங்கே ஆலய பணி நடக்காமல் போய்விடுமோ என்று நாங்கள் கவலையுடன் இருந்தோம்...

    அப்பொழுது இந்த மோர் விற்கும் இடைச்சி மூதாட்டி வந்து மோர் கொடுத்து கொண்டே, 'ஏன் கவலையாய் இருக்குறீர்கள்?' என்று கேட்டார்கள்.

    நாங்களும் கல் சரி ஆகாத விசயத்தை சொன்னோம்.

    அதற்க்கு அவர்கள் என் வீட்டு வாசற்படியில் பெரிய கல் ஒன்று உள்ளது... நான் அதை தான் என் வீட்டுக்கு வாசற்படி போல் வைத்துள்ளேன்.

    அதை வேண்டுமானால் எடுத்து பொருத்தி பாருங்கள் என்றார்.

    நாங்களும் நம்பிக்கை இல்லாமல் அந்த இடைச்சி மூதாட்டி சொன்ன கல்லை எடுத்து வந்து பொருத்தினோம்...

    என்ன ஆச்சிரியம்! கருவறையின் மேற் கூரைக்கு அளவெடுத்து வைத்தது போல் மிக சரியாக இருந்தது.

    அதைதான் இறைவன் தாங்களுக்கு உணர்த்தி இருப்பார் என்று அடியேன் நினைக்கிறன்... என்றான் சிற்பி.

    இதை கேட்டதும் ராஜ ராஜனுக்கு எல்லாம் புரிந்தது...

    எவ்வளவு பொருள் செலவு செய்து கோயில் கட்டினாலும் இறைவன் நேசிப்பது அன்பான ஒரு ஏழையின் பக்தியை தான்.

    ஆரவாரமாக பொருள் செலவு செய்து நான் கோயிலை கட்டினாலும், அமைதியாக ஏழ்மை நிலையிலும் அந்த இடைச்சி விற்க இருந்த மோரை கோயில் திருப்பணி செய்வோருக்கு அர்ப்பணித்தாரே..." என்று கண்ணீர் மல்கி...

    பின் சுதாரித்து தன் அமைச்சரை அழைத்து, "அமைச்சரே கும்பாபிஷேகம் நடக்கும் நன்னாளில் அந்த இடையர்குல மூதாட்டியை அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்... நான் வெண்குடை ஏந்தி அந்த அம்மையாரை வைத்து கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யுங்கள்...

    இந்த கோயில் கட்டியது அந்த மூதாட்டி இடைச்சி தான்... நான் அல்ல... 
    இதற்கு இறைவனே சாட்சி என்றான்...

    குறிப்பு:இடைச்சி என்றால் எந்த ஜாதி குறிப்படவில்லை..அது ஒரு சங்க காலச் சொல்.

    இடைச்சி கல்"..
    தஞ்சை பெரிய கோயிலின் உச்சியில் இருக்கும் கல்லே "இடைச்சி கல்".
    தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. அழகி என்னும் இடையர் குல மூதாட்டி சிவத்தொண்டு செய்ய விரும்பினார். ஏழை மூதாட்டி தன்னால் இயன்ற தொண்டாக கோவில் கட்டி முடிக்கும் வரை கோவில் கட்டும் சிற்பிகளின் தாகத்தை போக்கும் பொருட்டு தினமும் அவர்களுக்கு தயிர், மோர் வழங்கி வந்தார். இதனை அறிந்த மன்னர் அருள்மொழிவர்மன் (ராஜராஜசோழன்) இடையர் குல மூதாட்டியின் சிவத்தொண்டை அனைவரும் அறியும் வண்ணம் 80டன் எடை கொண்ட கல்லில் அழகி என்று பெயர் பொறித்து, அதனை ராஜகோபுரத்தின் உச்சியில் இடம் பெற செய்தார். அந்த கல் இடைச்சிக் கல் என்று அழைக்கப்படுகிறது. அந்த கல்லின் நிழலே பிரகதீஸ்வரர் மேல் விழுகிறது.

   • புறநானூறு, 290 (மறப்புகழ் நிறைந்தோன்!)

    பாடியவர்: ஔவையார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87 - இல் காண்க.

    பாடலின் பின்னணி: ஒருஅரசனின் ஆநிரைகளை மற்றொரு அரசனின் வீரர்கள் கவர்ந்தனர். ஆநிரைகளை இழந்த அரசன் அவற்றை மீட்பதற்காகக் கரந்தைப் போர் நடத்த விரும்பினான். அவன் தன்நாட்டிலுள்ள வீரர்களைப் போருக்கு வருமாறு அழைத்தான். அரசனின் அழைப்பிற்கிணங்கி, வீரர்கள் பலரும் ஒன்று கூடினர்.போருக்குப் போகுமுன் அரசன் வீரர்களுக்கு விருந்தளித்து, அவர்களின் வீரச் செயல்களைப் புகழ்வது வழக்கம். அவ்விருந்தில், ஒளவையாரும் கலந்துகொண்டார். வீரர்களைப் புகழும் பணியை ஒளவையார் மேற்கொண்டார்.ஒரு வீரனின் குடிப்பெருமையைக் கூற விரும்பிய ஒளவையார், “அரசே, இவன் பாட்டன் உன் பாட்டனின் உயிரைக் காப்பதற்காக, வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள்போல் தன் உடல் முழுதும் வேல்கள் பாய்ந்து இறந்தான். இவனும், தன் பாட்டனைப்போல், உன்னை மழையிலிருந்து காக்கும் பனையோலைக் குடைபோலக் காப்பான்.” என்று கூறுவதை இப்பாடலில் காணலாம்.

    திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

    துரை: குடிநிலை உரைத்தல். பழமையும் வீரமும் மிகுந்த குடியின் வரலாற்றைக் கூறுதல்.


    இவற்குஈத்து உண்மதி கள்ளே; சினப்போர்
    இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்!
    நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
    எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
    5
    அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே:
    மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
    உறைப்புழி ஓலை போல
    மறைக்குவன் பெருமநிற் குறித்துவரு வேலே.

    அருஞ்சொற்பொருள்:

    1. இவற்கு = இவனுக்கு; ஈத்து = கொடுத்து; மதிஅசை. 2. இனம் = கூட்டம்; இயற்றல் = புதிதாகச் செய்தல்; குருசில் = குரிசில் = தலைவன், அரசன். 3. நுந்தை = உன் தந்தை. 4. ஞாட்பு = போர், போர்க்களம். 5. குறடு = வண்டிச்சக்கரத்தின் நடுப்பகுதி. 6. மறம் = வீரம்; மைந்து = வலிமை. 7. உறை = மழை; உறைப்புழி = மழை பெய்யும்பொழுது; ஓலை = ஓலைக்குடை.

    உரை: அரசே, முதலில் கள்ளை இவனுக்கு அளித்து பின்னர் நீ உண்பாயாக; சினத்துடன் செய்யும் போரையும், யானைகளையும், நன்கு செய்யப்பட்ட தேர்களையுமுடைய தலைவனே! உன் பாட்டனை நோக்கிப் பகைவர்கள் எறிந்த வேல்களைக் கண்ணிமைக்காமல் இவன் பாட்டன் தாங்கிக்கொண்டான்; தச்சனால் வண்டியின் குடத்தில் செருகப்பட்ட ஆரக்கால்கள்போல் அவன் காட்சி அளித்து இறந்தான். வீரத்துடன் போர்செய்து புகழ்பெற்ற வலிமையுடைய இவன், மழை பெய்யும்பொழுது நம்மை அதனின்று காக்கும் பனையோலையால் செய்யப்பட்ட குடைபோல் உன்னை நோக்கி வரும் வேல்களைத் தாங்கி உன்னைக் காப்பான்.”

     

   • புறநானூறு, 289. (ஆயும் உழவன்!)
    பாடியவர்: கழாத்தலையார்.
    பாடப்பட்டோன்: யாருமில்லை.
    திணை: தெரியவில்லை.
    துறை: தெரியவில்லை.
    ===========================================

    ஈரச் செவ்வி உதவின ஆயினும்
    பல்எருத் துள்ளும் நல்லெருது நோக்கி
    வீறுவீறு ஆயும் உழவன் போலப்
    பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
    மூதி லாளர் உள்ளும் காதலின்

    தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
    இவற்குஈக என்னும் அதுவும்அன் றிசினே;
    கேட்டியோ வாழி பாண! பாசறைப்
    பூக்கோள் இன்றென்று அறையும்
    மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே

    அருஞ்சொற்பொருள்:-

    செவ்வி = பருவம் (தக்க சமயம்)
    வீறு = தனிமை, பகுதி
    வீறுவீறு = வேறுவேறு
    பீடு = பெருமை
    பாடு = கடமை
    காதலின் = அன்பினால்
    முகத்தல் = மொள்ளல்
    மண்டை = கள்குடிக்கும் பாத்திரம்
    அன்றுதல் = மறுத்தல்
    சின் - முன்னிலை அசை
    மடிவாய் = தோல் மடித்துக் கட்டப்பட்ட வாய்
    இழிசினன் = பறையடிப்பவன்

    இதன் பொருள்:-

    ஈரச் செவ்வி=====> காதலின்

    ஈரமுள்ள பருவம் மாறுவதற்குமுன், முன்பு உழுவதற்கு உதவிய ஏறுகளில் சிறந்த ஏறுகளை உழவர்கள் வேறுவேறு விதமாய் ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அதுபோல், பெருமைபெற்ற பழமையான குடியில் பிறந்த, வழிவழியாகத் தங்கள் கடமைகளை நன்கு ஆற்றிய சிறந்த வீரர்களுள் ஒருவீரனுக்கு

    தனக்கு=====> குரலே

    தனக்காக முகந்து எடுத்துப் பொற்கலத்தில் தந்த கள்ளை “இவனுக்கு ஈக” என்று அரசன் அன்போடு கொடுத்துச் சிறப்பிப்பதைக் கண்டு வியப்பதை விடு; பாணனே, இன்று போர்க்குரிய பூக்கள் வழங்கப்படுகின்றன என்று இழிசினன் எழுப்பும் தண்ணுமைப் பறையின் ஓசையைக் கேட்பாயாக

    பாடலின் பின்னணி:-

    ஒருகால், ஒருவேந்தன் வெட்சிப்போர் நடத்துவதற்காகப் ( மற்றொரு நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகப்) போர்ப்பறை ஒலித்தது. அந்நாட்டிலுள்ள வீரர்கள் பலரும் வந்து கூடினர். வேந்தன் வீரர்களுடன் கூடி விருந்துண்டான். அப்போது, வீரர்களுக்குக் கள் வழங்கப்பட்டது. மறக்குடியில் தோன்றி வீரச் செயல்களைச் செய்த வீரர்களை அவரவர் தகுதிக்கேற்ப அரசன் புகழ்ந்தான். அங்கு, வீரர்கள் மட்டுமல்லாமல் சான்றோர் பலரும் இருந்தனர். வேந்தன் தனக்குப் பொற்கலத்தில் வழங்கப்பட்ட கள்ளை சிறப்புடைய வீரன் ஒருவனுக்கு அளித்து அவனைச் சிறப்பித்தான். இந்தக் காட்சியைக் கண்டு பாணன் ஒருவன் வியந்தான். கழாத்தலையார், அப்பாணனை நோக்கி, “பாணனே, வேந்தன் செய்யும் சிறப்பைக் கண்டு வியத்தலை விட்டுவிட்டு, போர்க்குரிய பூவைப் பெற்றுக்கொள்ளுமாறு புலையன் தண்ணுமைப் பறையை அடிக்கின்றான். அதைக் கேட்பாயாக.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

   • புறநானூறு, 288. (மொய்த்தன பருந்தே!)
    பாடியவர்: கழாத்தலையார்.
    பாடப்பட்டோன்: யாருமில்லை.
    திணை: தும்பை.
    துறை: மூதின் முல்லை.
    ===========================================

    மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
    அண்ணல் நல்ஏறு இரண்டுடன் மடுத்து
    வென்றதன் பச்சை சீவாது போர்த்த
    திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
    ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர

    நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
    அருகுகை .. .. .. .. .. .. மன்ற
    குருதியொடு துயல்வரும் மார்பின்
    முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே.

    (பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை)

    அருஞ்சொற்பொருள்:-

    வரிந்த = வரி அமைந்த
    வை = கூர்மை
    நுதி = நுனி
    மருப்பு = விலங்கின் கொம்பு
    அண்ணல் = பெருமை, தலைமை
    மடுத்தல் = குத்துதல்
    பச்சை = தோல்
    திண்பிணி = திண்ணியதாய்க் கட்டப்பட்ட
    புலம் = இடம்
    இடைப்புலம் = போர்க்களத்தின் நடுவிடம்
    இரங்கல் = ஒலித்தல்
    ஆர் = அருமை
    அமர் = போர்
    ஞாட்பு = போர்
    தெறு = சினம்
    மன்ற = நிச்சயமாக
    துயல்வரும் = அசையும்
    முயக்கு = முயங்கல் = தழுவல்
    இடை = இடம்

    இதன் பொருள்:-

    மண்கொள=====> தெறுவர

    மண்ணைக் குத்தியதால் வரிவரியாகக் கோடுகள் உள்ள கூரிய கொம்பினையுடைய பெருமைபொருந்திய நல்ல ஏறுகள் இரண்டைப் போரிடச் செய்து, வெற்றிபெற்ற ஏற்றின் தோலை உரித்து, மயிர் சீவாத அத்தோலால் போர்த்தப்பட்ட முரசு போர்க்களத்தின் நடுவே ஒலித்தது. தடுத்தற்கரிய போர் நடந்த அப்போர்க்களத்தில் சினம் தோன்ற

    நெடுவேல்=====> பருந்தே

    பகைவர் எறிந்த நெடியவேல் வந்து பாய்ந்ததால் ஒரு வீரன் நாணமுற்றான். குருதியோடு துடிக்கும் அவனது மார்பைத் தழுவவந்த அவன் மனைவியைத் தழுவவிடாமல் பருந்துகள் அவன் உடலை மொய்த்தன.

    பாடலின் பின்னணி:-

    ஒருகால், பெரும்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போரில் வீரன் ஒருவனின் மார்பில் வேல் பாய்ந்தது. வேல் பாய்ந்த மார்புடன் அவன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் மனைவி அவனைத் தழுவும் நோக்கத்தோடு அவன் அருகில் வந்தாள். அவளைத் தழுவவிடாமல் அவன் உடலைப் பருந்துகள் மொய்த்தன. இக்காட்சியைப் புலவர் கழாத்தலையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

    கழாத்தலையார் 62-ஆம் பாடலில் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் அவ்விருவரும் இறந்ததைப் பாடியுள்ளார். இப்பாடலில் இவர் கூறும் வீரனைப் பற்றிய செய்திகளை அப்போரோடு சிலர் தொடர்புபடுத்துகிறார்கள். இப்பாடலில் குறிப்பிடப்படும் போருக்கும் பாடல் 62-இல் குறிப்படப்படும் போருக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இப்பாடலில் காணப்படவில்லை.

    இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.

    சிறப்புக் குறிப்பு:-

    கேடயம் கையிலிருந்தும், தன்னை நோக்கிவந்த வேலைத் தடுத்துத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாததால், “நாணுடை நெஞ்சத்து” என்று புலவர் கழாத்தலையார் குறிப்பிடுகிறார் போலும்.

    போர் முரசு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தோல், வீரம் மிகுந்த ஏற்றினின்று எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது பழங்கால மரபு என்று இப்பாடலிலிருந்தும், “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த, மாக்கண் முரசம்” என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளிலிருந்தும் (752-3) தெரியவருகிறது. ஏற்றின் தோல் மயிர் சீவாது பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.

   • புறநானூறு, 287. (காண்டிரோ வரவே!)
    பாடியவர்: சாத்தந்தையார்.
    பாடப்பட்டோன்: யாருமில்லை.
    திணை: கரந்தை.
    துறை: நீண்மொழி.
    ===========================================

    துடி எறியும் புலைய!
    எறிகோல் கொள்ளும் இழிசின!
    கால மாரியின் அம்பு தைப்பினும்
    வயல் கெண்டையின் வேல் பிறழினும்
    பொலம்புனை ஓடை அண்ணல் யானை

    இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
    ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
    நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
    நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
    தண்ணடை பெறுதல் யாவது? படினே,

    மாசில் மகளிர் மன்றல் நன்றும்
    உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
    வம்ப வேந்தன் தானை
    இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

    அருஞ்சொற்பொருள்:-

    துடி = ஒருவகைப் பறை
    எறிதல் = அடித்தல்
    புலையன் = பறை அடிப்பவன்
    எறிகோல் = பறையடிக்கும் குறுந்தொடி
    இழிசினன் = பறையடிப்பவன்
    மாரி = மழை
    பிறழ்தல் = துள்ளுதல்
    பொலம் = பொன்
    புனைதல் = அணிதல், அலங்கரித்தல்
    ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்
    அண்ணல் = தலைமை
    இலங்குதல் = விளங்குதல்
    வால் = வெண்மை
    மருப்பு = விலங்கின் கொம்பு (யானையின் தந்தம்)
    நுதி = நுனி
    மடுத்தல் = குத்துதல்
    பீடு = பெருமை
    வியன் = மிகுதி
    கூடு = நெற்கூடு
    தண்ணடை = மருத நிலத்தூர்
    யாவது = எது (என்ன பயன்?)
    படுதல் = இறத்தல்
    மாசு = குற்றம்
    மன்றல் = திருமணம்
    நுகர்தல் = அனுபவித்தல்
    வம்பு = குறும்பு
    இம்பர் = இவ்விடம்
    காண்டீரோ = காண்பீராக

    இதன் பொருள்:-

    துடி=====> யானை

    துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள்

    இலங்குவால்=====> படினே,

    விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால்,

    மாசில்=====> வரவே

    அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

    சிறப்புக் குறிப்பு:-

    ”போரில் இறந்தவர்கள் மேலுலக்த்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள மகளிரை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

    பாடலின் பின்னணி:-

    சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்பவன் தன் தந்தையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, தந்தையோடு வாழாமல் ஆமூரில் வாழ்ந்துவந்தான். அவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப் பணிபுரிந்தான். ஒருகால், பகை அரசனின் வீரர்கள் ஆமூரிலிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து சென்றனர். அவற்றை மீட்கும் பொறுப்பு கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று. அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்றபொழுது, வீரர்களை ஊக்குவிப்பதற்காகக் கூறியவற்றை சாத்தந்தையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

   • புறநானூறு, 286. (பலர்மீது நீட்டிய மண்டை!)
    பாடியவர்: ஔவையார்.
    பாடப்பட்டோன்: யாருமில்லை.
    திணை: கரந்தை.
    துறை: வேத்தியல்.
    ===========================================

    வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
    தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
    பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
    கால்கழி கட்டிலிற் கிடப்பித்
    தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!

    அருஞ்சொற்பொருள்:-

    செச்சை = கடா (கிடாய்)
    மண்டை = இரப்போர் கலம் (மண்டை என்ற சொல் கள் குடிக்கும் பாத்திரத்தையும் குறிக்கும். இது கள்ளுக்கு ஆகுபெயராக வந்துள்ளது)
    கால்கழி கட்டில் = காலில்லாத கட்டில் (பாடை)
    அறுவை = சீலை, ஆடை

    இதன் பொருள்:-

    வெண்மையான நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்கள் போலத் தன்னைப் போன்ற இளைஞர்கள் பலர் இருக்கவும், அவர்களுக்கு மேலாக என் மகனுக்குத் தரப்பட்ட கள், என் மகனைப் பாடையில் இருக்கச் செய்து தூய வெண்ணிறப் போர்வையால் போர்த்தும் நிலையைத் தரவில்லையே.

    பாடலின் பின்னணி:-

    ஒரு அரசன் பகைவரோடு போரிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய படையில் இருந்த வீரர்கள் பலர் இறந்தனர். ஒரு வீரனின் தாய், அரசனுக்குத் துணையாகப் போரிட்டு இறக்கும் பேறு தன் மகனுக்குக் கிடைக்கவில்லையே என்று தன் ஏமாற்றத்தைத் தெரிவிப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

    சிறப்புக் குறிப்பு:-

    ஆடுகள் ஒன்றை ஒன்றுத் தொடர்ந்து பின் செல்வது போல், வேந்தனைப் பின் தொடர்ந்து செல்லும் வீரர்களின் ஒற்றுமையை ஒளவையார், “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை” என்று குறிப்பிடுகிறார். அரசனுக்காகப் போராடிப், போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறப்பதுதான் வீரனுக்குப் புகழ்தரும் செயல் என்பதை இப்பாடல் மறைமுகமாகக் கூறுகிறது. மகன் இறக்காததால் தாய் ஏமாற்றமடைந்தாள் என்று நேரிடையாகப் பொருள் கொள்வது சிறந்ததன்று.

    இப்பாடல் கரந்தைத் திணையையும் வேத்தியல் துறையையும் சார்ந்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாடலின் பொருளை ஆராய்ந்து பார்த்தால், இப்பாடல் கரந்தைத் திணையையும் வேத்தியல் துறையையும் சார்ந்ததாகக் கருதுவதற்குத் தகுந்த காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

   • புறநானூறு, 285. (தலைபணிந்து இறைஞ்சியோன்!)
    பாடியவர்: அரிசில் கிழார்.
    பாடப்பட்டோன்: யாருமில்லை.
    திணை: வாகை.
    துறை: சால்பு முல்லை.
    ===========================================

    பாசறை யீரே! பாசறை யீரே!
    துடியன் கையது வேலே; அடிபுணர்
    வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
    பாணன் கையது தோலே; காண்வரக்
    கடுந்தெற்று மூடையின் ………..

    வாடிய மாலை மலைந்த சென்னியன்
    வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
    நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
    மூரி வெண்டோள் ……..
    சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!

    மாறுசெறு நெடுவேல் மார்புளம் போக
    நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே.
    அதுகண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
    இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
    அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
    இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
    கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே

    (பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை)

    அருஞ்சொற்பொருள்:-

    பாசறை = படை தங்குமிடம்
    துடியன் = துடி என்னும் பறையை அடிப்பவன்
    புணர் = சேர்த்த
    வாங்கு = வளைவு
    இரு = கரிய
    மருப்பு = யாழின் தண்டு
    தொடை = யாழின் நரம்பு
    தோல் = கேடயம்
    கடுதல் = மிகுதல்
    தெற்று = அடைப்பு
    மூடை = மூட்டை
    மலைதல் = அணிதல்
    சென்னி = தலை
    அயர்தல் = செய்தல்
    மொசித்தல் = மொய்த்தல்
    மூரி = வலிமை
    உகு = சொரி, உதிர்
    செறுதல் = சினங்கொள்ளுதல்
    பரந்தோர் = பரந்த அறிவுடைய சான்றோர்
    இறைஞ்சுதல் = தாழ்தல், வணங்குதல், கவிழ்தல்
    குருசில் = குரிசில் = தலைவன்
    பிணங்குதல் = பின்னுதல்
    அலமரல் = அசைதல்
    தண்ணடை = மருத நிலத்தூர்
    இலம்பாடு = வறுமை
    ஒக்கல் = சுற்றம்
    கரம்பை = சாகுபடி செய்யக்கூடிய நிலம்
    நல்குதல் = அளித்தல்

    இதன் பொருள்:-

    பாசறை=====> மூடையின் ………

    பாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே! தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது; அவன் கேடயம், யாழின் அடியில் இணைக்கப்பட்ட வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய பாணனின் கையில் உள்ளது. மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல ….....

    வாடிய=====> செம்மலுக் கோஒ!

    வாடிய மாலை அணிந்த தலைவன், வேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய சுற்றத்தாரோடு நெடிய அரண்மனைக்கு வந்தான். பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த வலிய தோள்…. நிலத்தைச் சேறாக்கும் குருதி சொரிந்தான்.

    மாறுசெறு=====> எனவே

    ஐயோ! பகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நின்றது. பிணங்களிடையே நின்று போர்புரிதலால், மாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம், “கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு அசையும் நெற்கழனிகளையுடைய மருதநிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத்தான். இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு எஞ்சியிருந்த, சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று புகழ்ந்தார்கள். அதைக் கேட்ட தலைவன் நாணித் தலைகுனிந்தான்.

    பாடலின் பின்னணி:-

    ஒருகால், ஒரு தலைவனுக்கும் அவன் பகைவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பகைவர் எறிந்த வேல் அவன் மார்பில் பாய்ந்தது. தலைவனின் நிலைமையை வீரன் ஒருவன் பாசறைக்குத் தெரிவித்தான். அவ்வீரன் அச்செய்தியைத் தெரிவிக்கும் பொழுது, “பாசறையில் உள்ளவர்களே! நம் தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது. அவன் கேடயம் பாணனின் கையில் உள்ளது. பகைவர் எறிந்த வேல் அவன் மார்பை ஊடுருவியது; அவன் நிலத்தில் வீழ்ந்தான். சான்றோர் பலரும் அவனைச் சூழ்ந்து நின்று தலைவனைப் பாராட்டினர். அவர்களின் பாராட்டுக்களைக் கேட்டு அவன் நாணித் தலைகுனிந்தான்.” என்று அறிவித்தான். இதைக் கேட்ட அரிசில் கிழார் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.

   • புறநானூறு, 284. (பெயர்புற நகுமே!)
    பாடியவர்: ஓரம்போகியார்.
    பாடப்பட்டோன்: யாருமில்லை.
    திணை: தும்பை.
    துறை: பாண்பாட்டு.
    ===========================================

    வருகதில் வல்லே வருகதில் வல்என
    வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
    நூலரி மாலை சூடிக் காலின்
    தமியன் வந்த மூதி லாளன்
    அருஞ்சமம் தாங்கி முன்நின்று எறிந்த
    ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
    திரிந்த வாய்வாள் திருத்தாத்
    தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

    அருஞ்சொற்பொருள்:-

    தில் = விழைவைக் குறிக்கும் அசைச்சொல்
    வல் = விரைவு
    விழு = சிறந்த
    அரி = அறுத்தல்
    சமம் = போர்
    ஒருகை = யானை
    மிறை = வளைவு
    வாய்வாள் = குறிதவறாத வாள்
    இரிதல் = ஓடுதல்

    இதன் பொருள்:-

    “விரைந்து வருக, விரைந்து வருக” என்று வேந்தனின் சிறந்த தூதுவர் ஆங்காங்கு சென்று தெரிவிக்க, நூலால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிக்கொண்டு, காலால் நடந்து தனியனாய் வந்த மறக்குடி மறவன், கடுமையான போரில் பகைவரை மேலே செல்லாதவாறு தடுத்துப் பகைவரின் யானையொன்றை வெட்டி வீழ்த்தினான். தான் வெட்டி வீழ்த்திய யானையின் தந்தத்தில் தனது வளைந்த வாளைத் தீட்டிக்கொண்டிருந்தான். அப்பொழுது பகைவரின் வீரன் ஒருவன் அவனைக்கண்டு புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக்கண்டு இவ்வீரன் சிரித்தான்.

    பாடலின் பின்னணி:-

    ஒருகால், ஒருவேந்தன் வீரர்கள் பலரையும் போருக்கு வருமாறு அழைத்தான். அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்தான். அவனுடைய வீரச் செயல்களைப் புலவர் ஓரம்போகியார் கண்டார். அவ்வீரன் ஓர் யானையைக் கொன்று வீழ்த்தினான். அவன் யானையுடன் போரிட்டதால் அவனுடைய வாள் கோணியது. அந்த வாளை இறந்த யானையின் தந்தத்தில் தீட்டிக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த பகைவரின் வீரன் ஒருவன் புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக் கண்ட அவ்வீரன் சிரித்தான். இக்காட்சியை இப்பாடலில் புலவர் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.

    சிறப்புக் குறிப்பு:-

    இறந்த வீரனுக்குத் தம் கடன் ஆற்றுவதற்காகப் பாணர்கள் சாப்பண்ணில் யாழிசைப்பது பாண்பாட்டு. இப்பாடல், வீரன் யானையைக் கொன்று வீழ்த்தியதைப்பற்றிக் கூறுகிறது. ஆனால் இப்பாடலில் வீரன் இறந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது.

   • புறநானூறு, 283. (அழும்பிலன் அடங்கான்!)
    பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார்.
    பாடப்பட்டோன்: யாருமில்லை.
    திணை: தும்பை.
    துறை: பாண்பாட்டு.
    (இப்பாடலில், சில பகுதிகள் கிடைக்கவில்லை.)
    ===========================================

    ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
    வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
    பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
    மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
    அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்

    வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
    மன்றுள் என்பது கெட …...தானே பாங்கற்கு
    ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத்து இங்க
    உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
    தெற்றிப் பாவை திணிமணல் அயரும்

    மென்தோள் மகளிர் நன்று புரப்ப
    இமிழ்ப்புறம் நீண்ட பாசிலைக்
    கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே

    அருஞ்சொற்பொருள்:-

    குரலி = நீரில் உள்ள ஒருவகைச் செடி
    தண்கயம் = குளிர்ந்த நீர்நிலை
    வாளை = வாளைமீன்
    அரா = பாம்பு
    வராஅல் = வரால்மீன்
    ஊழ் = முறை
    மாறு = பகை
    அழும்பிலன் = அழும்பில் என்னும் ஊரின் தலைவன்
    தகைத்தல் = தடுத்தல்
    வலம் = வெற்றி
    புரிதல் = விரும்புதல்
    பாங்கன் = தோழன்
    ஆர் = ஆரக்கால்
    குறடு = மரத்துண்டு. அச்சுக் கோகும் இடம் ( வண்டிச் சக்கரத்தின் குடம்)
    நிறம் = மார்பு
    இங்கல் = ஊடுருவுதல், நுழைதல்
    அளவை = அளவு
    தெறு = சினம்
    தெற்றி = திண்ணை
    பாவை = பதுமை (பொம்மை)
    அயர்தல் = விளையாடுதல்
    புரப்ப = பாதுகாக்க (காக்க)
    இமிழ்தல் = தழைத்தல், மிகுதல்
    பாசிலை = பசிய இலை
    நுதல் = நெற்றி
    அசைத்தல் = கட்டுதல்

    இதன் பொருள்:-

    ஒண்செங்======> என்னும்

    ஒளிபொருந்திய செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க, வாளைமீனை நீர்நாய் தனக்கு அன்றைய உணவாகப் பெற்றுக்கொண்டு, உணவு இல்லாமல் அங்கே வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி முதலைகளோடு மாறிமாறி முறையாக நீர்நாய்களும் முதலைகளும் போரிடும் அழும்பில் என்னும் ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடக்கருதி எழுந்தான்.

    வலம்புரி=====> அயரும்

    வெற்றியை விரும்பும் கோசருடைய அவைக்களமும் போர்க்களத்தின் நடுவிடமும் இல்லையாக … அவன் தோழனின் மார்பில் பகைவரின் அம்புகள் செருகி இருந்தன. அவை வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் அமைந்திருப்பதுபோல் இருந்தன. தோழனின் உயிர் உடலிலிருந்து நீங்காமல் ஊசலாடிக்கொண்டிருந்தது. திண்ணையில் வைத்து விளையாட வேண்டிய மண்பாவைகளைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும்

    மென்தோள்=====> நுதலசைத் தோனே

    சிறுமிகள் அவன் புண்களை ஆற்றி அவனை நன்கு காத்துவந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட தலைவன், சினந்து, ஒளியுடன் விளங்கும் நீண்ட பசிய இலைகளையுடைய மணங்கமழும் தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான்.

    பாடலின் பின்னணி:-

    பகைவர்கள் எய்த அம்புகள் ஒரு வீரனின் உடலில், வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் செருகி இருப்பதைப் போல் செருகி இருந்தன. அவனைச் சில சிறுமிகள் பாதுகாத்துவந்தனர். அவ்வீரனைக் காணவந்த நண்பன் ஒருவன், வீரனின் நிலையைக் கண்டு, சினத்துடன் போருக்குப் புறப்பட்டான். இப்பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. பாடல் சிதைந்துள்ளதால், தெளிவான பொருள் காண்பது அரிதாக உள்ளது.

    சிறப்புக் குறிப்பு:-

    ஒரு நீர்நாய் ஒரு முதலையுடன் போரிட்டுத் தோற்றால், மற்றொரு நீர்நாய் வென்ற முதலையோடு போரிடும்; போரில் ஒரு முதலை தோற்றால் மற்றொரு முதலை வென்ற நீர்நாயோடு போர்புரியும். இவ்வாறு மாறிமாறி முறையாகப் போரிடுவதைத்தான் “ஊழ்மாறு பெயரும்” என்று புலவர் குறிப்பிடுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

    பெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடிப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறும் பாடல்கள் பாண்பட்டு என்னும் துறையைச் சார்ந்தவையாகும்.

    இப்பாடலில் பாணர்கள் சாப்பண்ணைப் பாடி வீரன் ஒருவனின் சாவைக் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்ற துறையைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. இப்பாடலில், வீரன் ஒருவனின் செயலைப் புலவர் புகழ்ந்து கூறியிருப்பதால், இப்பாடல் பாடாண் பாட்டு என்னும் துறையைச் சார்ந்தது என்று முடிவு செய்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.