புறநானூறு - 297 (தண்ணடை பெறுதல்!)

புறநானூறு - 297 (தண்ணடை பெறுதல்!)

புறநானூறு, 297. (தண்ணடை பெறுதல்!)
பாடியவர்: தெரியவில்லை.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: வெட்சி.
துறை: உண்டாட்டு.
===========================================

பெருநீர் மேவல் தண்ணடை எருமை
இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
கோள்இவண் வேண்டேம் புரவே; நார்அரி

நனைமுதிர் சாடி நறவின் வாழ்த்தித்
துறைநணி கெழீஇக் கம்புள் ஈனும்
தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
நெடுவேல் பாய்ந்த மார்பின்
மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

அருஞ்சொற்பொருள்:-

மேவல் = விரும்பல்
தண்ணடை = மெதுவான நடை
இரு = பெரிய
மருப்பு = கொம்பு
உறழ்தல் = ஒத்தல்
பை = பசிய
கோது = தோடு, சக்கை
கோல் = திரட்சி
அணை = படுக்கை
மரையா = காட்டுப்பசு
துஞ்சும் = தூங்கும்
சீறூர் = சிற்றூர்
கோள் = கொள்ளுதல்
இவண் = இங்கே (இவ்விடத்து)
புரவு = கொடை
நனை = பூ
நறவு = கள்
துறை = நீர்த்துறை
நணி = அணிமையான இடம்
கெழீஇ = பொருந்தி
கம்புள் = சம்பங்கழி (காட்டுக் கோழி)
தண்ணடை = மருதநிலத்தூர்
உரித்து = உரியது
வை = கூர்மை
நுதி = நுனி
வன் = வலிய
போந்தை = பனை

இதன் பொருள்:-

பெருநீர்=====> நார்அரி

மிகுந்த நீரில் இருக்க விரும்பும் மெல்லிய நடையையுடைய எருமையின் பெரிய கொம்பு போன்ற நெடிய முற்றுகளையுடைய பசிய பயற்றின் தோட்டைப் படுக்கையாகக் கொண்டு கன்றுடன் கூடிய காட்டுப்பசு உறங்கும் சிறிய ஊர்களைக் கொடையாகக் கொள்வதை விரும்பமாட்டோம். நாரால் வடிக்கப்பட்டு

நனைமுதிர்=====> மோர்க்கே

பூக்களையிட்டு முதிரவைத்த சாடியிலுள்ள கள்ளை வாழ்த்தி, நீரின் பக்கத்தே பொருந்தி காட்டுக்கோழிகள் முட்டையிடும் மருதநிலத்தூர்களைப் பெறுவதும், கூர்மையான நுனியையுடைய நீண்ட வேல் தைத்து மார்புடன் மடல் நிறைந்த வலிய பனைமரம்போல் நிற்கும் வீரர்க்கு உரியதாகும்.

பாடலின் பின்னணி:-

பகை அரசன் ஒருவன் மற்றொரு அரசனின் நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகத் (வெட்சிப் போர் புரிவதற்காகத்) தன் படைவீரர்களைத் திரட்டினான்; அவர்களுக்கு உண்டாட்டு நடத்தினான். அவ்வமயம், போரில் வெற்றி பெற்றால் அரசனிடமிருந்து எதைப் பரிசாகப் பெறுவது சிறந்தது என்று வீரர்களுக்கிடையே உரையாடல் நிகழ்ந்தது. அங்கிருந்து அதைக் கேட்ட புலவர் ஒருவர் வீரர்களுக்கிடையே நடைபெற்ற அந்த உரையாடலை இப்பாடலில் கூறுகிறார்.

சிறப்புக் குறிப்பு:-

ஒரு வீரன் தனக்கு அளிக்கப்படும் பொருளை ”வேண்டா” என்று மறுக்கும் பொழுது கள்ளை வாழ்த்துவது மரபு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிப்பிடுகிறார்.

”கள்ளை வாழ்த்தி, சிறிய ஊர்கள் வேண்டா என்று கூறி, மருதநிலத்தூர்களைப் பெறுவதும் வீரர்க்கு உரியது” என்று கூறியதால், மருதநிலத்தூர்களைப் பெறாமாலும் இருக்கலாம் என்ற கருத்தும் தோன்றுகிறது. அதனால், வீரர்கள் எப்பொழுதும் வீரத்தோடு போர்புரிவதால் வரும் புகழையே தமக்கு உரியதாகக் கருதினார்கள் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது. (ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, புறநானூறு, பகுதி 2, பக்கம் 194)

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)

Tag cloud

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

All site tags