புறநானூறு, 312. (காளைக்குக் கடனே!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================
ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
அருஞ்சொற்பொருள்:-
புறந்தருதல் = பாதுகாத்தல்
கடன் = கடமை
தலை = இடம், முதன்மை
சான்றோன் = அறிஞன், வீரன்
வடித்தல் = உருவாக்கல்
நன்மை = மிகுதி
நடை = செல்வம், ஒழுக்கம், நடத்தை
நல்கல் = அளித்தல்
ஒளிறுதல் = விளங்குதல்
சமம் = போர்
முருக்குதல் = அழித்தல், முறித்தல்
எறிதல் = வெல்லுதல்
பெயர்தல் = மீளல்
இதன் பொருள்:-
மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஒளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்திப் போர்க்களத்தில் பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை.
பாடலின் பின்னணி:-
இப்பாடலில், பொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
’சான்றோன்’ என்ற சொல்லுக்கு ‘வீரன்’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, தன் மகனை வீரனாக்குவது தந்தையின் கடமை என்றும் பொன்முடியார் கூறுவதுபோல் தோன்றுகிறது. அவனுக்கு வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லரின் கடமை. போருக்குச் சென்று பகைவர்களின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் திரும்பி வருதல் அவ்விளைஞனின் கடமையாகும். ‘நடை’ என்ற சொல்லுக்கு ‘செல்வம்’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, யானைகளைக் கொன்ற இளைஞனுக்குப் பரிசாகச் செல்வம் அளிப்பது வேந்தனின் கடமை என்றும் பொருள் கூறலாம். ‘நன்னடை’ என்பதின் பாடபேதமாக “தண்ணடை” என்று சிலநூல்களில் காணப்படுகிறது. ‘தண்ணடை’ என்பதற்கு ‘மருத நிலத்து ஊர்’ என்று பொருள். சிறப்பாகப் போர் புரிந்த வீரர்களுக்கு அரசர்கள் ’தண்ணடை’ அளித்ததாக பாடல் 297-இல் காணலாம்.
புறநானூறு, 311. (சால்பு உடையோனே!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: பாண்பாட்டு.
===========================================
களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
பலர்குறை செய்த மலர்தார் அண்ணற்கு
ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்
சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே
அருஞ்சொற்பொருள்:-
களர் = களர்நிலம்
கூவல் = கிணறு, கேணி
புலைத்தி = வண்ணாத்தி
கழீஇய = வெளுத்த
தூ = தூய்மை
அறுவை = ஆடை
மறுகு = தெரு
மாசுண = மாசு+உண = அழுக்குப் பற்ற
குறை = இன்றியமையாப் பொருள்
தார் = மாலை
மாது, ஓ – அசைச் சொற்கள்
செரு = போர்
தோல் = கேடகம்
சால்பு = நிறைவு
இதன் பொருள்:-
களர்நிலத்தில் உள்ள கிணற்றைத் தோண்டி, நாள்தோறும் வண்ணாத்தி துவைத்து வெளுத்த தூய ஆடை பூக்களின் தாதுக்கள் நிறைந்த தெருவில் எழும் அழுக்குப் படிய இருந்து, பலர்க்கும் இன்றியமையாத செயல்களைச் செய்து உதவிய, மலர்மாலை அணிந்த தலைவனுக்குத் துணையாகப் போர்க்களத்தில் ஒருவரும் இல்லை. அவன் தன்னுடைய சிறப்பு மிகுந்த கண்கள் சிவந்து புகையெழ நோக்கி, ஒரு கேடகத்தைக் கொண்டே பகைவர் எறியும் படைக்கருவிகளைத் தடுக்கும் வலிமை நிறைந்தவனாக உள்ளான்.
பாடலின் பின்னணி:-
பலர்க்கும் பலவகையிலும் உதவியாக இருந்த வீரன் ஒருவன் பகைவர்கள் எறிந்த படைகள் அனைத்தையும் தன் ஒரு கேடகத்தையே கொண்டு தடுத்து வென்றான். அவன் போர் புரியும் ஆற்றலைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்த ஒளவையார் இப்பாடலில் அவனைப் புகழ்கிறார்.
சிறப்புக் குறிப்பு:-
போரில் இறந்த வீரர்க்குப் பாணர் சாப்பண் பாடித் தம் கடன் கழித்தலைப் பற்றிக் கூறும் பாடல்கள் பாண்பாட்டு என்னும் துறையில் அடங்கும். இப்பாடலில் கூறப்படும் வீரன் இறந்ததாகத் தெரியவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்கு உரியது.
புறநானூறு, 310. (உரவோர் மகனே!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: நூழிலாட்டு.
===========================================
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே;
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே
அருஞ்சொற்பொருள்:-
மடுத்தல் = ஊட்டல்
செறுதல் = சினத்தல்
ஓச்சுதல் = ஓங்குதல்
அஞ்சி = அஞ்சியவன்
உயவு = கவலை
மனனே = மனமே
புகர் = புள்ளி
நிறம் = தோல்
ஆனான் = அமையான்
உன்னிலென் = அறியேன், நினையேன்
மான் = குதிரை
உளை = பிடரிமயிர்
தோல் = கேடகம்
அணல் = தாடி
இதன் பொருள்:-
இளையோனாக இருந்தபொழுது பாலை ஊட்டினால் இவன் உண்ணமாட்டன். அதனால், சினம் கொள்ளாமல் சினம் கொண்டதுபோல் நடித்து ஓங்கிய சிறுகோலுக்கு அஞ்சிப் பால் உண்டவன் பொருட்டு வருந்தும் மனமே! இவன் முன்னாள் போரில் இறந்த வீரனின் மகன் என்பதற்கேற்ப, புள்ளிகள் பொருந்திய நெற்றியையுடைய யானைகளைக் கொன்றும் அவ்வளவில் நில்லாதவனாக, மார்பில் புண்படுத்தி ஊன்றி நிற்கும் அம்பைச் சுட்டிக் காட்டியபொழுது, ‘அதை நான் அறியேன்’ என்று கூறினான். அவன் இப்பொழுது குதிரையின் பிடரிமயிர் போன்ற குடுமியுடன், குறுந்தாடியுடன் கேடயத்தின்மேல் விழுந்து கிடக்கிறான்.
பாடலின் பின்னணி:-
இரு வேந்தர்களிடையே போர் மூண்டது. அப்போரில், முன்னாள் கடுமையாகப் போர்புரிந்து இறந்த வீரன் ஒருவனுடய மகன் பகைவர்களின் யானைகள் பலவற்றைக் கொன்றான். அப்போது, பகைவர் எறிந்த அம்பு ஒன்று அவன் மார்பில் பாய்ந்து தங்கியது. ஆனால், அவன் அதைப் பொருட்படுத்தாது போரைத் தொடர்ந்து நடத்தி இறந்தான். அதைக் கண்ட அவன் தாய், அவன் சிறுவனாக இருந்த போது பால் குடிக்க மறுத்ததையும் அதற்காக அவள் ஒரு கோலை எடுத்து அவனை வெருட்டியதற்கு அவன் அஞ்சியதையும் இப்போது நெஞ்சில் அம்பு தைத்தாலும் அஞ்சாமல் போர் புரிந்ததையும் எண்ணிப் பார்த்து வியப்பதை பொன்முடியார் இப்பாடலில் கூறுகிறார்.
புறநானூறு, 309. (என்னைகண் அதுவே!)
பாடியவர்: மதுரை இளங்கண்ணிக் கோசிகனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: நூழிலாட்டு.
===========================================
இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல்அரா உறையும் புற்றம் போலவும்
கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
உளன்என வெரூஉம் ஓர்ஒளி
வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே
அருஞ்சொற்பொருள்:-
இரும்பு = படைக்கலம்
முகம் = நுனி
நூறி = அழித்து
ஒன்னார் = பகைவர்
இரு = பெரிய
சமம் = போர்
கடத்தல் = வெல்லுதல்
ஏனோர் = மற்றவர்
அரா = பாம்பு
மாற்று = ஒழிக்கை
மாற்றுதல் = அழித்தல்
துப்பு = வலிமை
மாற்றார் = பகைவர்
வெருஉ = வெருவு = அச்சம்
ஓர் = ஒப்பற்ற
ஒளி = புகழ்
வலன் = வெற்றி
என்னை = என்+ஐ = என் தலைவன்
கண் = இடம்
இதன் பொருள்:-
இரும்பாலாகிய வேல், வாள் முதலிய படைக்கருவிகளின் நுனி மழுங்கி, ஒடியுமாறு பகைவரைக் கொன்று அவர்களைப் போரில் வெல்லுதல் எல்லா வீரர்களுக்கும் எளிதாகும். நல்லபாம்பு வாழும் புற்றுப் போலவும், கண்டாரைக் கொல்லும் காளை திரியும் பொதுவிடம் போலவும், வெல்லுதற்கு அரிய வலிமையுடைய பகைவர், இவன் பாசறையில் உள்ளான் எனக் கேட்டு நெஞ்சம் நடுங்கும்படியான சிறந்த புகழ், வெற்றி மிக்க நெடிய வேலினையுடைய நம் தலைவனிடம் மட்டுமே உள்ளது.
பாடலின் பின்னணி:-
ஒருவீரன் போரில் பகைவர் பலரையும், களிறுகள் பலவற்றையும் கொன்று குவிப்பது ஒரு அரிய செயல் அன்று. அது வீரர் பலருக்கும் பொதுவான செயலே. தன் பெயரைக் கேட்டவுடன் பகைவர்கள் உள்ளத்தில் அச்சத்தை உண்டாக்குபவன்தான் சிறந்த வீரன் என்ற கருத்தைப் புலவர் கோசிகனார் இப்பாடலில் கூறுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
இரும்பு என்றது ஆகுபெயராகி, இரும்பால் செய்யப்பட்ட வேல், வாள் முதலிய படைக்கருவிகளைக் குறிக்கின்றது.
புறநானூறு, 308. (நாணின மடப்பிடி!)
பாடியவர்: கோவூர் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================
பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே
வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
சாந்தார் அகலம் உளம்கழிந் தன்றே;
உளங்கழி சுடர்ப்படை ஏந்திநம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
புன்தலை மடப்பிடி நாணக்
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே
அருஞ்சொற்பொருள்:-
வார்த்தல் = ஊற்றுதல்
புரி = முறுக்கு
பச்சை = தோல்
மிஞிறு = வண்டு
குரல் = ஓசை
சீறீயாழ் = சிறிய யாழ்
நயவரு = விரும்பத்தக்க
எஃகம் = வேல், வாள் முதலிய படைக் கருவிகள்
சாந்து = சந்தனம்
தார் = மாலை
அகலம் = மார்பு
விறல் = வலிமை
ஓச்சுதல் = எறிதல்
துரத்தல் = எய்தல்
காலை = பொழுது
புன்தலை = சிறிய தலை
மடம் = இளமை
பிடி = பெண்யானை
குஞ்சரம் = யானை
இதன் பொருள்:-
பொன்வார்ந் தன்ன=====> ஏந்துமுகத் ததுவே
பொன்னால் செய்த கம்பிகளைப்போல் முறுக்கமைந்த நரம்புகளையும் மின்னலைப் போன்ற தோலையும், வண்டிசை போன்ற இசையையுமுடைய சிறிய யாழை இசைத்து, கேட்பவர்களின் நெஞ்சில் விருப்பத்தை எழுப்பும் புலமை நிறைந்த பாணனே! சிற்றூர் மன்னனின் சிறிய இலைகளையுடைய வேல், பெருவேந்தன் ஊர்ந்துவந்த யானையின் உயர்ந்த நெற்றியில் பாய்ந்து தங்கியது.
வேந்துஉடன்று=====> புறக்கொடுத் தனவே
பெருவேந்தன் சினத்துடன் எறிந்த வேல் என் கணவனுடைய சந்தனம் பூசிய, மாலைகள் அணிந்த மார்பை ஊடுருவியது. மார்பிலே பதிந்த ஒளியுடன் கூடிய விளங்கும் வேலைப் பிடுங்கிக் கையில் ஏந்தி மிக்க வலிமையுடைய நம் தலைவன் எறிந்தான். அதைக் கண்ட சிறிய தலையையுடைய இளம் பெண்யானைகள் நாணுமாறு பகைவனாகிய பெருவேந்தனின் களிறுகளெல்லாம் புறங்கொடுத்து ஓடின.
பாடலின் பின்னணி:-
ஒருகால் ஒருசிற்றூர் மன்னனுக்கும் பெருவேந்தனுக்கும் இடையே போர் மூண்டது. அப்போரில், சிற்றூர் மன்னன் மிகவும் வீரத்தோடு போர் புரிந்ததைப் புலவர் கோவூர் கிழார், சிற்றூர் வீரனின் மனைவியின் கூற்றாக இப்பாடலை இயற்றியுள்ளார்.
புறநானூறு, 307. (யாண்டுளன் கொல்லோ!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: களிற்றுடனிலை. தன்னால் கொல்லப்பட்ட யானையோடு ஒருவீரன் தானும் வீழ்ந்து மடிதலைக் கூறுதல்.
===========================================
ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
வேனல் வரி அணில் வாலத்து அன்ன
கான ஊகின் கழன்றுகு முதுவீ
அரியல் வான்குழல் சுரியல் தங்க
நீரும் புல்லும் ஈயாது உமணர்
யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு
வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல்லெனப்
பண்கொளற்கு அருமை நோக்கி
நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே
அருஞ்சொற்பொருள்:-
ஆசு = பற்று
யாண்டு = எங்கு, எப்பொழுது
வம்பலன் = புதியவன்
உது = அது (சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிலுள்ளதைக் குறிக்கும் ஒரு சுட்டுப் பெயர்)
வேனல் = வேனிற்காலம்
வாலம் = வால்
கானம் = காடு
ஊகம் = ஒருவகைப் புல்
உகுதல் = உதிர்த்தல்
வீ = பூ
அரியல் = அறுத்த வைத்த வரிசை
வான் = பெருமை
சுரியல் = சுருண்ட தலைமயிர்
சிறை = பக்கம்
முடம் = நொண்டி
பகடு = எருது
ஏய்ப்ப = போல
தெறுவர் = பகைவர்
எஞ்சல் = இறத்தல்
பண் = புலவர் பாடும் பாடல்
விழ்தல் = விரும்புதல்
புரைமை = உயர்வு
இதன் பொருள்:-
ஆசாகு=====> அதுகண்டு
வேனிற் காலத்தில் வரிகளையுடைய அணிலின் வாலைப்போல், காட்டு ஊகம் புல்லிலிருந்து உதிர்ந்த பழைய பூக்கள் வரிவரியாகப் பெரிய சுருண்ட தலைமயிரில் தங்குவதால், அவன் அயலான் போலத் தோன்றுகிறான் ( அவனைப் பார்த்தால் அடையாளம் தெரியவில்லை.). அங்கே அவனைப் பார்! மலை போன்ர யானையைக் கொன்று அதனோடு அவனும் இறந்தான். முடமாகியதால் உமணர்களால், நீரும் புல்லும் இல்லாமல் கைவிடப்பட்ட, வாழும் திறனில்லாத எருது தன்னருகே உள்ளதை எல்லாம் தின்று முடிப்பதைப்போல், அவ்வீரன், பகைவர்களின் உயிர்களை எல்லாம் கொன்று அவனும் இறந்தான். அதைக் கண்ட,
வெஞ்சின=====> யோனே
மிகுந்த சினம் கொண்ட யானையையுடைய வேந்தன், இக்களத்தில் இறப்பதைவிடச் சிறந்த செயல் வேறு யாதும் இல்லை என்று கருதியும், புலவர் பாடும் பாடல் பெறுவதர்குரிய அருமையை நினைத்தும், உயிர்மேல் ஆசையின்றிப், போர் செய்து இறக்க விரும்பினான். எமக்குப் பற்றாகிய எம் தலைவன் எங்கு உளணோ?
பாடலின் பின்னணி:-
போர்க்களத்தில் வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்து தன்னைத் தாக்க வந்த களிற்றைக் கொன்று தானும் இறந்தான். அதைக் கண்ட அவனுடைய மன்னன் தானும் அவ்வாறு போர் செய்து இறப்பதே சிறந்தது என்று முடிவு செய்தான். அந்தக் காட்சியை இப்பாடலில் புலவர் கூறுகிறார்.
புறநானூறு, 306. (ஒண்ணுதல் அரிவை!)
பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: மூதின் முல்லை.
===========================================
களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும்
ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே
(இப்பாடலில் சில சொற்கள் கிடைக்கவில்லை)
அருஞ்சொற்பொருள்:-
கூவல் = பள்ளம், கிணறு (சிறிதளவே நீருள்ள நீர்த்துறை)
அம்குடி = அழகிய குடி
ஒலித்தல் = தழைத்தல்
பரவல் = வணங்கல், வாழ்த்துதல்
ஒடியாது = இடைவிடாமல், நாள்தோறும்
விழுப்பகை = சிறந்த பகை
இதன் பொருள்:-
யானைகள் படிந்ததால் கலங்கிச் சேறாகி, உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும், தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது, ”நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் …..
அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக” என்று அவள் நடுகல்லை வழிபட்டாள்.
பாடலின் பின்னணி:-
மறக்குலப் பெண் ஒருத்தி நாள்தோறும் தன் முன்னோர்களின் நடுகல்லுக்குச் சென்று, தம் கணவன் போரில் வெற்றி பெறவேண்டும் என்றும், தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர்கள் வரவேண்டும் என்றும், தன் அரசன் போர்புரிவதற்கு பகைவர்கள் இருக்க வேண்டும் என்றும் வழிபட்டாள். அவள் வழிபடுவதைக் கண்ட புலவர் நன்முல்லையார், தான் கண்ட காட்சியை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர் வரவேண்டும் என்று இப்பாடலில் ஒருபெண் வேண்டுவது, விருந்தோம்பல் மிகவும் சிறந்த நற்பண்பாகவும், இல்லற வாழ்க்கையைப் பின்பற்றுபவர்களுக்கு விருந்தோம்பல் இன்றியமையாத ஒழுக்கமாகவும் சங்க காலத்தில் கருதப்பட்டது என்பதைக் காட்டுகிறது. நடுகல்லைத் தொழுதலும் நமது மரபு என்பதற்குச் சான்றும் இப்பாடல் தருகிறது.
புறநானூறு, 305. (சொல்லோ சிலவே!)
பாடியவர்: மதுரை வேளாசான்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: பார்ப்பன வாகை.
===========================================
வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே
அருஞ்சொற்பொருள்:-
வயலை = பசலை
மருங்குல் = இடை
உயவல் = வருத்தம், தளர்வு
பயலை = இளமை
எல்லி = இரவு
சீப்பு = மதில் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம்
மாண் = மாட்சிமையுடைய
இதன் பொருள்:-
பசலைக் கொடி போன்ற இடையையும் தளர்ந்த நடையையும் உடை ய இளம் பார்ப்பனன் ஒருவன் தடையின்றி, இரவில் வந்து அரசனிடம் சொல்லிய சொற்கள் சிலவே. அதன் விளைவாக, மதில்மேல் சாத்திய ஏணியும், கதவுக்கு வலிமை சேர்ப்பதற்காக வைத்திருந்த சீப்பும், சிறப்பாகப் போர்புரியும் யானைகள் அணிந்திருந்த மணிகளும் களையப்பட்டன. அதாவது, பார்ப்பனன் கூறிய சொற்களைக் கேட்டுப் போர் கைவிடப்பட்டது.
பாடலின் பின்னணி:-
இளம் பார்ப்பனன் ஒருவன் ஒருவேந்தனிடம் சென்று ஒரு சில சொற்களே சொல்லி, நடக்கவிருக்கும் போரை நிறுத்தியதை இப்பாடலில் புலவர் மதுரை வேளாசான் கூறுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
“சொல்லிய சொல்லோ சிலவே” என்பது போருக்கான ஏற்பாடுகள் அதிகமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதையும், அவன் சொல்லிய சொற்கள் சிலவாக இருந்தாலும் அதனால் பெற்ற பயன் அதிகம் என்ற பொருளிலும் கூறப்பட்டுள்ளது. மதில் மீது ஏறுவதற்கு ஏணியும், மதிற் கதவுகளை வலிமைப் படுத்துவதற்கு சீப்பும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மணியணிந்த யானை என்பது அரசன் ஏறிச் செல்லும் யானையைக் குறிக்கிறது.
புறநானூறு, 304. (எம்முன் தப்பியோன்!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================
கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி நீயே; நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு
நாளைச் செய்குவென் அமரெனக் கூறிப்
புன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்
கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கிரும் பாசறை நடுங்கின்று
இரண்டுஆ காதுஅவன் கூறியது எனவே
அருஞ்சொற்பொருள்:-
கொடு = வளைவு
குழை = காதணி
கொடுங்குழை = வளைந்த காதணி
கோதை = மாலை
பனி = குளிர்
களைதல் = போக்குதல்
நாரரி = நார்+அரி = நாரால் வடிகட்டப்பட்ட
வளி = காற்று
ஒழிக்கும் = குறைக்கும்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
நெருநை = நேற்று
தப்பியோன் = கொன்றவன்
அருத்தல் = உண்பித்தல்
மான் = குதிரை
கடவும் = செலுத்தும்
வலம் = வெற்றி
இலங்குதல் = விளங்குதல்
இரு = பெரிய
நடுங்கின்று = நடுக்கம் கொண்டது
இதன் பொருள்:-
கொடுங்குழை=====> ஒராங்கு
வளைந்த காதணிகளை அணிந்த மகளிர் மலை சூட்டி உன்னை மகிழ்விக்க, நடுங்கவைக்கும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிகட்டப்பட்ட மதுவை உண்டு, காற்றைவிட விரைவாகச் செல்லும் குதிரைகளைப் போருக்குத் தகுந்தவையாகச் (தயார்) செய்வதற்கு நீ விரைந்து சென்றுகொண்டிருக்கிறாய். ”நேற்று, என் தமையனைக் கொன்றவனோடும் அவன் தம்பியோடும்
நாளை=====> எனவே
நாளை ஒருசேரப் போர்புரிவேன்” என்று கூறி நீ சிறிதளவும் உணவு உண்ணாமல் பல குதிரைகளைப் பெரிதும் ஆராய்கின்றாய் என்று கேள்விப்பட்டு, வெற்றியை உண்டாக்கும் முரசையும் வெல்லும் போரையும் உடைய பகைவேந்தனின் விளங்கும் பெரிய பாசறையில் உள்ளவர்கள் உன் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதை எண்ணி நடுங்குகின்றார்கள்.
பாடலின் பின்னணி:-
வீரன் ஒருவனின் தமையனைப் பகையரசனின் வீரன் ஒருவன் கொன்றான். கொல்லப்பட்டவனின் தம்பி, கொன்றவனோடும் அவன் தம்பியோடும் போரிடுவதற்காக வருகிறான் என்ற செய்தியைக் கேட்டுப் பகையரசனின் பாசறையில் உள்ளவர்கள் நடுங்குகிறார்கள். இக்காட்சியை, இப்பாடலில் அரிசில் கிழார் குறிப்பிடுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
“செய்குவன் அமர்” என்றது போரில் கொல்வேன் என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது. “புன்வயிறு அருத்தல்” என்பதில் உள்ள “புன்” என்ற சொல் ”சிறிதளவு” என்ற பொருளில் வயிற்றைக் குறிக்காமல் உணவைக் குறிக்கிறது. பகை வேந்தனை “வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்” என்றது இகழ்ச்சிக் குறிப்பு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். “இரண்டு ஆகாது அவன் கூறியது” என்றது அவனுடைய சொல்லும் செயலும் இரண்டாக வேறுபட்டில்லாமல், அவன் சொன்னதைச் செய்வான் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.
புறநானூறு, 303. (மடப்பிடி புலம்ப எறிந்தான்!)
பாடியவர்: எருமை வெளியனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================
நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை,
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே
அருஞ்சொற்பொருள்:-
பிறக்கிடுதல் = பின்வாங்குதல் (பின்னிடுதல்)
குளம்பு = விலங்குகளின் பாதம்
கடையூஉ = ஊன்றி
கொட்பு = சுழற்சி
மான் = குதிரை
எள்ளுதல் = இகழ்தல்
செகுத்தல் = அழித்தல்
கூர்த்த = கூரிய
வெப்பு = கொடுமை
திறல் = வலி
எஃகம் = வேல்
வடு = புண்
காணிய = காண்பதற்கு
நெருநை = நேற்று
உரை = புகழ்
சால் = நிறைவு (மிகுதி)
முந்நீர் = கடல்
திமில் = படகு (தோணி)
போழ்தல் = பிளத்தல்
கயம் = பெருமை
இலங்குதல் = விளங்குதல்
மருப்பு = கொம்பு (தந்தம்)
எற்கு = எனக்கு
இதன் பொருள்:-
நேற்று, புகழ் மிக்க வேந்தர்கள் கண்முன்னே, கரையை மோதும் கடலைப் பிளந்துகொண்டு செல்லும் படகைப்போல் பகைவர் படையைப் பிளந்து அவர்களுடைய பெரிய தலையையுடைய இளம் பெண்யானைகள் தனிமையுற்று வருந்துமாறு, விளங்கும் கொம்புகளையுடைய களிறுகளை (ஆண்யானைகளை) நான் கொன்றேன். நிலம் பின்னோக்கிப் போவது போலக் குளம்பை ஊன்றிக் காண்போரைக் கலங்கவைக்கும் குதிரைமேல் வரும் வீரன் தன்னை இகழும் பகைவரைக் கொல்லும் காளை போன்றவன். அவன் கூரிய, கொடிய, வலிய வேலால் எதிர்த்தவர்களின் மார்பைக் குத்திப் புண்படுத்தி அதிரச் செய்பவன். அவன் என்னை நோக்கி வருகின்றான்.
பாடலின் பின்னணி:-
போர்க்களத்தில் வீரன் ஒருவனின் மறச் செயல்களைக் கண்ட புலவர் எருமை வெளியனார், இப்பாடலில் தாம் கண்ட காட்சியைக் குறிப்பிடுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
குதிரை வேகமாகச் செல்லும் பொழுது நிலம் பின்னோக்கிச் செல்வதுபோல் தோன்றுவதை ”நிலம் பிறக்கிடுதல்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.
“உரை” என்பது புலவரால் பாடப்படும் புகழைக் குறிக்கும் சொல்.
புறநானூறு, 302. (வேலின் அட்ட களிறு?)
பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: குதிரை மறம்.
===========================================
வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும் மாவே; பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
கைவார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயவின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறுபெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும்
தண்பெயல் உறையும் உறையாற் றாவே
அருஞ்சொற்பொருள்:-
வேய் = மூங்கில்
தாவுபு = தாவும்
மா = குதிரை
உகளுதல் = திரிதல்
விளங்குதல் = ஒளிர்தல்
நரந்தம் = மணம், நரந்தப் பூ
காழ் = முத்துவடம் (வடம்)
கோதை = கூந்தல்
ஐது = மெல்லிது
பாணி = தாளம்
வணர் = வளைவு
கோடு = யாழின் தண்டு
சீறீயாழ் = சிறிய யாழ்
வார்தல் = யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில்
ஓக்குதல் = தருதல்
நிரம்பு = மிகுதியாக
இயவு = வழி
நிரம்பா இயவு = குறுகிய வழி
கரம்பை =சாகுபடி செய்யக்கூடிய நிலம்
செகுத்தல் = அழித்தல், கொல்லுதல்
அட்ட = கொன்ற
இவர்தல் = செல்லுதல், உலாவுவுதல்
விசும்பு = ஆகாயம்
தண் = குளிர்ச்சி
பெயல் = மழை
உறை = மழைத்துளி
உறையாற்ற = அளவிட முடியாத
இதன் பொருள்:-
வெடிவேய்=====> சீறியாழ்
வளைத்த மூங்கில் விடுபட்டதும் கிளர்ந்து எழுவது போலக் குதிரைகள் தாவி ஒடித் திரிந்தன. ஒளிரும் அணிகலன்களை அணிந்த விறலியரின் கூந்தலில் நரந்தம் பூவால் பலவடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்டிருந்தது. அந்தக் கூந்தலில் பொன்னாலான பூக்கள் இடம் பெற்றன. மெல்லிய தாளத்திற்கேற்ப தம் கையால் யாழின் வளைந்த தண்டில் உள்ள
கைவார்=====> உறையாற் றாவே
நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்குக் குறுகிய வழிகளையுடைய, சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் உள்ள சிற்றூர்கள் வழங்கப்பட்டன. தன்னைப் பகைத்துப் பார்த்த பகைவரைக் கொல்லும் காளை போன்ற வீரன் ஒருவன் ஊக்கத்தோடு தன் வேலால் கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால், மேகங்கள் பரந்து உலவும் ஆகாயத்திலுள்ள விண்மீன்களும் குளிர்ந்த மழைத்துளிகளும் அவற்றை அளவிடற்கு ஆகா. அதாவது, அவன் கொன்ற களிறுகளின் எண்ணிக்கை வானத்தில் உள்ள விண்மீன்களையும் குளிர்ந்த மழைத்துளிகளையும்விட அதிகம்.
பாடலின் பின்னணி:-
குதிரையில் விரைந்து சென்று பகைவர்களையும் அவர்களுடைய யானைகளையும் அழிக்கும் வீரன் ஒருவனின் மறச்செயல்களை, இப்பாடலில் வெறிபாடிய காமக்காணியார் வியந்து பாடுகிறார்.
புறநானூறு, 301. (அறிந்தோர் யார்?)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================
பல் சான்றீரே! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்;
ஒளிறுஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்;
எனைநாள் தங்கும்நும் போரே; அனைநாள்
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
பலம்என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக்காண்
நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
எல்லிடைப் படர்தந் தோனே; கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது
ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே
அருஞ்சொற்பொருள்:-
சான்றோர் = அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்
புரைய = போல
அமர் = போர்
ஓம்புதல் = பாதுகாத்தல்
மருப்பு = கொம்பு
யாவண் = எவ்விடம்
கண்ணிய = கருதிய
பலம் = படை
உது – சுட்டுச் சொல்
உதுக்காண் – இதோ பாருங்கள்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
எல் = இரவு
கல் = ஆரவாரக் குறிப்பு
இலங்குதல் = விளங்குதல்
இலைவேல் = இலை வடிவில் அமைந்த வேல்
இதன் பொருள்:-
பல் சான்றீரே=====> போற்றுமின்
பல சான்றோர்களே! பல சான்றோர்களே! மணமாகாத பெண்ணின் கூந்தல் போல, போர் கருதி நடப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த ஆரவாரம் மிகுந்த பாசறையில் உள்ள பல சான்றோர்களே! முரசு முழங்கும் படையையுடைய உங்கள் அரசனையும் , விளங்குகின்ற கொம்புகளையுடைய உங்கள் யானைகளையும் நன்கு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
எனைநாள்=====> உதுக்காண்
எத்தனை நாட்கள் உங்கள் போர் இங்கே நடைபெறுமோ அத்தனை நாட்களும் தன்மேல் படையெடுத்துப் போரிடாதவரை போரிடுவது எங்கே உண்டு? தன்மேல் படையெடுத்துப் போரிட்டவர் தகுதியில்லாதவராக இருந்தால் எங்கள் எதிர்சென்று போர்செய்ய மாட்டான். அதனால், அவன் கருதியதை அறிந்தவர் உங்களுள் யார்? உங்கள் படையில் பலர் இருப்பதாக எண்ணிச் செருக்குடன் இகழ்வதைத் தவிர்க. இதோ பாருங்கள்!
நிலன்=====> வேலே
நிலத்தை அடியிட்டு அளப்பதைப்போல குறுகிய நீண்ட வழியிலும் நில்லாது மிக விரைவாக ஒடும் குதிரையின் பண்புகளைப் பாராட்டி, இரவுப்பொழுது வந்ததால், தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான். உங்கள் வேந்தன் ஏறிவரும் யானையைத் தாக்குவதற்கு அல்லாமல் தன்னுடைய விளங்குகின்ற, இலைவடிவில் அமைந்த வேலை எங்கள் அரசன் தன் கையில் எடுக்க மாட்டான்.
பாடலின் பின்னணி:-
இருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், பகைவேந்தன் பாசறை அமைத்து மிகுந்த பாதுகாவலோடு இருக்கிறான். ஆனால், அவன் போர்க்களத்திற்குச் சென்று போர்புரியவில்லை. அதைக்கண்ட மற்றொரு வேந்தனின் படைவீரர்கள், பகையரசனின் பாசறையோரைப் பார்த்து, “வீரர்களே! நீங்கள் உங்கள் பாசறையை முள்வேலியிட்டு அதனுள் அரசனையையும் யானைகளையும் நன்கு பாதுகாக்கிறீர்கள். எத்தனை நாட்கள் இவ்வாறு தங்குவதாக இருக்கிறீர்கள்? நீங்கள் எத்தனை நாட்கள் தங்கினாலும், நீங்கள் போர்புரியாவிட்டால் உங்களை நாங்கள் தாக்க மாட்டோம். தனக்கு நிகரற்றவர்களுடன் எங்கள் அரசன் போரிட மாட்டான். எங்கள் அரசனின் கருத்தை அறிந்தவர் உங்களில் உளரோ? எங்கள் அரசனின் கருத்தை அறியாது, உங்கள் படை பெரியது என்று இறுமாப்புடன் இருக்காதீர்கள். எங்கள் அரசன் தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான். அவன் வேலை எடுத்தால், உங்கள் அரசன் ஊர்ந்து வரும் யானையை நோக்கித்தான் எறிவான்” என்று கூறினான். அவன் கூறியதை இப்பாடலாகப் புலவர் ஆவூர் மூலங்கிழார் இயற்றியுள்ளார்.
சிறப்புக் குறிப்பு:-
“குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள்வேலி” என்பது பிறரால் தீண்டப்படாத குமரிப் பெண்ணின் கூந்தலைப்போல் எவராலும் தாண்டப்படாத அரிய முள்வேலி என்ற கருத்தில் கூறப்பட்டிருக்கிறது. பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை அவர்களின் கணவருக்கு மட்டுமே உண்டு என்பது சங்க காலத்தில் நிலவிய கருத்து என்பது புறநானூற்றுப் பாடல் 113- லும், குறுந்தொகைப் பாடல் 225-லும் காணப்படுகிறது.
”அரசும் ஓம்புமின்; களிறும் போற்றுமின்” என்றது போருக்கு வந்த மன்னன் போரிடாமல் பாசறையிலேயே உள்ளான் என்பதை இகழ்ச்சியாகச் சுட்டிக் காட்டுகிறது. போரிட வந்த அரசன்தான் போரைத் துவக்க வேண்டும் என்பது சங்க காலத்துப் போர் மரபு என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது.
புறநானூறு, 300. (எல்லை எறிந்தோன் தம்பி!)
பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================
தோல்தா தோல்தா என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இல் கோயின் தேருமால் நின்னே
அருஞ்சொற்பொருள்:-
தோல் = கேடயம்
என்றி = என்றாய்
துறுகல் = பாறை
உய்குதல் = தப்பித்தல்
நெருநல் = நேற்று
எல்லை = பகல்வேளை
எறிதல் = கொல்லுதல்
குன்றி = குன்றிமணி
அட்ட = காய்ச்சிய
கோய் = கட்குடம்
தேரும் = தேடும்
இதன் பொருள்:-
“கேடயம் தா; கேடயம் தா” என்று கேட்கிறாயே! கேடயம் மட்டுமல்லாமல் பெரும்பாறையையும் வைத்து உன்னை நீ மறைத்துக் கொண்டாலும் நீ தப்ப மாட்டாய். நேற்று, பகற்பொழுதில் நீ கொன்றவனின் தம்பி, அகலிலிட்ட குன்றிமணிபோல் சுழலும் கண்களோடு, பெரிய ஊரில், காய்ச்சிய கள்ளைப் பெறுவதற்கு, வீட்டில் புகுந்து, கள்ளை முகக்கும் கலயத்தைத் தேடுவதுபோல் உன்னைத் தேடுகிறான்.”
பாடலின் பின்னணி:-
ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவனைப் பகைவரின் படைவீரன் ஒருவன் கொன்றான். பகைவரின் படை வீரன், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காகக் “கேடயத்தைக் கொடு” என்று தன்னுடன் இருந்தவர்களைக் கேட்கிறான். அவர்களில் ஒருவன், “கேடயம் மட்டுமல்ல; பெரிய பாறாங்கல்லை வைத்து உன்னை நீ மறைத்துக்கொண்டாலும் உன்னால் தப்ப முடியாது. நேற்று நீ கொன்றாயே, அவன் தம்பி உன்னைத் தேடி வருகிறான்” என்று அவனை எச்சரிக்கிறான். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் அரிசில் கிழார் அதை இப்பாடலாக அமைத்துள்ளார்.
சிறப்புக் குறிப்பு:-
குன்றிமணிபோல் சுழலும் கண்களையுடையவன் என்பது சிறப்பான உவமை. விளக்கிலிட்ட குன்றிமணிபோல் கண்கள் சுழல்வது மட்டுமல்லாமல், சினத்தால் கண்கள் குன்றிமணியைப்போல் சிவந்திருப்பதையும் அவ்வுவமை குறிப்பிடுகிறது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் சுட்டிக் காட்டுகிறார்.
புறநானூறு, 299. (கலம் தொடா மகளிர்!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: குதிரை மறம்.
===========================================
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே
அருஞ்சொற்பொருள்:-
சீறூர் = சிற்றூர்
உழுத்ததர் = உழுந்தின் தோலோடு கூடிய சிறுதுகள்கள்
ஓய்தல் = தளர்தல்
புரவி = குதிரை
மண்டுதல் = விரைந்து செல்லுதல்
படைமுகம் = போர்முகம்
போழ்தல் = பிளத்தல்
நெய்ம்மிதி = நெய்ச்சோறு
கொய்தல் = அறுத்தல்
சுவல் = குதிரையின் கழுத்து மயிர் (பிடரி)
எருத்து = கழுத்து
தண்ணடை = மருதநிலத்தூர்
தார் = மாலை
அணங்கு = தெய்வத்தன்மை, வருத்தம்
கோட்டம் = கோயில்
கலம் = பாத்திரம்
இகழ்தல் = சோர்தல்
நின்றவ்வே = நின்றன
இதன் பொருள்:-
பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய குதிரைகள், உழுந்தின் சிறுதுகள்களைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடையனவாக இருந்தன. அவை, கடல்நீரைப் பிளந்துகொண்டு விரைந்து செல்லும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு சென்று போர் செய்தன. நெய்யுடன் கூடிய உணவை உண்டு, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய, மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள் தெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில், கலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப்போல சோர்ந்து ஒதுங்கி ஒளிந்து நின்றன.
பாடலின் பின்னணி:-
ஒருகால், சிற்றரசன் ஒருவனுக்கும் பெருவேந்தன் ஒருவனுக்கும் போர் நடந்தது. அப்போரில், சிற்றரசனின் குதிரைகள் சிறப்பாகப் போர்புரிந்ததாகவும் பெருவேந்தனின் குதிரைகள் போருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தன என்றும் இப்பாடலில் பொன்முடியார் குறிப்பிடுகிறார்.
சிறப்புக் குறிப்பு:=
நல்ல வளமான உணவு உண்ணாததால் சிற்றூர் மன்னனின் குதிரைகள் தளர்ந்த நடையையையுடையனவாக இருந்தன என்ற கருத்தை “ஓய்நடைப் புரவி” என்பது குறிக்கிறது.
காதலனைப் பிரிந்து வாடும் பெண், உடல் மெலிந்து, பொலிவிழந்து காணப்படும் பொழுது, அவள் தாய் அவளை முருகன் வருத்துவதாகக் கருதி, வெறியாட்டு நடத்தி முருகனை வழிபடுவது சங்க கால மரபு. அம்மரபுக்கேற்ப, அணங்கு என்ற சொல்லுக்கு வருத்தம் என்று ஒருபொருள் இருப்பதால், ”அணங்குடை முருகன் கோட்டம்” என்பதற்கு, ”பெண்களை வருத்தும் முருகனின் கோயில்” என்றும் பொருள் கொள்ளலாம்.
புறநானூறு, 298. (கலங்கல் தருமே!)
பாடியவர்: ஆவியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: குதிரை மறம்.
===========================================
எமக்கே கலங்கல் தருமே; தானே
தேறல் உண்ணும் மன்னே; நன்றும்
இன்னான் மன்ற வேந்தே; இனியே
நேரார் ஆரெயில் முற்றி
வாய்மடித்து உரறிநீ முந்துஎன் னானே
அருஞ்சொற்பொருள்:-
கலங்கல் = கலங்கிய கள்
தேறல் = தெளிந்த கள்
நன்று = பெரிது
இன்னான் = அன்பில்லாதவன்
நேரார் = பகைவர்
ஆர் = அரிய
எயில் = அரண்
முற்றி = சூழ்ந்து
உரறுதல் = ஒலியெழுப்புதல்
வாய்மடித்து உரறி = சீழ்க்கையடித்து
இதன் பொருள்:-
முன்பெல்லாம் எமக்குக் களிப்பை மிகுதியாகத் தரும் கலங்கிய கள்ளைக் கொடுத்துவிட்டுத் தான் களிப்பைக் குறைவாக அளிக்கும் தெளிந்தகள்ளை அரசன் உண்பான். அத்தகையவன், பகைவருடைய கொள்ளற்கரிய அரணைச் சூழ்ந்து போரிடும் இந்நேரத்தில், வாயை மடித்துச் சீழ்க்கையடித்து ஒலியெழுப்பி “நீ முந்து” என்று எங்களை ஏவுவதில்லை. ஆகவே, இப்பொழுது எம் அரசன் பெரிதும் அன்பில்லாதவனாகிவிட்டான்.
பாடலின் பின்னணி:-
அரசன் ஒருவன் தன் படைவீரர்களுடன் போருக்குப் புறப்படுகிறான். அவ்வேளையில், வீரர்களுக்குக் களிப்பை அதிகமாகத் தரும் கலங்கிய கள்ளைக் கொடுத்துத் தான் களிப்பை குறைவாக அளிக்கும் தெளிந்த கள்ளை உண்ணும் தன் அரசன், இப்பொழுது, போரில், “ நீங்கள் முதலிற் போங்கள்” என்று வீரர்களுக்குக் கட்டளையிடாமல் தானே முதலில் செல்லும் வீரமுடையடையவனாக இருக்கின்கிறானே என்று வீரன் ஒருவன் வியப்பதை, இப்படலில் ஆவியார் குறிப்பிடுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
மிகுந்த களிப்பைத் தரும் தெளிந்த கள்ளைத் வீரர்களுக்குத் தருவது மன்னன் வீரர்கள் மீது கொண்ட அன்பைக் காட்டுகிறது. வீரர்களை முதலில் போருக்கு அனுப்பாமல் மன்னன் தானே முதலில் போவது அவன் வீரத்தைக் குறிக்கிறது. ஆகவே, மன்னன் அன்பிலும் வீரத்திலும் சிறந்தவன் என்பதை வீரன் புகழ்கிறான்.
புறநானூறு, 297. (தண்ணடை பெறுதல்!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு.
===========================================
பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம் புரவே; நார்அரி
நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே
அருஞ்சொற்பொருள்:-
மேவல் = விரும்பல்
தண்ணடை = மெதுவான நடை
இரு = பெரிய
மருப்பு = கொம்பு
உறழ்தல் = ஒத்தல்
பை = பசிய
கோது = தோடு, சக்கை
கோல் = திரட்சி
அணை = படுக்கை
மரையா = காட்டுப்பசு
துஞ்சும் = தூங்கும்
சீறூர் = சிற்றூர்
கோள் = கொள்ளுதல்
இவண் = இங்கே (இவ்விடத்து)
புரவு = கொடை
நனை = பூ
நறவு = கள்
துறை = நீர்த்துறை
நணி = அணிமையான இடம்
கெழீஇ = பொருந்தி
கம்புள் = சம்பங்கழி (காட்டுக் கோழி)
தண்ணடை = மருதநிலத்தூர்
உரித்து = உரியது
வை = கூர்மை
நுதி = நுனி
வன் = வலிய
போந்தை = பனை
இதன் பொருள்:-
பெருநீர்=====> நார்அரி
மிகுந்த நீரில் இருக்க விரும்பும் மெல்லிய நடையையுடைய எருமையின் பெரிய கொம்பு போன்ற நெடிய முற்றுகளையுடைய பசிய பயற்றின் தோட்டைப் படுக்கையாகக் கொண்டு கன்றுடன் கூடிய காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக் கொடையாகக் கொள்வதை விரும்பமாட்டோம். நாரால் வடிக்கப்பட்டு
நனைமுதிர்=====> மோர்க்கே
பூக்களையிட்டு முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி, நீரின் பக்கத்தே பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும் மருதநிலத்தூர்களைப் பெறுவதும், கூர்மையான நுனியையுடைய நீண்ட வேல் தைத்து மார்புடன் மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு உரியதாகும்.
பாடலின் பின்னணி:-
பகை அரசன் ஒருவன் மற்றொரு அரசனின் நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகத் (வெட்சிப் போர் புரிவதற்காகத்) தன் படைவீரர்களைத் திரட்டினான்; அவர்களுக்கு உண்டாட்டு நடத்தினான். அவ்வமயம், போரில் வெற்றி பெற்றால் அரசனிடமிருந்து எதைப் பரிசாகப் பெறுவது சிறந்தது என்று வீரர்களுக்கிடையே உரையாடல் நிகழ்ந்தது. அங்கிருந்து அதைக் கேட்ட புலவர் ஒருவர் வீரர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடலை இப்பாடலில் கூறுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
ஒரு வீரன் தனக்கு அளிக்கப்படும் பொருளை ”வேண்டா” என்று மறுக்கும் பொழுது கள்ளை வாழ்த்துவது மரபு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார்.
”கள்ளை வாழ்த்தி, சிறிய ஊர்கள் வேண்டா என்று கூறி, மருதநிலத்தூர்களைப் பெறுவதும் வீரர்க்கு உரியது” என்று கூறியதால், மருதநிலத்தூர்களைப் பெறாமாலும் இருக்கலாம் என்ற கருத்தும் தோன்றுகிறது. அதனால், வீரர்கள் எப்பொழுதும் வீரத்தோடு போர்புரிவதால் வரும் புகழையே தமக்கு உரியதாகக் கருதினார்கள் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது. (ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு, பகுதி 2, பக்கம் 194)
புறநானூறு, 296. (நெடிது வந்தன்றால்!)
பாடியவர்: வெள்ளை மாறனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: ஏறாண் முல்லை.
===========================================
வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றவ்வே
வெந்துஉடன்று எறிவான் கொல்லோ?
நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே?
அருஞ்சொற்பொருள்:-
வேம்பு = வேப்ப மரம்
சினை = கிளை
காஞ்சி = ஒரு பண்
ஐயவி = வெண்கடுகு
கல் – ஆரவாரக் குறிப்பு
உடன்றல் = சிதைத்தல், பொருதல், சினக் குறிப்பு
எறிதல் = வெட்டுதல், வெல்லுதல்
நெடுந்தகை = பெரியோன்
இதன் பொருள்:-
வேப்ப மரத்தின் கிளைகளை ஒடிப்பதும், காஞ்சிப் பண் பாடுவதும், நெய்யுடைய கைய்யோடு வெண்கடுகைப் புகைப்பதும் ஆகிய நிகழ்ச்சிகள் எல்லா வீடுகளிலும் ஆரவாரமாக நடைபெறுகின்றன. பகை வேந்தனைச் சினந்து அவனை வீழ்த்தாமல் மீளேன் என்று இவன் போர் புரிகிறான் போலும். அதனால்தான் இப்பெரியோனின் தேர் காலம் தாழ்த்தி வருகிறது போலும்.
பாடலின் பின்னணி:-
ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அப்போர் முடியும் தருவாய் நெருங்கியது. அச்சமயம், போருக்குச் சென்ற வீரர்கள் பலரும் அவரவர் வீடுகளுக்குத் திரும்பினர். அவர்களின் வீடுகளில், பெண்டிர் வேப்பிலகளை வீட்டின் கூரையில் செருகினர்; காஞ்சிப் பண் பாடல்களைப் பாடினர்; கடுகுகளைப் புகைத்தனர். இவ்வாறு, எல்லா வீடுகளிலும் ஆரவாரம் மிகுதியாக இருந்தது. ஒரு வீட்டில் மட்டும், போருக்குச் சென்ற ஆண்மகன் இன்னும் திரும்பி வரவில்லை. அவன் பகைவேந்தனைக் கொன்றுவிட்டுத்தான் திரும்புவான் போலும் என்று அவன் தாய் நினைக்கிறாள். இக்காட்சியை, புலவர் வெள்ளை மாறனார் இப்பாடலாக இயற்றியுள்ளார்.
சிறப்புக் குறிப்பு:-
வீடுகளில் வேப்பிலையைச் செருகுவதும், காஞ்சிப் பண்ணைப் பாடுவதும், ஐயவி புகைப்பதும், போரில் காயமடைந்தவர்களின் புண்களை ஆற்றுவதற்காக நடைபெறும் செயல்களாகும்.
புறநானூறு, 295. (ஊறிச் சுரந்தது!)
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வாகை.
துறை: உவகைக் கலுழ்ச்சி.
===========================================
கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
வெந்துவாய் வடித்த வேல்தலைப் பெயரித்
தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண்டு அருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே
அருஞ்சொற்பொருள்:-
கிளர்தல் = எழுதல்
கட்டூர் = கட்டப்பட்ட ஊர் (பாசறை)
நாப்பண் = இடையே
வடித்த = கூர்மையாக்கிய
தோடு = தொகுதி (கூட்டம்)
உகைத்தல் = செலுத்துதல்
துரந்து = சென்று
ஞாட்பு = போர், போர்க்களம்
போழ்தல் = பிளத்தல்
வாய் = இடம்
அழுவம் = போர், போர்க்களம்
பூட்கை = கொள்கை
விடலை = வீரன்
இதன் பொருள்:-
கடல் எழுந்தாற்போல் அமைந்துள்ள பெரிய பாசறையோடு கூடிய போர்க்களத்தின் நடுவில், தீயால் சூடாக்கிக் கூர்மையாகத் தீட்டிய வேலைப் பகைவர்பால் திருப்பி, தன் படையை ஏவித் தானும் எழுந்து சென்று, அம்பும் வேலும் செலுத்திப் பகைவரைக் கொல்லும் போரில் எதிர்த்து வரும் பகைவர் படையைப் பிளந்து தான் போர் செய்வதற்கு இடமுண்டாகுமாறு குறுக்கிட்டுத் தடுத்த வீரன் ஒருவன் படைகளின் நடுவில் துண்டுபட்டு வேறு வேறாகக் கிடந்தான். புறமுதுகு காட்டி ஓடாத கொள்கையையுடைய அவ்வீரனின் தாய்க்குத் தன் மகன் வீரமரணம் அடைந்ததைக் கண்டதால், அன்பு மிகுந்தது. அவளுடைய வற்றிய முலைகள் மீண்டும் பாலூறிச் சுரந்தன.
பாடலின் பின்னணி:-
ஒருகால், இரு அரசர்களிடையே பெரும்போர் நடைபெற்றது. அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போரிட்டான். அவன் உடல் பல துண்டுகளாகப் பகைவர்களால் வெட்டப்பட்டது. அவன் இறந்த செய்தி அவன் தாய்க்குத் தெரியவந்ததது. அவன் தாய், தன் மகனின் உடலைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். போர்க்களத்தில், அவன் வீரமரணம் அடைந்ததைப் பார்த்த அத்தாய் பெருமகிழ்ச்சி அடைந்தாள். உனர்ச்சிப் பெருக்கால் அவள் முலைகளினின்று பால் சுரந்தது. இச்செய்தியை ஒளவையார் இப்பாடலில் கூறுகிறார்.
சிறப்புக் குறிப்பு:-
போர்வீரர்கள் தங்குவதற்காகப் புதிதாகக் கட்டப்படும் பாசறை கட்டூர் என்று அழைக்கப்பட்டது. போர்க்களத்தில் கொல்லரும் உடனிருந்து வேல் போன்ற படைக் கருவிகளைச் செம்மைப் படுத்திக் கொடுத்தனர் என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.
புறநானூறு, 294. (வம்மின் ஈங்கு!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================
வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்குஎனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
அரவுஉமிழ் மணியின் குறுகார்;
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே
அருஞ்சொற்பொருள்:-
மதியம் = மதி
கண்கூடு = கண்குழி (கண்)
இறுத்தல் = தங்குதல்
கண்கூடு இறுத்த = கண்களை மூடுவதற்காக (உறங்குவதற்காக)
மருள் - உவமை உருபு
தழீஇ = உள்ளடக்கிக்கொண்டு
கூற்று = இயமன்
அழுவம் = போர், போர்க்களம்
இறை = இறைவன் = அரசன்
பெயர் = புகழ்
நுமர் = உங்களவர் (உம்மவர்)
நாண்முறை = வாழ்நாள்
தபுத்தல் = கெடுத்தல்
சிறை = பக்கம்
அரவு = பாம்பு
மணி = இரத்தினம்
நிரை = ஒழுங்கு (வரிசை)
தார் = மாலை
கேள்வன் = கணவன்
இதன் பொருள்:-
வெண்மையான குடைபோலத் திகழும் திங்கள் வானத்தின் மேலிருந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. வீரர்கள் உறங்குவதற்காகக் கட்டப்பட்ட கடல்போன்ற பாசறையில் புதிதாகச் செய்யப்பட்ட படைக்கருவிகளுடன் கொலைத் தொழிலைச் செய்யும் வீரர்கள் கூடியிருந்தனர். நம்மவர் அயலவர் என்று வேறுபாடு காணமுடியாத அளவுக்குக் கடுமையாகப் போர் நடைபெற்றது. அப்போர்க்களத்தில், உன் கணவன், “உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் கூறி, உங்களுக்குள் யாருக்கெல்லாம் வாழ்நாள் முடியப் போகிறதோ அவர்கள் என்னோடு போரிட வாருங்கள்.” என்று கூறி, போரிட வந்தவர்களையெல்லாம் வென்று ஒரு பக்கம் நின்றான். பாம்பு உமிழ்ந்த மணியை (நாகரத்தினத்தை) எடுக்க எவரும் நெருங்காததைப்போல், வரிசையாக மாலையணிந்த மார்பையுடைய உன் கணவனை எவரும் நெருங்கவில்லை.
பாடலின் பின்னணி:-
ஒருகால், ஓரூரில் கடும்போர் நிகழ்ந்தது. தம்மவர் என்றும், அயலார் என்றும் வேறுபாடு அறியாமல் வீரர்கள் போர் செய்தனர். அப்போரில், தானைத் தலைவன் ஒருவன் மிகுந்த வீரத்தோடு போர் செய்தான். அத்தலைவன், பகைவர்களை நோக்கி, “உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் சொல்லிக்கொண்டு வந்து என்னோடு போரிடுங்கள்” என்று கூறி எதிர்த்து வந்தவர்களையெல்லாம் வென்றான். பின்னர், பகைவர்களைப் பார்த்து, “ உங்களில் யாருக்கு வாழ்நாட்களின் எல்லை முடிந்ததோ அவர்கள் என்னோடு போரிட வருக.” என்று பகைவர்களை போருக்கு அழைத்து ஒரு பக்கம் நின்றான். அவனை நெருங்குவதற்கு பகைவர் அஞ்சினர். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் பெருந்தலைச் சாத்தனார், அத்தலைவனின் மனைவியிடம் அதைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
சிறப்புக் குறிப்பு:-
இங்கு வெண்குடை என்று குறிப்பிடப்பட்டது அரசனின் வெண்கொற்றக்குடையாகும். திங்களை அரசனின் வெண்கொற்றக்குடைக்கு ஒப்பிட்டதால், அரசனின் குடை திங்ககளைவிடச் சிறப்பானதாகப் புலவர் கருதுவதாகத் தெரிகிறது.
உயிரை உடம்பினின்று நீக்குவது கூற்றின் (இயமனின்) செயல். அச்செயலைப் படைவீரர்களும் செய்வதால், அவர்களைக் “கூற்று வினை ஆடவர்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.
புறநானூறு, 293. (பூவிலைப் பெண்டு!)
பாடியவர்: நொச்சிநியமங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: காஞ்சி.
துறை: பூக்கோள் காஞ்சி.
===========================================
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே பூவிலைப் பெண்டே!
அருஞ்சொற்பொருள்:-
நிறப்படை = குத்துக்கோல் (அங்குசம்)
ஒல்கா = தளராத
குறும்பு = அரண்
குறும்பர் = அரணுக்குப் புறத்தே நின்று போர் செய்யும் பகைவர்
ஏவல் = கட்டளை
தண்ணுமை = ஒருவகைப் பறை
இரங்கல் = ஒலித்தல்
எழில் = தோற்றப் பொலிவு
வினை = போர்
அளியள் = இரங்கத் தக்கவள்
இதன் பொருள்:-
குத்துக்கோலுக்கும் அடங்காத யானையின் மேலே இருந்து தண்ணுமை என்னும் பறையை அறைவோன், அரணுக்கு வெளியே இருந்து போர் செய்யும் பகைவரை எதிர்த்துப் போரிடுவதற்கு வருமாறு, போருக்கு அஞ்சி நாணி இருக்கும் ஆண்களுக்கு கட்டளையிடும் பறையின் முழக்கம் கேட்கிறது. ஆகவே, இங்குள்ள ஆண்கள் அனைவரும் போருக்குப் போகப்போகிறார்கள். இனி இங்குள்ள என்னைப் போன்ற மறக்குலப் பெண்கள் பூச் சூட மாட்டார்கள். இந்தப் பூ விற்கும் பெண், எங்களைவிட அதிகமாகத் தோற்றப் பொலிவிழந்து காணப்படுகிறாள். அவள் பூவை விற்பதற்கு, போருக்குப் போகாதவர்கள் இருக்கும் வீடுகளுக்குப் போவாள் போலும்; அவள் இரங்கத் தக்கவள்.
பாடலின் பின்னணி:-
ஓரூரில் இருந்த அரசனின் அரண்களைப் பகை அரசன் ஒருவன் முற்றுகையிட்டான். அதனால் போர் தொடங்கியது. வீரர்கள் அனைவரையும் போருக்கு வருமாறு பறை சாற்றப்படுகிறது. வீரர்கள் பலரும் ஏற்கனவே போருக்குச் சென்றுவிட்டார்கள். போருக்கு அஞ்சி இன்னும் தங்கள் வீடுகளிலேயே இருக்கும் ஆண்கள் வெட்கப்படும்படி அந்தப் பறை ஒலிக்கிறது. வீரர்கள் போருக்குச் சென்றால், அவர்களின் மனைவியர் அவர்களைப் பிரிந்திருக்கும் நாட்களில் தங்கள் தலையில் பூ அணியாமல் இருப்பது மரபு. போருக்குச் சென்ற வீரர்களின் வீடுகள் உள்ள இடத்தில் பெண் ஒருத்தி பூ விற்க வந்தாள். அங்குள்ள மறக்குலப் பெண் ஒருத்தி, ”இங்கு யாரும் பூச் சூட மாட்டர்களே. இவளிடத்தில் பூ வாங்குவார் எவரும் இல்லையே; இவள் நிலைமை மிகவும் இரங்கத்தக்கது.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
சிறப்புக் குறிப்பு:-
தன் கணவன் போருக்குச் சென்றால் அவன் திரும்பி வரும்வரை மனைவி தன் தலையில் பூச்சூடாமல் இருப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.
பார்ப்பனர், நோய்வாய்ப்பட்டோர், ஆண்பிள்ளைகள் இல்லாதோர் ஆகிய ஒரு சில ஆண்கள் மட்டுமே போருக்குச் செல்லமாட்டார்கள். ஆனால், அத்தகையவர் வெகு சிலரே. ஆகவே, பூ விற்கும் பெண் அத்தகையவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றுதான் பூ விற்க வேண்டும். அதனால்தான், அவள் மிகவும் இரங்கத் தக்கவள் என்று மறக்குலப் பெண் கருதுவதாகப் புலவர் குறிப்பிடுகிறார்.