புறநானூறு - 293 (பூவிலைப் பெண்டு!)

புறநானூறு - 293 (பூவிலைப் பெண்டு!)

புறநானூறு, 293. (பூவிலைப் பெண்டு!)
பாடியவர்: நொச்சிநியமங்கிழார்.
பாடப்பட்டோன்: யாருமில்லை.
திணை: காஞ்சி.
துறை: பூக்கோள் காஞ்சி.
===========================================

நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
எம்மினும் பேர்எழில் இழந்து வினைஎனப்
பிறர்மனை புகுவள் கொல்லோ?
அளியள் தானே பூவிலைப் பெண்டே!

அருஞ்சொற்பொருள்:-

நிறப்படை = குத்துக்கோல் (அங்குசம்)
ஒல்கா = தளராத
குறும்பு = அரண்
குறும்பர் = அரணுக்குப் புறத்தே நின்று போர் செய்யும் பகைவர்
ஏவல் = கட்டளை
தண்ணுமை = ஒருவகைப் பறை
இரங்கல் = ஒலித்தல்
எழில் = தோற்றப் பொலிவு
வினை = போர்
அளியள் = இரங்கத் தக்கவள்

இதன் பொருள்:-

குத்துக்கோலுக்கும் அடங்காத யானையின் மேலே இருந்து தண்ணுமை என்னும் பறையை அறைவோன், அரணுக்கு வெளியே இருந்து போர் செய்யும் பகைவரை எதிர்த்துப் போரிடுவதற்கு வருமாறு, போருக்கு அஞ்சி நாணி இருக்கும் ஆண்களுக்கு கட்டளையிடும் பறையின் முழக்கம் கேட்கிறது. ஆகவே, இங்குள்ள ஆண்கள் அனைவரும் போருக்குப் போகப்போகிறார்கள். இனி இங்குள்ள என்னைப் போன்ற மறக்குலப் பெண்கள் பூச் சூட மாட்டார்கள். இந்தப் பூ விற்கும் பெண், எங்களைவிட அதிகமாகத் தோற்றப் பொலிவிழந்து காணப்படுகிறாள். அவள் பூவை விற்பதற்கு, போருக்குப் போகாதவர்கள் இருக்கும் வீடுகளுக்குப் போவாள் போலும்; அவள் இரங்கத் தக்கவள்.

பாடலின் பின்னணி:-

ஓரூரில் இருந்த அரசனின் அரண்களைப் பகை அரசன் ஒருவன் முற்றுகையிட்டான். அதனால் போர் தொடங்கியது. வீரர்கள் அனைவரையும் போருக்கு வருமாறு பறை சாற்றப்படுகிறது. வீரர்கள் பலரும் ஏற்கனவே போருக்குச் சென்றுவிட்டார்கள். போருக்கு அஞ்சி இன்னும் தங்கள் வீடுகளிலேயே இருக்கும் ஆண்கள் வெட்கப்படும்படி அந்தப் பறை ஒலிக்கிறது. வீரர்கள் போருக்குச் சென்றால், அவர்களின் மனைவியர் அவர்களைப் பிரிந்திருக்கும் நாட்களில் தங்கள் தலையில் பூ அணியாமல் இருப்பது மரபு. போருக்குச் சென்ற வீரர்களின் வீடுகள் உள்ள இடத்தில் பெண் ஒருத்தி பூ விற்க வந்தாள். அங்குள்ள மறக்குலப் பெண் ஒருத்தி, ”இங்கு யாரும் பூச் சூட மாட்டர்களே. இவளிடத்தில் பூ வாங்குவார் எவரும் இல்லையே; இவள் நிலைமை மிகவும் இரங்கத்தக்கது.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

சிறப்புக் குறிப்பு:-

தன் கணவன் போருக்குச் சென்றால் அவன் திரும்பி வரும்வரை மனைவி தன் தலையில் பூச்சூடாமல் இருப்பது மரபு என்பது இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.

பார்ப்பனர், நோய்வாய்ப்பட்டோர், ஆண்பிள்ளைகள் இல்லாதோர் ஆகிய ஒரு சில ஆண்கள் மட்டுமே போருக்குச் செல்லமாட்டார்கள். ஆனால், அத்தகையவர் வெகு சிலரே. ஆகவே, பூ விற்கும் பெண் அத்தகையவர்கள் இருக்குமிடத்திற்குச் சென்றுதான் பூ விற்க வேண்டும். அதனால்தான், அவள் மிகவும் இரங்கத் தக்கவள் என்று மறக்குலப் பெண் கருதுவதாகப் புலவர் குறிப்பிடுகிறார்.

Ratings

0/5 (0 votes)
0/5 (0 votes)

Tag cloud

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

All site tags