புறநானூறு - 301 (அறிந்தோர் யார்?)

புறநானூறு - 301 (அறிந்தோர் யார்?)

புறநானூறு, 301. (அறிந்தோர் யார்?)
பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================

பல் சான்றீரே! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறைப் பல்சான் றீரே!
முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்;
ஒளிறுஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்;

எனைநாள் தங்கும்நும் போரே; அனைநாள்
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர்சென்று எறிதலும் செல்லான்; அதனால்
அறிந்தோர் யாரவன் கண்ணிய பொருளே
பலம்என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக்காண்

நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
எல்லிடைப் படர்தந் தோனே; கல்லென
வேந்தூர் யானைக்கு அல்லது
ஏந்துவன் போலான்தன் இலங்கிலை வேலே

அருஞ்சொற்பொருள்:-

சான்றோர் = அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர்
புரைய = போல
அமர் = போர்
ஓம்புதல் = பாதுகாத்தல்
மருப்பு = கொம்பு
யாவண் = எவ்விடம்
கண்ணிய = கருதிய
பலம் = படை
உது – சுட்டுச் சொல்
உதுக்காண் – இதோ பாருங்கள்
வண் = மிகுதி
பரிதல் = ஓடுதல்
புரவி = குதிரை
எல் = இரவு
கல் = ஆரவாரக் குறிப்பு
இலங்குதல் = விளங்குதல்
இலைவேல் = இலை வடிவில் அமைந்த வேல்

இதன் பொருள்:-

பல் சான்றீரே=====> போற்றுமின்

பல சான்றோர்களே! பல சான்றோர்களே! மணமாகாத பெண்ணின் கூந்தல் போல, போர் கருதி நடப்பட்ட கடத்தற்கரிய முள்வேலி சூழ்ந்த ஆரவாரம் மிகுந்த பாசறையில் உள்ள பல சான்றோர்களே! முரசு முழங்கும் படையையுடைய உங்கள் அரசனையும் , விளங்குகின்ற கொம்புகளையுடைய உங்கள் யானைகளையும் நன்கு பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

எனைநாள்=====> உதுக்காண்

எத்தனை நாட்கள் உங்கள் போர் இங்கே நடைபெறுமோ அத்தனை நாட்களும் தன்மேல் படையெடுத்துப் போரிடாதவரை போரிடுவது எங்கே உண்டு? தன்மேல் படையெடுத்துப் போரிட்டவர் தகுதியில்லாதவராக இருந்தால் எங்கள் எதிர்சென்று போர்செய்ய மாட்டான். அதனால், அவன் கருதியதை அறிந்தவர் உங்களுள் யார்? உங்கள் படையில் பலர் இருப்பதாக எண்ணிச் செருக்குடன் இகழ்வதைத் தவிர்க. இதோ பாருங்கள்!

நிலன்=====> வேலே

நிலத்தை அடியிட்டு அளப்பதைப்போல குறுகிய நீண்ட வழியிலும் நில்லாது மிக விரைவாக ஒடும் குதிரையின் பண்புகளைப் பாராட்டி, இரவுப்பொழுது வந்ததால், தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான். உங்கள் வேந்தன் ஏறிவரும் யானையைத் தாக்குவதற்கு அல்லாமல் தன்னுடைய விளங்குகின்ற, இலைவடிவில் அமைந்த வேலை எங்கள் அரசன் தன் கையில் எடுக்க மாட்டான்.

பாடலின் பின்னணி:-

இருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், பகைவேந்தன் பாசறை அமைத்து மிகுந்த பாதுகாவலோடு இருக்கிறான். ஆனால், அவன் போர்க்களத்திற்குச் சென்று போர்புரியவில்லை. அதைக்கண்ட மற்றொரு வேந்தனின் படைவீரர்கள், பகையரசனின் பாசறையோரைப் பார்த்து, “வீரர்களே! நீங்கள் உங்கள் பாசறையை முள்வேலியிட்டு அதனுள் அரசனையையும் யானைகளையும் நன்கு பாதுகாக்கிறீர்கள். எத்தனை நாட்கள் இவ்வாறு தங்குவதாக இருக்கிறீர்கள்? நீங்கள் எத்தனை நாட்கள் தங்கினாலும், நீங்கள் போர்புரியாவிட்டால் உங்களை நாங்கள் தாக்க மாட்டோம். தனக்கு நிகரற்றவர்களுடன் எங்கள் அரசன் போரிட மாட்டான். எங்கள் அரசனின் கருத்தை அறிந்தவர் உங்களில் உளரோ? எங்கள் அரசனின் கருத்தை அறியாது, உங்கள் படை பெரியது என்று இறுமாப்புடன் இருக்காதீர்கள். எங்கள் அரசன் தன் பாசறைக்குச் சென்றிருக்கிறான். அவன் வேலை எடுத்தால், உங்கள் அரசன் ஊர்ந்து வரும் யானையை நோக்கித்தான் எறிவான்” என்று கூறினான். அவன் கூறியதை இப்பாடலாகப் புலவர் ஆவூர் மூலங்கிழார் இயற்றியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு:-

“குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அருமுள்வேலி” என்பது பிறரால் தீண்டப்படாத குமரிப் பெண்ணின் கூந்தலைப்போல் எவராலும் தாண்டப்படாத அரிய முள்வேலி என்ற கருத்தில் கூறப்பட்டிருக்கிறது. பெண்களின் கூந்தலைத் தொடும் உரிமை அவர்களின் கணவருக்கு மட்டுமே உண்டு என்பது சங்க காலத்தில் நிலவிய கருத்து என்பது புறநானூற்றுப் பாடல் 113- லும், குறுந்தொகைப் பாடல் 225-லும் காணப்படுகிறது.

”அரசும் ஓம்புமின்; களிறும் போற்றுமின்” என்றது போருக்கு வந்த மன்னன் போரிடாமல் பாசறையிலேயே உள்ளான் என்பதை இகழ்ச்சியாகச் சுட்டிக் காட்டுகிறது. போரிட வந்த அரசன்தான் போரைத் துவக்க வேண்டும் என்பது சங்க காலத்துப் போர் மரபு என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)

Tag cloud

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

All site tags