புறநானூறு - 294 (வம்மின் ஈங்கு!)

புறநானூறு - 294 (வம்மின் ஈங்கு!)

புறநானூறு, 294. (வம்மின் ஈங்கு!)
பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: தும்பை.
துறை: தானை மறம்.
===========================================

வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி நுமருள்
நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்குஎனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
அரவுஉமிழ் மணியின் குறுகார்;
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

அருஞ்சொற்பொருள்:-

மதியம் = மதி
கண்கூடு = கண்குழி (கண்)
இறுத்தல் = தங்குதல்
கண்கூடு இறுத்த = கண்களை மூடுவதற்காக (உறங்குவதற்காக)
மருள் - உவமை உருபு
தழீஇ = உள்ளடக்கிக்கொண்டு
கூற்று = இயமன்
அழுவம் = போர், போர்க்களம்
இறை = இறைவன் = அரசன்
பெயர் = புகழ்
நுமர் = உங்களவர் (உம்மவர்)
நாண்முறை = வாழ்நாள்
தபுத்தல் = கெடுத்தல்
சிறை = பக்கம்
அரவு = பாம்பு
மணி = இரத்தினம்
நிரை = ஒழுங்கு (வரிசை)
தார் = மாலை
கேள்வன் = கணவன்

இதன் பொருள்:-

வெண்மையான குடைபோலத் திகழும் திங்கள் வானத்தின் மேலிருந்து ஒளி வீசிக் கொண்டிருந்தது. வீரர்கள் உறங்குவதற்காகக் கட்டப்பட்ட கடல்போன்ற பாசறையில் புதிதாகச் செய்யப்பட்ட படைக்கருவிகளுடன் கொலைத் தொழிலைச் செய்யும் வீரர்கள் கூடியிருந்தனர். நம்மவர் அயலவர் என்று வேறுபாடு காணமுடியாத அளவுக்குக் கடுமையாகப் போர் நடைபெற்றது. அப்போர்க்களத்தில், உன் கணவன், “உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் கூறி, உங்களுக்குள் யாருக்கெல்லாம் வாழ்நாள் முடியப் போகிறதோ அவர்கள் என்னோடு போரிட வாருங்கள்.” என்று கூறி, போரிட வந்தவர்களையெல்லாம் வென்று ஒரு பக்கம் நின்றான். பாம்பு உமிழ்ந்த மணியை (நாகரத்தினத்தை) எடுக்க எவரும் நெருங்காததைப்போல், வரிசையாக மாலையணிந்த மார்பையுடைய உன் கணவனை எவரும் நெருங்கவில்லை.

பாடலின் பின்னணி:-

ஒருகால், ஓரூரில் கடும்போர் நிகழ்ந்தது. தம்மவர் என்றும், அயலார் என்றும் வேறுபாடு அறியாமல் வீரர்கள் போர் செய்தனர். அப்போரில், தானைத் தலைவன் ஒருவன் மிகுந்த வீரத்தோடு போர் செய்தான். அத்தலைவன், பகைவர்களை நோக்கி, “உங்கள் அரசனின் பெருமையையும் உங்கள் புகழையும் சொல்லிக்கொண்டு வந்து என்னோடு போரிடுங்கள்” என்று கூறி எதிர்த்து வந்தவர்களையெல்லாம் வென்றான். பின்னர், பகைவர்களைப் பார்த்து, “ உங்களில் யாருக்கு வாழ்நாட்களின் எல்லை முடிந்ததோ அவர்கள் என்னோடு போரிட வருக.” என்று பகைவர்களை போருக்கு அழைத்து ஒரு பக்கம் நின்றான். அவனை நெருங்குவதற்கு பகைவர் அஞ்சினர். இந்தக் காட்சியைக் கண்ட புலவர் பெருந்தலைச் சாத்தனார், அத்தலைவனின் மனைவியிடம் அதைக் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

இங்கு வெண்குடை என்று குறிப்பிடப்பட்டது அரசனின் வெண்கொற்றக்குடையாகும். திங்களை அரசனின் வெண்கொற்றக்குடைக்கு ஒப்பிட்டதால், அரசனின் குடை திங்ககளைவிடச் சிறப்பானதாகப் புலவர் கருதுவதாகத் தெரிகிறது.

உயிரை உடம்பினின்று நீக்குவது கூற்றின் (இயமனின்) செயல். அச்செயலைப் படைவீரர்களும் செய்வதால், அவர்களைக் “கூற்று வினை ஆடவர்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)

Tag cloud

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

All site tags