Group activity

 • புறநானூறு, 221. (வைகம் வாரீர்!)
  பாடியவர்: பொத்தியார்.
  பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
  திணை: பொதுவியல்.
  துறை: கையறு நிலை.
  ==============================

  பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
  ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
  அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
  திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;
  மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;

  துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
  அனையன் என்னாது அத்தக் கோனை
  நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;
  பைதல் ஒக்கல் தழீஇ அதனை
  வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!

  நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
  கெடுவில் நல்லிசை சூடி
  நடுகல் ஆயினன் புரவலன் எனவே

  அருஞ்சொற்பொருள்:-

  கோல் = செங்கோல்
  திறவோர் = சான்றோர்
  திண் = வலி
  சாயல் = மென்மை
  மைந்து = வலிமை
  துகள் = குற்றம்
  புக்கில் = புகலிடம்
  பைதல் = துன்பம்
  தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு
  வைகம் = வைகுவோம்
  வம்மோ = வாருங்கள்
  நனந்தலை = அகன்ற இடம்
  அரந்தை = துயர்
  தூங்க = அடைய

  இதன் பொருள்:-

  பாடுநர்க்கு=====> மைந்து

  வாய்மையே பேசும் புலவர்களே! பாடி வருபவர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடும் விறலியர்க்கும் கூத்தர்களுக்கும் பொருள் பல அளித்த மிகுந்த அன்புடையவன்; அறவோர் புகழ்ந்த செங்கோலன்; சான்றோர் புகழ்ந்த நெருங்கிய நட்புடையவன்; மகளிரடத்து மென்மையானவன்; வலியோர்க்கு வலியோன்;

  துகளறு=====> எனவே

  குற்றமற்ற கேள்வி அறிவுடையவர்களுக்குப் புகலிடமானவன்; அத்தகைய தன்மைகள் உடையவன் எனக் கருதாது, சிந்திக்கும் திறனற்ற கூற்றுவன், அவன் உயிரைக்கொண்டு சென்றான். அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர்.

  பாடலின் பின்னணி:-

  வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் இறந்ததும் அவன் திறமையையும், அறிவையும், பெருமையையும் கருதி அவனுக்கு ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில், அவன் பெயரும், புகழும் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றும், அந்த நடுகல் மயில் இறகு சூடப்பட்டு, மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அதைக்கண்ட பொத்தியார், மனம் கலங்கி, இத்தகைய சிறந்த மன்னனின் உயிரைப் பறித்த கூற்றுவனை வைகுவோம் என்று அங்குள்ள மற்ற சான்றோர்களை அழைப்பதை இப்பாடலில் காண்கிறோம்.

 • புறநானூறு, 220. (கலங்கினேன் அல்லனோ!)
  பாடியவர்: பொத்தியார்.
  பாடப்பட்டோன்: பொதுவாக.
  திணை: பொதுவியல்.
  துறை: கையறு நிலை.
  ==============================

  பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
  பெருங்களிறு இழந்த பைதற் பாகன்,
  அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
  வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
  கலங்கினேன் அல்லனோ யானே, பொலந்தார்த்
  தேர்வண் கிள்ளி போகிய
  பேரிசை மூதூர் மன்றங் கண்டே?

  அருஞ்சொற்பொருள்:-

  பயந்து = தந்து
  புரத்த = பாதுகாத்த
  பைதல் = வருத்தம்
  அல்கல் = தங்குதல்
  அழுங்குதல் = வாய்விட்டு அழுதல்
  ஆலை = யானைக் கூட்டம்
  வெளில் = தறி, தூண்
  கலுழ்தல் = அழுதல், கலங்கல்
  கிள்ளி = சோழன்
  மூதூர் = உறையூர்
  மறம் = அவை
  போகிய = சென்ற

  இதன் பொருள்:-

  பெருமளவில் சோற்றை அளித்துத் தன்னைப் பாதுகாத்துவந்த பெரிய யானையை இழந்த வருத்தம் மிகுந்த பாகன், அந்த யானை தங்கியிருந்த இடத்தில், தூண் வெறிதாய் இருப்பதைக் கண்டு அழுததைப்போல், பொன்மாலை அணிந்தவனும் தேர்களை வழங்குபவனும் ஆகிய சோழன் இல்லாத பெரும்புகழ்கொண்ட உறையூரின் அரசவையைக் கண்டு நானும் கலங்கினேன் அல்லனோ?

  பாடலின் பின்னணி:-

  கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார் மனம் கலங்கி அழுதார். தன்னுடைய செயலற்ற நிலையை, யானையை இழந்த ஒரு யானைப்பாகனோடு ஒப்பிட்டு இப்பாடலில் தன்னுடைய தாங்கமுடியாத வருத்தத்தைத் தெரிவிக்கிறார்.

 • புறநானூறு, 219. (உணக்கும் மள்ளனே!)
  பாடியவர்: கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்.
  பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன்.
  திணை: பொதுவியல்.
  துறை: கையறு நிலை.
  ==============================

  உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
  முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள!
  புலவுதி மாதோ நீயே!
  பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே

  அருஞ்சொற்பொருள்:-

  உள் ஆறு = ஆற்று உள்ளே (அரங்கம், ஆற்றின் நடுவே உள்ள இடம்.)
  கவலை = பிரியும் வழி
  புள்ளி நீழல் = புள்ளி புள்ளியாகத் தோன்றும் நிழல்
  வள்ளுரம் = தசை
  உணக்கும் = வாட்டும், வருத்தும்
  மள்ளன் = வீரன்
  புலத்தல் = வெறுத்தல்
  மாதோ – அசைச் சொல்
  குறி = இடம்

  இதன் பொருள்:-

  ஆற்றின் நடுவே இருக்கும் இடத்தில் (அரங்கத்தில்) உள்ள மர நிழலில், உடல் முழுதும் உள்ள தசைகள் அனைத்தையும் வாட்டும் வகையில் வடக்கிருந்த வீரனே! நீ வடக்கிருந்த பொழுது அதே இடத்தில் உன்னோடு பலரும் வடக்கிருந்தனர். அப்பொழுது நான் வராததால் என்னை நீ வெறுத்தாய் போலும்.

  பாடலின் பின்னணி:-

  கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த காலத்து இப்புலவர் மற்ற புலவர்களுடன் சேர்ந்து வடக்கிருக்க வர இயலவில்லை போலும். இவர் கோப்பெருஞ்சோழனைக் காணவந்த பொழுது அவன் இறந்து கிடந்தான். அதைக் கண்ட கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார், “ நீ வடக்கிருந்த பொழுது நான் வராததால் நீ என்னை வெறுத்தாயோ?” என்று இப்பாடலில் கூறுகிறார்.

 • புறநானூறு, 218. (சான்றோர் சாலார் இயல்புகள்!)
  பாடியவர்: கண்ணகனார்.
  பாடப்பட்டோன்: யாருமில்லை.
  திணை: பொதுவியல்.
  துறை: கையறு நிலை.
  ==========================

  பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
  மாமலை பயந்த காமரு மணியும்
  இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
  அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
  ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
  சான்றோர் பாலர் ஆப;
  சாலார் சாலார் பாலர் ஆகுபவே

  அருஞ்சொற்பொருள்:-

  துகிர் = பவளம்
  மன்னிய = நிலைபெற்ற
  பயந்த = தந்த
  காமர் = விருப்பம்
  தொடை = தொடுத்தல்
  பால் = பக்கம்

  இதன் பொருள்:-

  பொன், பவளம், முத்து, நிலைபெற்றப் பெரிய மலையிலிருந்து பெற்ற விரும்பத்தக்க மாணிக்கம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொலைவான இடங்களில் தோன்றியவையானாலும் பெருமதிப்புடைய நல்ல அணிகலன்களில் தொடுக்கும் பொழுது, அவை ஒரே இடத்தில் சேர்ந்திருக்கின்றன. அதுபோல, எந்நாளும் சான்றோர்கள் சான்றோர்களையே சேர்ந்திருப்பர். அத்தகைய உயர்ந்த குணங்கள் இல்லாதவர், உயர்ந்த குணங்கள் இல்லாதவர்களையே சேர்ந்திருப்பர்.

 • புறநானூறு, 217. (நெஞ்சம் மயங்கும்!)
  பாடியவர்: பொத்தியார்.
  பாடப்பட்டோன்: யாருமில்லை.
  திணை: பொதுவியல்.
  துறை: கையறு நிலை.
  ==========================

  நினைக்கும் காலை மருட்கை உடைத்தே;
  எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்;
  அதனினும் மருட்கை உடைத்தே, பிறன்நாட்டுத்
  தோற்றம் சான்ற சான்றோன் போற்றி,
  இசைமரபு ஆக நட்புக் கந்தாக
  இனையதோர் காலை ஈங்கு வருதல்;

  ‘வருவன்’ என்ற கோனது பெருமையும்,
  அதுபழுது இன்றி வந்தவன் அறிவும்
  வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே;
  அதனால், தன்கோல் இயங்காத் தேயத்து உறையும்
  சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
  அன்னோனை இழந்தஇவ் வுலகம்
  என்னா வதுகொல்? அளியது தானே!

  அருஞ்சொற்பொருள்:-

  மருட்கை = திகைப்பு, மயக்கம், வியப்பு
  துணிதல் = முடிவெடுத்தல்
  சான்ற = அமைந்த
  போற்றி = பாதுகாத்து
  இசை = புகழ்
  கந்து = பற்றுக்கோடு
  இனைய = இத்தகைய
  ஈங்கு = இங்கு
  கோன் = கோப்பெருஞ்சோழன்
  இறந்த = கடந்த
  அன்னோன் = கோப்பெருஞ்சோழன்
  அளியது = இரங்கத்தக்கது

  இதன் பொருள்:-

  நினைக்கும்=====> வருதல்

  இத்துணைப் பெரிய சிறப்புடைய மன்னன் இவ்வாறு வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததை நினைத்தாலே வியப்பாக உள்ளது. வேறு நாட்டில் தோன்றிய சான்றோன் ஒருவன், புகழை மரபாகக்கொண்டு, நட்பைப் பற்றுக்கோடாகக் கொண்டு, இந்தகைய நேரத்தில் இங்கு வருவது அதைவிட வியப்பானது.

  ‘வருவன்’=====> அளியது தானே

  அவன் வருவான் என்று கூறிய கோப்பெருஞ்சோழனின் பெருமையும், அவ்வாறு தவறாமல் வந்தவனின் அறிவும் வியக்குந்தோறும், வியப்பின் எல்லையைக் கடந்ததாக உள்ளது. தன் ஆட்சியில் இல்லாத நாட்டில் வாழும் சான்றோனின் நெஞ்சில் இடம் பெற்ற புகழ் மிக்க அரசனை இழந்த இந்நாடு என்னாகுமோ? இது இரங்கத்தக்கதுதான்.

  பாடலின் பின்னணி:-

  கோப்பெருஞ்சோழன் வடக்கிருப்பது என்று முடிவெடுத்ததையும், அவனுக்கும் பிசிராந்தையாருக்கும் இருந்த நட்பையும், பிசிராந்தையார் நிச்சயமாக வருவார் என்று சோழன் கூறியதையும், அவன் கூறியதுபோல் பிசிரந்தையார் வந்ததையும் நினைத்துப்பார்த்துப் பொத்தியார் மிகவும் வியப்படைகிறார். இப்பாடலில் தன் வியப்பை வெளிப்படுத்துகிறார்.

 • புறநானூறு, 1. (இறைவனின் திருவுள்ளம்)
  பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்.
  பாடப்பட்டோன் : சிவபெருமான். (சிவபெருமானைப்பற்றி புறநானூற்றுப் புலவர்கள் பாடி இருப்பதிலிருந்து அக்காலத்து சிவ வழிபாடு இருந்ததாகவும் சிவனுக்குக் கோயில்கள் இருந்ததாகவும் தெரிகிறது).
  =====================================

  கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
  வண்ண மார்பின் தாருங் கொன்றை;
  ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
  சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
  கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை

  மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
  பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
  தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
  பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை

  பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
  எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
  நீரறவு அறியாக் கரகத்துத்,
  தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.

  அருஞ்சொற் பொருள்:-

  கண்ணி = தலையில் சூடப்படும் மாலை
  கார் = கார் காலம்
  நறுமை = மணம்
  கொன்றை = கொன்றை மலர்
  காமர் = அழகு
  தார் = மாலை
  ஊர்தி = வாகனம்
  வால் = தூய
  ஏறு = எருது
  சீர் = அழகு
  கெழு = பொருந்து
  மிடறு = கழுத்து
  நவிலுதல் = கற்றல்
  நுவலுதல் = போற்றுதல்
  திறன் = கூறுபாடு
  கரக்கல் = மறைத்தல்
  வண்ணம் = அழகு
  ஏத்துதல் = புகழ்தல்
  ஏமம் = காவல்
  அறவு = அழிதல், குறைதல்
  கரகம் = கமண்டலம்
  பொலிந்த = சிறந்த
  அருந்தவத்தோன் = அரிய தவம் செய்பவன் (இறைவன்).

  இதன் பொருள்:-

  கண்ணி=====> அணிந்தன்று

  தலையில் அணிந்திருக்கும் மாலை கார்காலத்து மலரும் மணமுள்ள கொன்றை மலர்களால் புனையப்பட்டது. அவன் தன்னுடைய அழகிய நிறமுள்ள மார்பில் அணிந்திருப்பதும் கொன்றை மலர் மாலையே. அவன் ஏறிச் செல்லும் வாகனம் தூய வெண்ணிறமுள்ள காளை; அவனுடைய கொடியும் காளைக்கொடிதான். நஞ்சினது கருமை நிறம் சிவனது கழுத்தில் கறையாக இருந்து அழகு செய்கிறது.

  அக்கறை=====> ஆகின்று

  அந்தக் கறை, வேதம் ஓதும் அந்தணர்களால் போற்றப் படுகிறது. சிவனின் ஒருபக்கம் பெண்ணுருவம் உடையது. அப்பெண்ணுருவைத் தன்னுள் அடக்கி மறைத்துக் கொள்வதும் உண்டு. சிவபெருமான் நெற்றியில் அணிந்துள்ள பிறைநிலா அவன் நெற்றிக்கு அழகு செய்கிறது

  அப்பிறை=====> அருந்தவத் தோற்கே

  அப்பிறை பதினெட்டுக் கணங்களாலும் புகழவும் படும். எல்லா உயிகளுக்கும் பாதுகாப்பான நீர் வற்றாத கமண்டலத்தையும் தாழ்ந்த சடையையும் சிறந்த செய்தற்கரிய தவத்தையுமுடைய சிவபெருமானே!