புறநானூறு - 299 (கலம் தொடா மகளிர்!)

புறநானூறு - 299 (கலம் தொடா மகளிர்!)

புறநானூறு, 299. (கலம் தொடா மகளிர்!)
பாடியவர்: பொன்முடியார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: நொச்சி.
துறை: குதிரை மறம்.
===========================================

பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

அருஞ்சொற்பொருள்:-

சீறூர் = சிற்றூர்
உழுத்ததர் = உழுந்தின் தோலோடு கூடிய சிறுதுகள்கள்
ஓய்தல் = தளர்தல்
புரவி = குதிரை
மண்டுதல் = விரைந்து செல்லுதல்
படைமுகம் = போர்முகம்
போழ்தல் = பிளத்தல்
நெய்ம்மிதி = நெய்ச்சோறு
கொய்தல் = அறுத்தல்
சுவல் = குதிரையின் கழுத்து மயிர் (பிடரி)
எருத்து = கழுத்து
தண்ணடை = மருதநிலத்தூர்
தார் = மாலை
அணங்கு = தெய்வத்தன்மை, வருத்தம்
கோட்டம் = கோயில்
கலம் = பாத்திரம்
இகழ்தல் = சோர்தல்
நின்றவ்வே = நின்றன

இதன் பொருள்:-

பருத்தியை வேலியாகக் கொண்ட சிறிய ஊரின் மன்னனுடைய குதிரைகள், உழுந்தின் சிறுதுகள்களைத் தின்று வளர்ந்த தளர்ந்த நடையையுடையனவாக இருந்தன. அவை, கடல்நீரைப் பிளந்துகொண்டு விரைந்து செல்லும் தோணியைப் போலப் பகைவரின் படையைப் பிளந்துகொண்டு சென்று போர் செய்தன. நெய்யுடன் கூடிய உணவை உண்டு, ஒழுங்காகக் கத்திரிக்கப்பட்ட பிடரியையுடைய, மருதநிலத்தூர்களையுடைய பெருவேந்தனின் மாலைகள் அணிந்த குதிரைகள் தெய்வத்தன்மை வாய்ந்த முருகன் கோட்டத்தில், கலன்களைத் தொடாத விலக்குடைய மகளிரைப்போல சோர்ந்து ஒதுங்கி ஒளிந்து நின்றன.

பாடலின் பின்னணி:-

ஒருகால், சிற்றரசன் ஒருவனுக்கும் பெருவேந்தன் ஒருவனுக்கும் போர் நடந்தது. அப்போரில், சிற்றரசனின் குதிரைகள் சிறப்பாகப் போர்புரிந்ததாகவும் பெருவேந்தனின் குதிரைகள் போருக்கு அஞ்சி ஓடி ஒளிந்தன என்றும் இப்பாடலில் பொன்முடியார் குறிப்பிடுகிறார்.

சிறப்புக் குறிப்பு:=

நல்ல வளமான உணவு உண்ணாததால் சிற்றூர் மன்னனின் குதிரைகள் தளர்ந்த நடையையையுடையனவாக இருந்தன என்ற கருத்தை “ஓய்நடைப் புரவி” என்பது குறிக்கிறது.

காதலனைப் பிரிந்து வாடும் பெண், உடல் மெலிந்து, பொலிவிழந்து காணப்படும் பொழுது, அவள் தாய் அவளை முருகன் வருத்துவதாகக் கருதி, வெறியாட்டு நடத்தி முருகனை வழிபடுவது சங்க கால மரபு. அம்மரபுக்கேற்ப, அணங்கு என்ற சொல்லுக்கு வருத்தம் என்று ஒருபொருள் இருப்பதால், ”அணங்குடை முருகன் கோட்டம்” என்பதற்கு, ”பெண்களை வருத்தும் முருகனின் கோயில்” என்றும் பொருள் கொள்ளலாம்.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)

Tag cloud

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

All site tags